murasoli thalayangam
“நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாணவர்களின் கையையும் காலையும் உடைக்கும் விஜய்” : முரசொலி ஆவேசம்!
நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவை தனது தங்கச்சி என்றும், ‘நீட் தேர்வை எதிர்ப்பேன்’ என்றும் வேஷம் போட்ட விஜய் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் கையையும் காலையும் உடைக்கிறார். டெல்லியில் போராடும் மாணவர்களை ஒடுக்குவதில் அங்குள்ள போலீசார் எத்தகைய அராஜகத்தில் ஈடுபடுகிறார்களோ, அதே அராஜகத்தையும் அட்டூழியத்தையும் இங்குள்ள விஜய் ஆட்சி போலீசும் செய்கிறது.
லத்தி லைசென்ஸை போலீசுக்குக் கொடுத்துவிட்டு, தான் நடித்த படத்தை ரசிப்பதில் மூழ்கி இருக்கிறார் விஜய். ‘ரோம் பற்றி எரியும் போது பிடில் பிடித்தான் மன்னன்’ என்பதற்கு இணையானது முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகள்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இரண்டு நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் மாணவர்கள். இந்திய மாணவர் சங்கம், டி.ஒய்.எஃப்.ஐ. அமைப்பினர் இதனை நடத்தினர். முதல் நாள் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து எட்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது விஜய் போலீஸ். மறுநாள் மாணவர்கள் வர மாட்டார்கள் என்று நினைத்தார்கள். மறுநாளும் மாணவர்கள் வந்ததும் கோபம் ஆன போலீசார், அவர்களை அராஜக வழியில் வெளியேற்றினார்கள். டெல்லி போலீசைக் கண்டித்துதான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதனைக் கூட விஜய் ஆட்சி அனுமதிக்கவில்லை.
மாணவர்களை குண்டுக்கட்டாகப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது போலீஸ். மாணவிகள் என்று கூட பார்க்காமல் இழுத்ததால் அவர்கள் ஆடைகள் கிழிந்தது. வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றினார்கள். பல மாணவிகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
‘தமிழ்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா?’ என்று போலீசைப் பார்த்து மாணவிகள் கேள்வி எழுப்பினார்கள். “நாலு மாணவர்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மாணவர்கள் கையில் போலீஸார் கடித்துள்ளார்கள். இது அராஜகம் அல்லவா?’’ என்று ஒரு மாணவி கேள்வி கேட்டார். ‘நாலு பேர் கூடவே கூடாதா? சும்மா நடந்து வந்தாலே கைது செய்கிறீர்கள். கூட்டம் கூடுவதற்கு முன்பே ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கும் காவல் துறை அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை.
•சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய மாணவர்களை, கல்லூரிக்குள் புகுந்து கைது செய்ய முயன்றுள்ளது. இதற்கு சக மாணவ மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, சமூக விரோதிகள் போல் அடித்து, தரதரவென இழுத்துச் சென்று காவல்துறை கைது செய்தது. இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது போலீஸ்.
மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது காவல் துறை. சாலை மறியல் செய்தவர்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ். மாணவிகளை இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். பின்னர் மாணவர்களைத் தேடி கல்லூரிக்கும் விடுதிக்கும் சென்றது போலீஸ். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் சங்க மாணவர் தலைவர்களை கைது செய்ய பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நுழைந்துள்ளனர். வகுப்பறைக்குள் சீருடையுடன் சென்று கைது செய்துள்ளார்கள்.
ஒரு மாணவரை அசிங்கமான வார்த்தையால் திட்டுகிறார் திருவொற்றியூர் போலீஸ் அதிகாரி.
மாணவியின் கையைப் பிடித்து, இழுத்து அராஜகம் செய்கிறார் ஆண் போலீஸ் அதிகாரி.
சென்னையில் உள்ள கல்லூரி வாசல்கள் அனைத்திலும் காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடற்ரைக்கு வரும் பொதுமக்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார்கள். சர்வீஸ் லைன் அனைத்தும் மூடிவைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேண்ட்டை பிடித்து இழுத்து இருக்கிறது போலீஸ்.
கல்லூரி வளாகத்திற்குள் சென்று அங்கிருந்த மாணவர்களை மல்லுக்கட்டி இழுத்து வந்திருக்கிறது. மாணவர்களின் சட்டையைக் கிழிக்கிறது போலீஸ்.
டெல்லியில் போலீஸ் சீருடை இல்லாதவர்கள், கையில் லத்தியுடன் வந்து மாணவர்களை அடிக்கிறார்கள். இங்கும் அது தொடங்கி இருக்கிறது. சீருடையில் பெயர் பேட்ஜ் எடுத்துவிட்டு வருகிறது போலீஸ்.
– இவை அனைத்தும் போலீஸ் ராஜ்யம் நடக்கிறது என்பதற்கான காட்சிகள் ஆகும்.
‘சாலைகள் என்பது போராட்டம் நடத்தும் இடமல்ல’ என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருக்கிறார். சாலையை மறித்து இதுவரை விஜய் பேசியது இல்லையா? அவரது ரசிகர்கள் எதுவும் செய்தது இல்லையா? ‘மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் கைது’ என்கிறார் அமைச்சர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடப்பதே இல்லையா?
போராட்டம் நடத்துவதையே சட்ட விரோதம் ஆக்கிவிட்டது விஜய் அரசு. காவல் துறை எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், அராஜகம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்து விட்டார் முதலமைச்சர் விஜய். ‘நான் நினைத்ததைச் செய்வேன், அதை யாரும் கேட்க முடியாது, கேட்கக் கூடாது’ என்பதுதான் இன்று நடந்துள்ள மாற்றம்.
Also Read
-
“கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?” - விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“முதலமைச்சர் விஜய்யின் மவுனத்தால், காவல்துறை மரணங்கள் தொடர்ந்து வருகிறது!” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
போராட்ட எழுச்சி ஒருபுறம்; ஜனநாயகனின் கொண்டாட்டம் மறுபுறம்! : தடம் மாறுகிறதா தமிழ்நாடு?
-
“நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!