murasoli thalayangam

பொதுமக்களைக் காக்க வேண்டிய போலீசாரும் அச்சத்தில் வாழ்கிறார்கள்! : முரசொலி தலையங்கம் கண்டனம்!

போலீசுக்கே பாதுகாப்பு இல்லை!

விஜய் ஆட்சியில் பொதுமக்கள் தான் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்றால் பொதுமக்களைக் காக்க வேண்டிய போலீசாரும் அச்சத்தில் வாழ்கிறார்கள். போலீசாரையே கொலை செய்வதும், அவர்களையே அடிப்பதும் நாட்டில் அதிகமாகி இருக்கிறது.

தீபாவளி அன்று 15க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அதில் அச்சம் தருவது தேனியில் நடந்த படுகொலை ஆகும். தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக இருப்பவர் செந்தில்குமார். இவர், மாற்றுப் பணியாக தேனி டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

சமதர்மபுரம் முக்கிய சாலையில் மது போதையில் பட்டாசு வெடித்து, அதை ரீல்ஸ் ஆக எடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்- பட்டதால், அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார் செந்தில்குமார்.

அவர்கள் இவர் பேச்சைக் கேட்கவில்லை. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பிவிட்டு, அங்கு நடப்பதை இவர் போனில் பதிவு செய்து கொண்டு இருந்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மதுபோதை ஆட்கள் இவரை அடிக்கத் தொடங்கினார்கள். சரமாரியாகத் தாக்கினார்கள்.

அருகில் இருந்த பொதுமக்கள் இதைப் பார்த்து செந்தில் குமாரை அவர்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். சில நிமிடங்களில் செந்தில்குமார் இறந்து போனார். செந்தில்குமார் அப்போது பணியில் இல்லை என்று காவல்துறையின் அறிக்கை சொல்கிறது.

பணியில் இருந்தார் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அறிக்கை சொல்கிறது. நிர்வாகம் எவ்வளவு தள்ளாடுகிறது என்று இதன் மூலம் தெரியவில்லையா?

தேனியில் போலீசுகாரர் செந்தில்குமார் கொல்லப்பட்ட அன்று சென்னையிலும் அதேபோல ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பரங்கிமலையில் இரவு ரோந்துப் பணியில் இருந்தார்கள் காவலர்கள். போதையில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது காவலர் ராஜாவை போதை ஆசாமிகள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலும் இதே போல் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். காவலரின் சட்டையைப் பிடித்து அடிக்க வந்த வீடியோக்கள் இணைய தளத்தில் பரவி வருகிறது. கடந்த 10 ஆம் தேதியன்று சேலத்தில் என்ன நடந்திருக்கிறது என்றால்.. தலைமைக் காவலரை கத்தியால் குத்த முயன்றுள்ளார் ஒருவர்.

ஓமலூர் அருகே தாதியம்பட்டி டாஸ்மாக் கடையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்றுள்ளார் தலைமைக் காவலர் சங்கர். ஆத்திரமடைந்த பிரபாகரன் என்பவர், கத்தியை எடுத்து தலைமைக் காவலரை மிரட்டி குத்த வந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் பிரபாகரனை பிடித்து தலைமைக் காவலரை காப்பாற்றி இருக்கிறார்கள்.

போதைக் கலாச்சாரம், விஜய் ஆட்சியில் போலீசையே போட்டுத் தள்ளும் அளவுக்கு முத்திக் கொண்டு வருவதைத் தான் இது காட்டுகிறது. இவை ஏதோ தீபாவளியில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது என நினைக்க வேண்டாம்.

விஜய் ஆட்சிக்கு வந்தது முதல் கிரிமினல்களின் அட்டூழியம் அதிகம் ஆகி வருகிறது. இதனால் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல் துறையே பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று குடியாத்தம் தலைமைக் காவலர் தாமரைச் செல்வி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 19 தேதி சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்த 58 வயதான ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜ் தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது மனைவியும், தேவா என்பவரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொன்றது பின்னர் தெரிய வந்தது. செப்டம்பர் 28 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் மோதலைத் தடுக்க முயன்றபோது பெண் தலைமைக் காவலர் கண்ணகி தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

அக்டோபர் 31 ஆம் தேதி அரியலூரில் ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பொதுமடத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்தவர்களைத் தட்டிக்கேட்டபோது காவலரை சிலர் தாக்கினர். அதில் அவர் உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சி தான் தேனியில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது. பெண்களைக் காக்க சிங்கப் பெண் படை அமைத்த விஜய் ஆட்சியில் பெண் காவலர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?

சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் கூட்டுப் பாலியல் துன்புறுத்த- லுக்கு ஆளான சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் பணியாளருக்கு, வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தார் காவல் ஆய்வாளர்.

திருநெல்வேலியில் பெண் தலைமைக் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் ஆய்வாளர் சுவர்ணவள்ளி, கும்பகோணத்தில் தலைமைக் காவலர் கவிதா, கண்ணமங்கலத்தில் எஸ்.ஐ.கவிதா ஆகியோர் மீது தாக்குதல் நடந்துள்ளது. சிங்கப் பெண்களே பீதியிலும் பயத்திலும் இருக்கிறார்கள் விஜய் ஆட்சியில்.

விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 4 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு ஊர்க்காவல் படை வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார். 5 பெண் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். 3 பெண் காவலர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் விஜய் ஆட்சி. அவர் கட்டுப்பாட்டில் தான் காவல் துறை இருக்கிறது. பொதுமக்களை அல்ல, காவல் துறையையே காக்க துப்பு இல்லாதவர் தான் இன்றைய முதலமைச்சர் விஜய்.

ஐந்து மாதம் கழித்து நேற்று சட்டம் ஒழுங்கை ஆய்வு செய்தாராம் முதலமைச்சர். அவர் தினந்தோறும் ஆய்வு நடத்தினாலும் இப்படித்தான் இருக்கப் போகிறது தமிழ்நாடு.

Also Read: தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!