murasoli thalayangam
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
எதைக் கொண்டு வருகிறார்களோ அதையே அவர்கள் வாபஸ் பெற்றுக் கொள்வதால், இந்த அரசை 'தமிழக வாபஸ் கழக அரசு' என்று சொல்லலாம்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மிகமிக மோசமானது சட்டம் ஒழுங்கு தான். கிரிமினல்கள் ராஜ்யம் என்று சொல்லத்தக்க வகையில் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. இது பற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கிறது த.வெ.க. ஆட்சி. அதனால் தான் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று அரசாணை போடுகிறார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது மக்களுக்குத் தரப்பட்டுள்ள மாபெரும் அரசியல் உரிமை ஆகும். அதைப் பறிக்கும் வகையில் ஒரு அரசாணையை விஜய் அரசு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று பிறப்பித் துள்ளது. 'சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்படாது' என்பதுதான் அந்த அரசாணை ஆகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4) இன் கீழ் மாநில அரசுக்கு இத்தகைய சிறப்பு அதிகாரம் இருப்பதாக விஜய் அரசு சொல்கிறது. இது அப்பட்டமாகவே குற்றங்களை மறைக்கும் முயற்சி ஆகும். போலீசைக் காப்பாற்றும் முயற்சியாகும். 'போலீஸ் ராஜ்யம்' நடத்த நினைக்கிறார் முதலமைச்சர் விஜய்,
மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், கைதுகள்குறித்து கேள்வி கேட்க முடியாது. போலீஸ் சித்திரவதைகள், விசாரணைக் கைதிகளின் மரணங்கள் குறித்து சந்தேகக் கேள்விகளைக் கேட்க முடியாது. துப்பாக்கிச் சூடுகள் நடந்தால் அதன் காரணத்தையோ, காரணம் ஆனவர்களையோ தெரிந்து கொள்ள முடியாது.
அரசியல் காரணங்களை அறிய முடியாது. சாதி மோதல்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் என்றால் அது குறித்தும் தெரிந்து கொள்ள முடியாது. பொதுவாகவே போராட்டங்கள்என்றால் அது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கானகோரிக்கைகளைக் கையாள முடியாது. இவை குறித்த எந்த தகவலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.
‘போலீஸ் ராஜ்யம் நடத்த நினைக்கிறாரா விஜய்?' என்று பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்து விட்டோம் என்று அறிவித்துள்ளது த.வெ.க. அரசு.
பெரும்பான்மை பலம் இல்லாமல் அடுத்தவர் தயவால் ஆட்சியை ஒட்டிக் கொண்டிருக்கும் போதே இத்தகைய சர்வாதிகார, அராஜக அரசாணைகளை போடுகிறார் விஜய் என்றால், இவர் எல்லாம் பெரும்பான்மை பெற்றால் அந்த ஆட்சி எத்தகைய ஆட்சியாக இருக்கும் என்பதற்கு இது உதாரணம் ஆகும்.
ஒரு அரசாணையை வெளியிடும் போது ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும். அத்தகைய சிந்தனைத் திறனற்ற அரசாக த.வெ.க. அரசு இருக்கிறது. தான் நினைப்பதை அரசாணையாக வெளியிடுகிறார்கள். மக்கள் எதிர்ப்பு வந்ததும் வாபஸ் பெறுவார்கள். இது விஜய் ஆட்சிக்கு வழக்கமானதுதான்.
தான் முதலமைச்சர் ஆனதும், விஜய் செய்த முதல் காரியம் தனது ஆஸ்தான ஜோசியருக்கு அரசுப் பதவியை வழங்கினார். எதிர்ப்பு கிளம்பியதும் அதனை வாபஸ் பெற்றார்.
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தரப்போவதாக டெண்டர் விட்டார். எதிர்ப்பு கிளம்பியதும் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.
அரசியல் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கத் தடை என்று ஒரு அரசாணை வந்தது. எதிர்ப்பு கிளம்பியதும் வாபஸ் என்று அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் இடதுசாரிகள் குறித்த தகவல்களைத் திரட்ட அரசு உத்தரவு போட்டது. எதிர்ப்பு வந்ததும் அந்த உத்தரவு ரத்து ஆனது.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான அடிப்படை வசதிகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியில் இருந்து செய்ய வேண்டும் என்று அரசாணை போட்டார்கள். எதிர்ப்புக்கு பிறகு வாபஸ் பெற்றார்கள்.
சென்னையில் சொத்து வரி திடீரென்று ஒருநாள் அதிகம் ஆனது. மக்கள் எதிர்ப்பு கிளம்பியதும் வாபஸ் என்று அறிவித்தார்கள்.
செய்யாறு சிப்காட் தொழிற்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நிலைப்பாட்டிலும் தடுமாறினார்கள்.
இந்த வரிசையில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவலைப் பெற முடியாது என்ற அரசாணையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அப்படியானால் இந்த அரசு வாபஸ் அரசுதானே? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஐ.ஏ.எஸ்.களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள். ஆட்சிச் சக்கரம் அதனதன்
விருப்பத்துக்கு ஓடுகிறது என்பதற்கு இவை எல்லாம்தான் ஆதாரங்கள்.
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையப் போகிறது என்கிறது ஒரு அரசாணை. பிரச்சினை பெரிதாகி மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததும், 'முதலமைச்சர் இன்னும் இது பற்றி முடிவெடுக்க வில்லை' என்று 'பொய் துறை' அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லி இருக்கிறார். 'பட்டினப்பாக்கத்தில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் 25.55 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம், பேரவை வளாகம் அமையும்' என்று செப்டம்பர் 3 ஆம் தேதியன்று அரசாணை போட்டுள்ளார்கள். முதலமைச்சர் அனுமதி இல்லாமல் அரசாணை போட முடியுமா?
முதலமைச்சருக்கு சொல்லாமல் அரசாணை போட்டவர் யார்? இது ஆட்சியல்ல, வெறும் காட்சி தான் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை. அரசாணைகளை வெறும் காகிதங்களாக ஆக்கிவிட்டார்கள்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!