murasoli thalayangam
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
முரசொலி தலையங்கம் (26-08-2026)
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள்!
சென்னைக்கு அருகில் பரந்தூர் பகுதியில் அமைய இருந்த இரண்டாவதுவிமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை, எதிர்காலத்தை பின் நோக்கித் தள்ளும். அனைத்து விதத்திலும் பின்னடைவையே தரும். இப்படி ஒரு தவறான முடிவை அவர்தான் எடுத்தாரா? எடுக்க வைக்கப்பட்டாரா? தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் எண்ணம் கொண்டவர்களின் சதிச்செயலுக்கு அவர் பழியாகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதலமைச்சர் விஜய் எடுத்த மிகமிக தவறான, மோசமான முடிவின் காரணமாக தமிழ்நாடு அடையப்போகும் பின்னடைவை நினைத்தால் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வலிமையானதாக இல்லை. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமாம். விரிவுபடுத்து வதற்கு மீனம்பாக்கம் பக்கம் இடமிருக்கிறதா என்று யாரையாவது கேட்டாரா முதலமைச்சர் விஜய்?
விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்காத வகையில் இடம் பரிசீலனை செய்யப்பட்டு அங்கு புதிய விமான நிலையம் அமைக்கப்படுமாம். இதைச் சொல்லி இருப்பதும் விஜய் தான். அது என்ன அதிகம் பாதிக்காத வகையில்? அப்படிஎந்த இடத்தை அடையாளம் கண்டு வைத்துள்ளார் விஜய்? எதை எடுத்தாலும் தி.மு.க. அரசு மீது பழியைப் போட்டு விட்டால் போதும். அதிலேயே திருப்திஅடைந்து விடுகிறார் விஜய். ‘முந்தைய அரசு விவசாயிகள் பாதிக்கும் வகையில்' இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாம். இவரிடம் என்ன திட்டம் இருக்கிறது? ‘அதிகம் பாதிக்காத வகையில்' என்று தான் இவரும் சொல்கிறார். அதிகம் பாதிக்காத, குறைவாக பாதிக்காத என்பதெல்லாம் ஒரு அளவுகோலா?
இது என்ன சாதாரண ஒரு கட்டட ஒப்பந்தமா? வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிறுத்திவிட? பல்லாண்டு காலத்துக்கு தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையப் போகும் விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் இது. முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதாக இருந்தாலும் அதற்கு அளவுகோல் விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள்தான். பரந்தூர் ரத்து ஆனதால் லட்சக்கணக்கான வேலை- வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். ஏற்றுமதி, இறக்குமதி நின்று போகும். விமான நிலையத்தை மையமாக வைத்து உருவாகும் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை ரத்து ஆகும். இது எதைப் பற்றியும் விஜய் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு என்ன சொன்னார் என்று நினைவு இருக்கிறதா?
"சென்னையில் உள்ள விமான நிலையம் மிகப் பழமையானது. ஆனால் அது ஐதராபாத், பெங்களூரு விமான நிலையத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறதா? ஐதராபாத்தை நான் மேம்படுத்திய பிறகு என்னை கர்நாடகம் பின்பற்றியது. தற்போது அடுத்த ஒரு நவீன விமானநிலையத்தை அமராவதியில் 5 ஆயிரம் ஏக்கரில் கட்டுகிறேன். இப்போது சொல்லுங்கள், தமிழ்நாடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு. இத்தகைய நிலைமையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை வைத்துக் கொண்டு, பரந்தூர் விமானநிலையத்தையும் ரத்து செய்து விட்டார் விஜய்.
3 ஆவது இடத்தில் இருந்த சென்னை விமானநிலையம், 5 ஆவது இடத்துக்குபோய்விட்டது. 5 ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு விமான நிலையம் 3 ஆவது இடத்துக்கு வந்துவிட்டது. இதுதான் இன்றைய நிலைமை ஆகும். இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் அறிவாரா எனத் தெரியவில்லை.
விமான நிலையம் அமைப்பது என்பது ஏதோ பேருந்து நிழற்குடை அமைப்பது அல்ல. சென்னைக்கு இரண்டாவது விமானநிலையம் வேண்டும் என்று 2007 ஆம்ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தான் சிதைத்திருக்கிறார் விஜய். எதையும் உருவாக்கத் தெரியாதவர்கள், இது போன்ற அழிவு வேலைகளை நன்றாகச் செய்வார்கள்.
5,746 ஏக்கரில் 27,400 கோடி மதிப்பீட்டில் அமையப் போகும் திட்டம் இது. பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை தேர்வு செய்து விட்டுச் சொல்ல வேண்டாமா?
பெங்களூரும், ஐதராபாத்தும் சென்னையை முந்திச் சென்று விட்டன. இந்தச் சூழலில் பரந்தூரையும் ரத்து செய்வது சென்னையையும், தமிழ்நாட்டையும் முடக்கும் திட்டம் ஆகும். அயல் மாநிலத்தவர்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொண்ட விஜய் அவர்களின் சதிச் செயல்களுக்கு சம்மதம் தெரிவித்தது ஏன்?
கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறியது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக ஆனது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை நோக்கி வந்தார்கள். வேலை வாய்ப்புகள் அதிகம் ஆனது. இதன் மூலமாக ஒன்றிய அரசின் அனைத்து வளர்ச்சிக் குறியீட்டிலும் முன்னுக்கு வந்தது தமிழ்நாடு. ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடலின் நோக்கம் என்று சொல்லி வளர்த்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்கள் கண்ணை உறுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெம்பினார்கள்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், சில கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்தும், குதிரை பேரம் நடத்தியும் ஆட்சி அமைத்துள்ளார் விஜய். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையும், முன்பின் சிந்தனையுமற்ற முதலமைச்சர் விஜய் எடுக்கும் தன்னிச்சையான, முதிர்ச்சியற்ற முடிவுகளும் தமிழ்நாட்டின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தகைய முடிவுகளில் ஒன்று தான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து ஆகும்.
‘ஆந்திராவுக்கு உதவும் விஜய்' என்று சமூக வலை தளங்களில் மிகச் சரியாக விமர்சித்து வருகிறார்கள். ‘பரந்தூர் விமான நிலையத் திட்டம் கை விடப்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தான் எடுத்தது தவறான முடிவு என்று ஒரு காலத்தில் வருத்தப்படுவார் விஜய். அப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?
Also Read
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி