murasoli thalayangam
‘தவெக அமைச்சர்களின் அறியாமை.. ஆணவம்.. கேலிக்கூத்தாகும் சட்டப்பேரவை’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
முரசொலி தலையங்கம் (02.09.2026)
அறியாமையா? ஆணவமா?
ஆளும் கட்சி அமைச்சர்கள் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கு வதைத்தான் பேரவைத் தலைவர் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். இதுவரை வரலாறு காணாத மாற்றம் இது!
‘சட்டப்பேரவையில் ஆதாரமின்றி பேசக்கூடாது' என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோரை மீண்டும் மீண்டும் பேரவைத் தலைவர் கண்டித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் அடங்கு வதாகத் தெரியவில்லை. தாங்கள் பேசுவதை 'ரீல்ஸ்' போட்டு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் பேசும் பேச்சுகள் அருவருப்பாக உள்ளன. அவர்களது பேச்சில் ஆணவமும் வெளிப்படுகிறது. அவர்களது அறியாமையும் வெளிப்படுகிறது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துறை ரீதியான கேள்வி களை எழுப்புகின்றனர். அதற்கு, துறைரீதியான பதிலைச் சொல்ல வேண்டும். மாறாக அதனை அரசியல் ரீதியாக மாற்றி, மாட்டிக் கொள்கிறார்கள் அமைச்சர்கள்.
‘டாஸ்மாக்’ வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அது குறித்து பேசினார். இதற்கு, தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேரவைத் தலைவர் தடுத்தும் தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். இதையடுத்து, பேரவைத் தலைவரே அவர்களைக் கண்டித்தார்.
“நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்தும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தும் அமைச்சர்கள் பேசக்கூடாது” என பேரவைத் தலைவர் கண்டித்தார். “நேரலை செல்வதால் மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்கள் ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு கண்டிப்புடன் தெரிவித்தார் பேரவைத் தலைவர்.
தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல ஆதவ் அர்ஜூனா காட்டிக் கொள்வதற்காக அனைத்துக்கும் எழுந்து, பேசி, 'தனக்கு எதுவும் தெரியாது’ என்பதை தினந்தோறும் அவைக்குக் காட்டி அவமானப்பட்டு வருகிறார்.
‘ஆதவ் அர்ஜூனா பேசினாலே பிரச்சினைதான் வருகிறது. அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என்று உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சொன்னார். இதை விட ஒருவருக்கு புத்திமதி சொல்லி இருக்க முடியாது. ஒருநாள் அவைக்கு ஆதவ் அர்ஜூனா வரவில்லை. 'இன்று அவை அமைதியாக இருக்கிறது. இன்றாவது ஒன்றரை மணிக்கு முடித்து விடுங்கள்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் சொன்னார். இதன் பிறகாவது ஆதவ் அர்ஜூனாவுக்கு சொரணை வந்ததா என்றால் இல்லை. 'திருந்தாத ஜென்மம்’ என்பதையே இவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்.
த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மாண்புகள், நடவடிக்கைகள் தெரியவில்லை. புதிதாக அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவார்கள். பார்த்துப் பார்த்து, பயந்து பயந்து பேசுவார்கள். ஆனால் த.வெ.க. அமைச்சர்களோ தெருவில் பேசுவதைப் போல பேசுகிறார்கள்.
‘டாஸ்மாக்’ தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கின்றன. அதைப் பற்றி இவ்வளவு நேரம் அவையில் பேசலாமா என்பதுகூடத் தெரியவில்லை. 'பாட்டிலுக்கு பத்து ரூபா' என்ற பாட்டைப் பாடி, 41 பேரை உயிர்பலி வாங்கி விட்டு வந்தவர் தான் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் விஜய். ஆனால் இன்றைக்கு 20 ரூபாய், 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது த.வெ.க. ஆட்சியில். 'பத்து ரூபாயை ஊழியர்கள் வாங்குவது ஏன் தெரியுமா?' என்று கேட்டு அதை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் விக்னேஷ்.
'ஊழியர்களுக்கு சரியான ஊதியம் இல்லை, கடை பராமரிப்பு செலவுக்கு பணமில்லை, அதனால் தான் பத்து ரூபாய் வாங்குகிறார்கள்' என்று பேட்டியிலும் சொல்கிறார், பேரவையிலும் சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ். எந்தக் குற்றச்சாட்டை முன்பு வைத்தார்களோ, அதையே நாங்கள் செய்கிறோம் என்பதை ஒப்புக் கொள்வதாக இருக்கிறது அவரது பேச்சு.
ஒரு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜல்லிக்கட்டு போட்டியையே சமூகச்சீரழிவு என்கிறார். இன்னொரு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை கல்லூரி ஆக்குங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். ‘அரசு கல்லூரி கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது' என்றும் இவரே சொல்கிறார்.
'முதலமைச்சர் விஜய் முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. அதனால் ஸ்கிரீன் வையுங்கள்' என்று கோரிக்கை வைக்கிறார் த.வெ.க. உறுப்பினர். முதலமைச்சர் விஜய் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமானால் அவர் எதிர்க்கட்சி வரிசைக்கு தான் வர வேண்டும். 'பார்த்துக் கொண்டே இருக்கும்' தண்டனையை அனுபவிக்கலாம். இன்னும் சிலர் பாட்டோடு வந்துவிடுகிறார்கள். மக்களுக்குத் தேவை யானதை விட, ‘மீம்ஸுக்கு தேவையானது எது என இவர்களுக்குத் தெரிந்துள்ளது.
சட்டசபையில் என்ன பேச வேண்டும் என்பதை இவர்களுக்குச் சொல்லித்தர த.வெ.க.வில் யாருமில்லை. அவை முன்னவர் செங்கோட்டையன் இதை எல்லாம் கவனிக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆதவ் அர்ஜூனாவையும் நிர்மல் குமாரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவரே பல நேரங்களில் மாட்டிக் கொள்கிறார் என்பதே உண்மை.
விவசாய நிலங்களை எடுக்க வேண்டியதிருப்பதால் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்கிறோம் என்று முந்தைய நாள் மூச்சு முட்ட பேசு கிறது த.வெ.க. அரசு. அடுத்த நாள், ஓசூர் விமான நிலையம் தொடர்பான விவாதம் நடந்தது. 'விவசாய நிலத்தை எடுக்காமல் விமான நிலையம் அமைக்க முடியாது' என்று சொல்கிறார் அவை முன்னவர் செங்கோட்டையன். தனது கட்சி உறுப்பினர்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய செங்கோட்டையனே இப்படி பேசி மாட்டிக் கொண்டார்.
சட்டமன்றத்தை தங்கள் கட்சி மேடையாக நினைத்து, நினைத்ததை எல்லாம் பேசி, கேலிக்கூத்து ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் த.வெ.க. அமைச்சர்கள். 'நேரலை' மூலமாக இவர்களது அறியாமையும், ஆணவமும்தான் வெளிப்பட்டு வருகிறது.
Also Read
-
தேவையில்லாமல் பேசுகிறார்... : பேரவையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கண்டித்த எ.வ.வேலு!
-
“காமராஜருக்கு உரிய மரியாதை செய்தவர் கலைஞர்.. வரலாறு தெரியுமா?” : காங்கிரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
-
“அனிதாவின் நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி மறுத்தது ஏன்?” : சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
‘நேபாள வெள்ளப் பேரழிவு.. உலகையே உலுக்கிய சோக நிகழ்வு.. இயற்கையின் எச்சரிக்கை’ - முரசொலி தலையங்கம்!
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!