murasoli thalayangam
‘தமிழ்நாடு’ என்ற பெயர்.. தி.மு.க ஆற்றிய பங்கு.. வரலாற்றை திரிப்பதா? : முரசொலி தலையங்கம் சீற்றம்!
முரசொலி தலையங்கம்
14.11.2027
தி.மு.க.வும் தமிழ்நாடும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாக ‘தீக்கதிர்’ நாளிதழ் (12.11.2026) வெளியிட்ட செய்தியானது வரலாறு அறியாத, அல்லது வரலாற்றை மறைக்கும் பேச்சாக இருக்கிறது.
‘‘தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் அதற்கு முன்பு திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ அக்கோரிக்கையை முன்வைக்கவில்லை’’ என்று போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்துள்ளார் பெ.சண்முகம்.
1938ஆம் ஆண்டே, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கியவர் தந்தை பெரியார். ‘தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதைப் பார்க்காமல் நான் ஏன் உயிர் வாழ வேண்டும்’ என்று 1955ஆம் ஆண்டே கேட்டவர் அவர். ம.பொ.சி. இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் தமிழ்நாடு எல்லையை வரையறுத்தவர் பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தர். அவர் எழுத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டவர் தந்தை பெரியார்.
‘திராவிட நாடு’ கேட்டுப் போராடிய காலத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்பதற்காகப் போராடியது தி.மு.க. தமிழகத்தின் வடக்கு எல்லை, தெற்கு எல்லை ஆகியவற்றைக் காக்கும் போராட்டங்களில் கழகம் முன்னின்று செயல்பட்டது.
சித்தூர் மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. இயக்கம் நடத்தியபோது அதனை ஆதரித்தவர் பேரறிஞர் அண்ணா. 144 தடை உத்தரவை மீறி கழகத் தொண்டர்கள் ஏ.எல்.சி. கிருஷ்ணசாமி தலைமையில் மறியல் செய்து கைதானார்கள். இதைத் தொடர்ந்து தினந்தோறும் ரயிலை மறிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தி.மு.க.வினர் இதில் பங்கெடுத்தனர். அப்போதுதான், போராட்டக்காரர்களை ‘முட்டாள்கள்’ என்றார் அன்றையப் பிரதமர் நேரு.
1953ஆம் ஆண்டு தி.மு.க. நடத்திய மும்முனைப் போராட்டத்தில் ஒன்றுதான், சித்தூர் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நேருவைக் கண்டித்து ரயில் மறியல் நடத்துவது என்பதாகும். இதில் 5 ஆயிரம் பேர் கைதாகி சிறை வைக்கப்பட்டார்கள்.
தென் எல்லையைக் காக்கும் போராட்டத்தில் பேரறிஞர் அண்ணாவே நேரில் கலந்து கொண்டார். நாகர்கோவில், செங்கோட்டை ஆகிய ஊர்களில் மறியல் போராட்டம் தி.மு.க. சார்பில் 6.8.1954 அன்று நடந்தது. “தமிழ் வாழ்க, நாஞ்சில் நாடு தமிழருக்கே, மத்திய அரசே நியாயம் வழங்கு!” என்று இவர்கள் முழக்கமிட்டனர். குழித்துறையில் தி.மு.க. செயலாளர் ஜான் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு நடந்தது.
“மொழி வாரி சீரமைப்புக் குழு அறிக்கையில் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படவில்லை” என்று (1955) அறிக்கை அளித்தது தி.மு.க. ‘’தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியை ‘சென்னை மாநிலம்’ என்று அழைப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள், தமிழ்நாடு என்றுதான் அழைக்கப்பட வேண்டும்” என்று அந்தக் குழுவிடம் அறிக்கை அளித்தது தி.மு.க.
29.1.1956 அன்று சிதம்பரத்தில் கூடிய பொதுக்குழுவில், மொழிவாரி மாகாணப் பிரிவினையில் தமிழருக்கு ஏற்பட்ட அநீதி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 20 நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தத்தில் தி.மு.க. பங்கெடுத்தது. 6.2.1956 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அண்ணா பங்கெடுத்தார். சென்னை ராஜ்யத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும் தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது.
1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட்டது. 4.11.1956 அன்று கோகலே அரங்கில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூடி, இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை விவரித்தன. கண்டித்து தீர்மானம் போட்டார்கள். நவம்பர் 11 ஆம் நாளை ‘தமிழக அமைப்பு நாள்’ என நாடு முழுவதும் கொண்டாட அண்ணா அறிவிப்பு செய்தார்.
1956 மே மாதம் திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில், ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்படாததைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாடு’ என்ற தனித்தலைப்பில் தி.மு.க. நிலைப்பாடு சொல்லப்பட்டது. அந்த ஆண்டுதான் சட்டமன்றத்தில் நுழைந்தது தி.மு.க. அங்கும் ‘தமிழ்நாட்டுக்காக’ குரல் கொடுத்தது.
“தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக சங்கரலிங்கனாரின் பிணம் வீழ்ந்தது. உங்களுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு பிணம் வீதம் வேண்டுமென்று சொன்னால் தயாராக இருக்கிறோம். ஐந்து பிணங்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறோம். எழுத்துக்கு எத்தனை பிணங்கள் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு என்று இந்த நாட்டுக்குப் பெயரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்....” என்ற தலைவர் கலைஞரின் முழக்கம் சட்டமன்றத்தில் ஒலித்த ஆண்டு 1957 ஆகும்.
“பெயரை மாற்றினால் உலகத்துக்குத் தெரியாது என்கிறார்கள். ‘தமிழ்நாடு’ என்றால் உலகத்துக்குத் தெரியாது என்கிறார்கள். மூவேந்தர் ஆண்டது உலகத்துக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் பெயரால்தான் அவர்கள் ஆண்டார்கள்?” என்று சட்ட மன்றத்தில் கேட்டார் ஏ.கோவிந்தசாமி.
‘’நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் என்ன கேடு வந்துவிடும் என்று புரியவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு இதைவிட அநீதி இருக்க முடியாது” என்று கேட்டவர் ப.உ.சண்முகம்.
1962 – சூலை 27 : ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட தி.மு.க. உறுப்பினர் கே.ஏ.மதியழகன் சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
1964 – சூலை 23 : ‘தமிழ்நாடு’ என்று பெயரிடும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் இராம.அரங்கண்ணல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இறுதியாக அந்த இலக்கை அடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டி இருந்தது. பேரறிஞர் அண்ணா முதல்வராக வேண்டி இருந்தது. 18.7.1967 அன்று தமிழக வரலாற்றில் பொன்னான நாள். தாய்த் தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று தனயன் பெயர் சூட்டிய நாள்!
Also Read
-
இது ரியல் ஆட்சி அல்ல… ரீல்ஸ் ஆட்சி… த.வெ.க அரசுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி மதிப்பெண்!
-
“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!
-
“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!
-
“பில் வரவில்லை - மெயில் வரவில்லை என்று கல்வியை முடக்காதீர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
விலைவாசி உயர்வில் முதலிடம்... மக்களை காக்கத் தவறிய த.வெ.க அரசு!