murasoli thalayangam
“தி.மு.க.வைப் பற்றிப் பேச அருகதை இல்லை” : த.வெ.க MLA-க்கு முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!
முரசொலி தலையங்கம் (27-08-2026)
இசுலாமியர்களும் தி.மு.கவும்!
இசுலாமியர்களை தி.மு.க. கொச்சைப்படுத்திவிட்டதாக த.வெ.க. உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசி, அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் அதைத் திசை திருப்புவதற்காக அழுதும் நாடகம் நடத்தி இருக்கிறார். இவை அனைத்தும் சபை மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் காட்சிகளாக உள்ளன.
இசுலாமிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசுகளும், தமிழினத் தலைவர் கலைஞரும், இன்றைய தலைவர் திராவிட மாடல் நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பணிகளை இசுலாமிய மக்கள் மறக்க மாட்டார்கள். என்றைக்கும் அவர்கள் நன்றிப் பெருக்குடன் இருக்கக் கூடியவர்கள். சிலரைப் போல கூலிக்கு விலை போகக் கூடியவர்கள் அல்ல.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவருக்குத் தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்.
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் காயிதேமில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்து மருத்துவ மனைக்குச் சென்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பார்த்தார்- கள். கண்மூடிப் படுத்திருக்கிறார் காயிதேமில்லத் அவர்கள். அப்போது முதல்வர் கலைஞர் அவர்கள், "அய்யா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்கள். லேசாக கண் திறந்து பார்க்கிறார் காயிதேமில்லத் அவர்கள். முதல்வர் கலைஞரைப் பார்த்தார். கை நீட்டி கலைஞரின் கையை பிடிக்கிறார். ”முஸ்லீம் சமுதாயத்துக்கு தாங்கள் செய்த உதவிக்கெல்லாம் எனது நன்றி” என்று காயிதேமில்லத் அவர்கள் சொன்னார்கள்.
• முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை விட்டவர் கலைஞர். அதனை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.
• உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.
• சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார்.
• வஃபு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கினார்.
• தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கினார்.
• உருது அகாடமியைத் தொடங்கினார்.
• காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கினார்.
• பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொடுத்தார்.
•காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.
• காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் வழங்கினார்.
அத்தகைய தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் தான் திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அவர்களும் செயல்பட்டார்கள்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில், ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். 2024 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக மானியமாக ரூ.80 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 31,625 பயனாளிகளுக்கு ரூ.287 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப் பட்டது. சிறுபான்மையின மக்கள் பயன் பெறுவதற்காக, பல்வேறு நலத் திட்டங்களுக்கு ரூபாய் 405 கோடி அளவில் அரசு நிதி தரப்பட்டது.
ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. எனவே மாநில அரசு சார்பில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு 1999 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 159 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொன்மையான பள்ளி வாசல்கள் தர்காக்களின் புனரமைத்தல் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 தர்காக்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளி வாசல்கள், தர்காக்கள், வக்ஃப் நிறுவனங்களை புனரமைத்தல் பணிகளுக்கு இதுவரை 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,308 வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இசுலாமியர்களைக் காக்கும் காவல் அரணாக இருப்பதும் தி.மு.கழகம் தான். குடியுரிமைச் சட்டம் மூலமாக அச்சுறுத்தல் வந்தபோது அதனைத் தடுக்கப் போராடியது கழகம். இது எதையும் அறியாமல், மறைக்கும் வகையில் சட்டமன்றத்தில் பொய்யைப் பரப்பி வருகிறது த.வெ.க.
இன்றைய முதலமைச்சர் விஜய்யின் யோக்கியதை என்ன? ‘இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்' படங்களில் அதிகம் நடித்தவர் அவர் தான். விஜய் நடித்த ‘பீட்ஸ்' படத்தில் இசுலாமியர்களைத் தீவிரவாதிகளைப் போல சித்தரித்தார். இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் போலவும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளைப் போலவும் காட்சிகள் வைக்கப்பட்டது. இதை அப்போதே இசுலாமிய அமைப்புகள் எதிர்த்தன. இன்று த.வெ. க. வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக ஆகி இருப்பவரும் அன்று இதை கண்டித்து வீடியோ வெளியிட்டவர் தான். குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இப்படத்துக்குத் தடைஎன்கிற அளவுக்கு நிலைமைகள் போனது.
விஜய் நடித்த ‘துப்பாக்கி' படத்திலும் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக உருவகப்படுத்தப்பட்டார்கள். குண்டு வைப்பவர்களாக காட்சிப்படுத்தப்பட்டார்கள்.
‘ஜனநாயகன்’ படத்திலும் இசுலாமிய வெறுப்புக் காட்சிகள் தான் அதிகமாக இருந்தன. ‘விஜய் இன்னும் திருந்தல' என்று இசுலாமிய அமைப்புகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை வைத்தார்கள். ‘எப்போது மாறும் உங்கள் மனநிலை?' என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பினார். ‘விஜய்யிடம் இருந்து இசுலாமியர்கள் தள்ளி இருக்க வேண்டும்' என்று அகில இசுலாமிய அமைப்பினர் சொன்னார்கள். இப்படிப்பட்ட விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு தி.மு.க.வைப் பற்றிப் பேச அருகதை இல்லை.
“சிறுபான்மை மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை அரசின் மூலமாக தொடர்ந்து நிறைவேற்றும் அதே காலத்தில்-இசுலாமியரின் அரசியல் உரிமைகளையும் பெற்றுத் தரும் இயக்கமாக திராவிட முன்-னேற்றக் கழகம் எந்நாளும் இருக்கும்” என்று திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள உறுதிமொழி கல்வெட்டாக இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.
Also Read
-
நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?