murasoli thalayangam

ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. ஆவினை அழிக்கத் திட்டமிடுகிறதா தவெக அரசு! - முரசொலி தலையங்கம் கேள்வி!

‘ஆவினை’ அழிக்கத் திட்டமா?

முரசொலி தலையங்கம் (அக்.30)

த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போல பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. தினந்தோறும் காலையில் கடைகளின் வாசலில் பாலுக்காகக் காத்திருந்தார்கள் மக்கள். ஆவின் பால் கிடைக்கவில்லை என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. நான்கு மாதங்களாக இதே நிலைமைதான். ‘ஆவின்’ பால் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆவின் பால் பொருட்கள் அனைத்தின் விலையையும் அதிகரித்து விட்டார்கள்.

நெய், வெண்ணெய், தயிர், மோர், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 பால் பொருட்களின் விலைகளை அதிகமாக உயர்த்தி விட்டார்கள்.

ஒரு லிட்டர் நெய் 80 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 770 ஆகி உள்ளது. 10 கிராம் வெண்ணெய் 10 ரூபாய் அதிகம் ஆகி ரூபாய் 70 என ஆகி உள்ளது. ஒரு கிலோ பிரீமியம் தயிர் 10 ரூபாய் அதிகம் ஆக்கப்பட்டு 130 ரூபாய் ஆக ஆகி உள்ளது. இதே போல் தயிர், மோர், லஸ்ஸி, பிஸ்கட், குலோப்ஜாம், ரசகுல்லா, கோவா, மில்க் கேக், மைசூர் பாகு, நட்ஸ் அவ்லா, நெய் பாதுஷா, முந்திரி பிஸ்தா, முந்திரி கத்லி, பால் பேடா, மில்க் ஷேக் ஆகிய அனைத்தும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய விலையை விட 5 முதல் 40 விழுக்காடு வரை விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்கள் விலை ஏற்றம் என்பது பொதுமக்களை கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. தீபாவளி போன்ற திருவிழா நிகழ்ச்சிகள் வரும் காலக்கட்டத்தில் இத்தகைய அநியாய விலை உயர்வு பொதுமக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. தீபாவளித் திருவிழாவுக்காகத்தான் பொதுமக்கள் அதிகளவு இனிப்பு வகைகளை வாங்குவார்கள். அந்த நேரம் பார்த்து அரசாங்கம் விலைகளை உயர்த்தி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

‘தினத்தந்தி’ நாளிதழுக்கு மக்கள் அளித்த பேட்டியில், ‘பண்டிகை நாட்கள் நெருங்கும் நேரத்தில் எதற்காக விலையை உயர்த்த வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்கள். ‘அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நேரத்தில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்துவது நியாயமா?’ என்று கேட்டுள்ளார்கள். ‘பண்டிகைக் காலத்தில் விலைத் தள்ளுபடி அறிவிக்காமல் விலையை உயர்த்தியது என்ன நியாயம்?’ என்று கேட்டுள்ளார்கள். ‘தனியாருக்கு இணையாக ஆவின் ஏன் உயர்த்த வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். ‘குடும்ப பட்ஜெட்டை இது பாதிக்கும்’ என்பது அனைத்துப் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இந்த விலை உயர்வை நியாயப்படுத்தி ‘ஆவின்’ நிறுவனத்தை அறிக்கை வெளியிட வைத்துள்ளார்கள். இந்தத் துறையின் அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டியதுதானே? எல்லாவற்றுக்கும் பேசும் அமைச்சர் நிர்மல்குமார் சொல்ல வேண்டியதுதானே? ‘ஆவின்’ நிறுவனத்தை எதற்காக பலிகடா ஆக்க வேண்டும்?

‘தற்போதைய சந்தைச் சூழல்’ என்கிறது அந்த அறிக்கை. த.வெ.க. அரசு வந்த பிறகு புதிதாக சந்தைச் சூழல் என்ன மாறியது? தனியார் பால் நிறுவனங்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய அளவில் நட்புச் சூழல் உருவாகி இருக்கிறது. இதுதான் ‘தற்போதைய சந்தைச் சூழல்’ ஆகும். இதனால்தான் ‘ஆவின்’ நிறுவனத்தையே சிதைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் அரசியல் கட்சிகளால் சொல்லப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங் களுக்காக ‘ஆவினை’ பலியிட்டு வருகிறது த.வெ.க. அரசு.

‘ஆவின்’ பொருட்களை வாங்காமல் பொதுமக்களை விரட்டும் தந்திரமாகவும் இதைச் சொல்ல முடியும்.

‘அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு ஆவின் பால் பொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்கிறது இந்த அறிக்கை. உற்பத்திச் செலவுகளை பொதுமக்களின் தலையில் கட்டுவது அரசு நிறுவனத்தின் நோக்கமாக இருக்க முடியுமா?

அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து விட்ட சூழலில் பால் பொருட்களின் விலையையும் சேர்த்து அதிகரிப்பது ‘சேடிஸ்ட்’ மனப்பான்மை அல்லவா?

ஒரு பக்கம் பால் தட்டுப்பாடு. இதனை த.வெ.க. அரசு சரிசெய்யவில்லை. ‘ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் மீண்டும் சில பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்குத் திரும்பி உள்ளார்கள். இதனால் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது’ என்று பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி சொல்வது உண்மையாக இருந்தால் பால் தட்டுப்பாடு ஏன் ஏற்படுகிறது? பால் உற்பத்தியாளர்களை அரசின் பக்கம் முழுமையாகத் திருப்ப ஏன் முடியவில்லை?

ஒரு பக்கம் பால் தட்டுப்பாடு என்றால் இன்னொரு பக்கம் பால் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு. இதுதான் ‘ஆவின்’ நிர்வாகமா? ஐந்து மாதத்துக்கு முன்பு வரை ஒழுங்காக இருந்த பால் விற்பனை, த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் தள்ளாடுவதற்கு என்ன காரணம்? அரசின் கையாலாகாத் தனமா? அல்லது திட்டமிட்டு ‘ஆவின்’ நிறுவனத்தை சிதைக்கும் முயற்சியா?

Also Read: வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் : “ஜோசியர் சொல்லி கைதிகளை தப்ப விடுகிறார்களா?” - முரசொலி தாக்கு!