murasoli thalayangam

“அதிபர் டிரம்பின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்” : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (07-11-2026)

உடையும் டிரம்ப் பிம்பம்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் அதிபர் டிரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவு கொடுத்துள்ளது. ஆளும் குடியரசுக் கட்சியானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் ரட்சகராகக் கொண்டாடப்பட்ட டிரம்ப் பெருந்தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் (கீழவை) உள்ள 435 இடங்களுக்கும், செனட்டில்(மேலவை) உள்ள 35 இடங்களுக்கும், 36 மாகாண ஆளுநர் பதவிக்கும் இடைக்காலத் தேர்தல் கடந்த 3ஆம் தேதியன்று நடைபெற்றது. 21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். இந்தத் தேர்தல் முடிவானது அதிபர் டிரம்பின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக அமைந்துள்ளது.

டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. கீழவையில் 253 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி உள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சி 157 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. இதன்படி கீழவையானது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.

செனட் அவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி 20 இடங்களையும், குடியரசுக் கட்சி 13 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இந்த அவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100. பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 50. ஜனநாயகக் கட்சி 54 இடங்களை இப்போது வைத்துள்ளது. குடியரசுக் கட்சிக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர்.

குடியரசுக் கட்சியின் கோட்டை என்று சொல்லப்பட்ட மாகாணங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தேர்தலில் மிக முக்கியமான சிறப்பு, இந்திய அமெரிக்கர்கள் கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்கள். கீழவை, மேலவையிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆளுநராகவும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

பல முக்கியமான திருப்புமுனைகள் இந்தத் தேர்தலில் நடந்துள்ளன. அமெரிக்காவின் வரலாற்றில் கருப்பினத்தைச் சேர்ந்த இருவர் முதன்முதலாக ஆளுநராக ஆகி இருக்கிறார்கள். ஜார்ஜியா, நிவேடா மாகாணங்கள் அந்தப் பெருமையை அடைந்துள்ளன. தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் செனட் அவைக்கு முதன்முதலாகத் தேர்வாகி இருக்கிறார். முதன்முதலாக இசுலாமியர் ஒருவர் செனட் அவைக்குத் தேர்வாகி இருக்கிறார்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பால் ஆதரிக்கப்பட்ட 5 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். அதாவது 5 சோசலிஸ்டுகள் வெற்றி பெற்றுள்ளார்கள். இதன் மூலமாக சோசலிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இடது சாரிச் சிந்தனையின் வளர்ச்சியாக இதைக் கணிக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் இரு அவைகளும் ஜனநாயக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் பதவியைப் பறிக்கவில்லை. அவர் பதவி விலகத் தேவையில்லை. ஆனாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரால் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அமெரிக்க நாடாளு மன்றம் தலையாட்டி ஒப்புதலைக் கொடுக்காது. ஜனநாயக் கட்சியின் ஆதரவின்றி குடியரசுக் கட்சியின் அதிபரான டிரம்பால் செயல்பட முடியாது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சட்டமியற்றும் அதிகாரமும், நிதிகளை விடுவிக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. எனவே நினைத்த மாதிரி டிரம்பால் செயல்பட முடியாது.

போர் பூச்சாண்டியைக் காட்டியே மக்களை ஏமாற்றி விடலாம் என்று டிரம்ப் நினைத்தார். அதை மக்கள் ஏற்கவில்லை. போர் சாகசங்கள் மூலமாக மக்களை மயக்கி வைத்திருக்கலாம் என்று நினைத்தார் டிரம்ப். அதை மக்கள் நிராகரித்து விட்டார்கள். சொந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நாடுகளின் பிரச்சினையில் அதிகம் மூக்கை நுழைத்ததற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பு தான் இந்த முடிவுகள்.

இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த போரானது உலகப் பொருளாதாரத்தை மட்டுமல்ல; அமெரிக்காவையும் அதிகமாகப் பாதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் மீது அதிகப்படியான வரிகளை டிரம்ப் விதித்தார். அது தனக்குத் தானே வைத்துக் கொண்ட வேட்டு ஆகும். ‘அமெரிக்கர்களுக்கே எல்லாம்’ என்பதும் வேலைக்கு ஆகவில்லை. அது மக்களை ஏமாற்றும் தந்திரமாக மட்டுமே இருந்துள்ளது. எரிபொருள் விலை அதிகம் ஆகி உள்ளது. உணவுப் பொருட்கள் விலையும் அதிகம் ஆகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்கள் தங்களது கோபத்தை இந்த இடைக்காலத் தேர்தலில் காட்டி விட்டார்கள்.

‘’மக்கள் நலனுக்குச் செலவு செய்யப் பணம் இல்லை என்று அமெரிக்க அரசு சொன்ன போதுதான் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடத்தை எலான் மஸ்க் பெற்றார். அரசியல்வாதிகளை உலகக் கோடீஸ்வரர்கள் விலைக்கு வாங்குவதை மக்கள் விரும்பவில்லை. தங்களின் பணம் பள்ளிகளைக் கட்டவும், சாலைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படாமல் போர்க் குற்றங்களுக்கும் இனப் படுகொலை களுக்கும் செலவு செய்யப்படுவதை எதிர்த்து அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கின்றனர்” என்று நியூயார்க் மேயர் சோரன் மம்தானி சொன்ன சொல் முழுக்க முழுக்க உண்மை.

எந்த டிரம்ப்பை கொண்டாட்டத்துடன் கொண்டு வந்தார்களோ, அவரையே அமெரிக்க மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களுக்கான எந்த திட்டமிடுதலும் இல்லாமல் போலியாகக் கட்டமைக்கப்பட்ட டிரம்ப் பிம்பம் நொறுங்கி இருக்கிறது. வெற்று விளம்பரங்கள் மூலமாக ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பங்களை, மக்களே விரைந்து நிராகரிப்பார்கள் என்பதைத்தான் டிரம்பின் தோல்வி காட்டுகிறது.

Also Read: கிழியும் முகத்திரை... போதை வேண்டும்? அரசியல் வேண்டாமா.. - விஜயை விளாசிய முரசொலி!