murasoli thalayangam

நுழைவுத் தேர்வு எந்த வடிவில் வந்தாலும் திமுக எதிர்க்கும்.. கலைஞரின் சட்டப் போராட்டம் (1): முரசொலி!

முதல் குரல் எழுப்பிய கலைஞரும் தொடர் போராட்டம் நடத்திய தலைவரும் - (1)

நீட் தேர்வுக்கு எதிராக இன்று இந்திய நாடு முழுவதும் வீறு கொண்ட போராட்டங்கள் நடக்கிறது என்றால் இத்தேர்வுக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். தொடர் போராட்டங்களை மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் நடத்தியவர் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007–08 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச்சேர்க்கும் நடைமுறையைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

இது தொடரப்பட வேண்டும் என்று அவர் முதல்வராக இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கும், ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15.8.2010 இல் கடிதம் எழுதி இருக்கிறார். “அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுமுறை; மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. தமிழக அரசு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும்” என்று அக்கடிதத்தில் தலைவர் கலைஞர் குறிப்பிட்டார்.

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இதற்குப்பதில் அளித்து, 27.8.2010 அன்று அனுப்பிய கடிதத்தில், "முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள அக்கறையைக் கருத்தில்கொண்டு, அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் நீட் போன்ற தேர்வை நுழைத்தது மருத்துவக் கவுன்சில்.

இத்தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பதிவான போது தன்னையும் ஒரு வாதியாக தி.மு.க. அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு மேல்நிலைக்கல்வித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர் நீதி மன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அன்று தி.மு.க. அரசால் பெறப்பட்டது.

2012இல் மருத்துவக் கல்வியில் ஒன்றிய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வந்தபோது, அதில் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

“ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்றவகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அறவே இல்லை.” என்று 29-9-2012இல் தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

எம்.பி.,பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது வழக்கு நடைபெற்றது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 18-7-2013 அன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

அப்போது ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஒன்றிய அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், தனக்கு இத்தீர்ப்பு வருத்தம் அளிப்பதாகக் கூறினார். “உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந்தோம்; துரதிருஷ்டவசமாக, அத்தகைய தீர்ப்பு கிடைக்கவில்லை; இதனால், எங்களுக்குச் சிறிது மன வருத்தம்தான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், 23.07.2013 ஆம் நாள் அன்று, 'நுழைவுத் தேர்வு தீர்ப்பு – தேவையா எதிர்ப்பு?' என்ற தலைப்பில் தலைவர் கலைஞர் எழுதிய அறிக்கை இன்றைக்கும் பொருத்தமானது ஆகும்.

"நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இடமில்லை என்பதாலும்; அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநிலஉரிமைகளில் தலையிடும் காரியமாகும் என்பதாலும்; இந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகஒன்றிய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருப்பது, ஏற்றுக்கொள்ள இயலாதது மட்டுமல்லாமல்; அவர் ஏற்கனவே நுழைவுத் தேர்வு தொடர்பாக மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும் தற்போதைய அவரது அறிவிப்புக்கும் உள்ள முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டார் தலைவர் கலைஞர்.

நீட் போன்ற கொடூரமான தேர்வுகளுக்கு எதிராக முதல் குரலை பதிவு செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

– தொடரும் –

Also Read: “நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!