murasoli thalayangam
தி.மு.க-வின் கோரிக்கையை இன்று கையில் எடுத்துள்ள இளைஞர்கள் : டெல்லியில் மாபெரும் போராட்டம் - முரசொலி!
முரசொலி தலையங்கம் (22-07-2026)
டெல்லியில் மாபெரும் போராட்டம்!
'நீட்' தேர்வு மிகமிக மோசடியானது, கொடூரமானது என்பதை முதலில் உணர்ந்து அதற்கு கடுமையான எதிர்வினையை ஆற்றிய அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்தத் தேர்வு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் எதிர்த்து வருகிறது. 'இவர்களுக்கு வேறு வேலை இல்லை', 'ஒன்றிய அரசு எதைச் சொன்னாலும் இவர்கள் அதனை எதிர்ப்பார்கள்' என்று அப்போதெல்லாம் பதில் சொல்லி வந்தார்கள் சிலர். இதோ இன்று ஒட்டுமொத்த இளைஞர், மாணவர் சமுதாயமே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி விட்டது.
'நீட்' தேர்வு என்பது கோச்சிங் செண்டர்கள் கொள்ளை அடிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேர்வு முறை. இதன் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம்.
இந்த தேர்வையாவது முறையாக நடத்துகிறார்களா என்றால் இல்லை. வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவது ஆண்டுதோறும் நடக்கிறது லட்சக்கணக்கான பணத்துக்கு வினாத்தாள் விற்பனை ஆகிறது. ஆள்மாறாட்டமும் நடக்கிறது. சிபி.ஐ. விசாரணையில் சிக்கி சில மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது போன்ற முறைகேடுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசால் தடுக்க முடியவில்லை.
தேர்வை ரத்து செய்து மறுபடியும் நடத்துவதைப் போன்ற வன்முறை இருக்க முடியுமா? அதையும் கூச்சமில்லாமல் செய்கிறார்கள்.
'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும், அல்லது தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லி தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி
வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மதிக்கவே இல்லை. குப்பைக் கூடைகளுக்குள் போய்விட்டது.
இவை அனைத்தையும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்துடன் நிராகரித்தார். தமிழ்நாட்டையும் மக்களையும் அரசியல் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசினார் தர்மேந்திர பிரதான். 'நீட்' தேர்வுக்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் எழுப்பியதன் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இத்தேர்வின் கொடூரத்தை விளக்கியது தி.மு.கழகம்.
இதைத்தான் இப்போது கையில் எடுத்துள்ளார்கள் இளைஞர்கள், மாணவர்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் சொல்கிறது.
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், இது போன்ற தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், இத்தேர்வு முறையால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரதம் தொடங்கி- னார். அவரது உடல்நிலை கடந்த 18 ஆம் தேதியன்று மிகவும் மோசமானது. வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தது டெல்லி காவல் துறை. இவரது போராட்டம் இந்தியா முழுமைக்கும் கவனத்தை ஈர்த்தது.
நேற்றைய தினம் ( ஜூலை 20) அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணியாகச் செல்ல இருந்தனர். நாடாளுமன்றம் கூடும் நாள் என்பதால் இவர்கள் பேரணியை தடுக்க அனைத்து வகையிலும் முயற்சித்தது காவல் துறை. இணையத்தள சேவைகளை முடக்கியது அரசு. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இளைஞர்- கள் வருவதைத் தடுக்க முக்கியமான ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களை பூட்டினார்கள். ஆனாலும் சாலைகள் வழியாக ஜந்தர் மந்தர் பகுதிக்கு இளைஞர்கள் குவியல் குவியலாக வந்து விட்டார்கள். நாடாளுமன்றத்தை நெருங்க விடாமல் இரும்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை தாண்டினார்கள் இளைஞர்கள். அவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. அப்போதும் இளைஞர்கள் முன்னேறினார்கள்.
நாடாளுமன்றத்தை ஒட்டிய ரயில் பவன் பகுதிக்கே இளைஞர்கள் முன்னேறி வந்தததும் தடியடி நடத்தியது காவல் துறை. பலருக்கும் ரத்தம் ஒழுகியது. குண்டுக்- கட்டாக அவர்களை தூக்கிச் சென்றது போலீஸ். எந்த நேரமும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அவர்கள் நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டது. எனவே நாடாளுமன்றத்தில் வெளிப்புற நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியது காவல் துறை. இதன் பிறகு தான் கூட்டம் ஓரளவு கலைந்தது. பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்தது பா.ஜ.க. அரசு.
போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் அரசு. இளைஞர்களும், மாணவர்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக இருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகுதான்பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது பா.ஜ.க. அரசு. சுகாதாரத் துறை அமைச்சர்ஜே.பி.நட்டா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மணி நேரம் தங்களை காக்க வைத்தார் அமைச்சர் என்று அக்கட்சியினர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்துக்கு ஒரு கோடி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளது இக்கட்சி. ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகச் சொல்லி இருக்கிறார் ஜே.பி.நட்டா.
"தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். மீண்டும் நாடாளுமன்றம் நோக்கி போராட்டம் நடக்கும்"என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.நேற்றைய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 70 மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளதாகவும் அக்கட்சி சொல்கிறது. எனவே அவர்கள் போராட்டம் தொடர இருக்கிறது.
இளைஞர்கள்தான் எங்கள் மீது முதலில் கல்வீசினார்கள் என்று பொய் சொல்லி அவர்கள் மீது அராஜகமான தாக்குதலை காவல் துறை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. லத்திகள் வீசுவதாலோ, கண்ணீர் புகை போடு வதாலோ மக்கள் போராட்டங்களை அடக்கி விட முடியாது.
'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்வது தான் போராட்டக்காரர்களின் முழுமுதல் கோரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கையானது முழுமையானதாக அமைய வேண்டும்.
Also Read
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!
-
“சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா?” - மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
“அச்சுறுத்தல், கைதுகளுக்கு திமுக-வினர் அஞ்ச மாட்டார்கள்.. அனைத்திற்கும் தயார்” - கனிமொழி எம்.பி!
-
“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!