murasoli thalayangam

குதிரை பேரம் - சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும் : முரசொலி!

முரசொலி தலையங்கம் (21-07-2026)

அவர்களாக முன் வந்து சேர்கிறார்களா?

“குதிரை பேர விவகாரத்தில் மக்களுக்கு கோபம் வர வேண்டும். பிற கட்சிகளை உடைத்து அதன் மூலம் பா.ஜ.க. தங்களது பலத்தை அதிகரிக்கின்றனர். ஆனால் இங்கே இவர்கள் ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறுகின்றனர். அதையும் இதையும் சம்பந்தப்படுத்தக் கூடாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டுபிடித்திருக்கிறார். உண்மையறியும் கருவியைத் தோளில் தொங்க விட்டுள்ளார் போலும்!

11.7.2926 அன்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "விஜய் தலைமையிலான அரசு எங்கள்ட்ட அப்ரோச் பண்ணுனாங்க. 42 ஆண்டு காலம் நான் உறுப்பினரா இருந்திருக்கிறேன். பல பதவிகள்ல இருந்- திருக்கேன். உள்ளாட்சியில இருந்து ... அமைச்சர்ல்ல இருந்து பல பதவியில இருந்திருக்கேன்...'” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தார். இது அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது. இது தானாக முன் வந்து விலகியதா? இல்லை. முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் விலகியதாக கரூர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் சொல்லி இருக்கிறார்.

ம.தி.மு.க. பொதுக்குழு 27.6.2826 அன்று சென்னையில் கூடியது. அதன்பிறகு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைகோ வெளிப்படையாக குதிரை பேரம் நடந்ததை ஒப்புக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நிருபர்: நீங்கள் முதலமைச்சரைச் (விஜய்) சந்தித்தீர்களா?

வைகோ: ஆமா. சந்திச்சேன்.

நிருபர்: ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நான் பிரச்சாரம் பண்றேன்னு முதலமைச்சர் விஜய் சொன்னதாகச் செய்தி வந்ததே...?

வைகோ: ஆமாம். ரெண்டு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். அப்படி ஒரு இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என்று முதலமைச்சர் என்னிடம் சொன் - னார். .... ஆனா அந்த ரெண்டு பேர்ட்ட (கடையநல்லூர் தி.மு. இராசேந்திரன், சீர்காழி செந்தில் செல்வன்) சொன்ன போது செந்தில் செல்வன் பதிலே சொல்லல. ‘நான் தி.மு.க.வுல தான் இருக்கப் போறேன்னுட்டு' போயிட்டாரு. ராசேந்திரன், 'நான் ம.தி.மு.க. வா தான் இருக்கேன். ஆனா எம். எல்.ஏ.வாக தொடர்றேன்னு' சொல்லியிருக்காரு.

- இதுதான் வைகோ அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் விஜய் தான் ராஜினாமா செய்யச் சொன்னார் என்று வைகோவே சொன்னார். இது குதிரை பேரம் அல்லவா?

இந்தப் பேட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவில் வைகோ பேசிய பேச்சின் காட்சிகள் அவரது கட்சியினரால் வெளியில் பரப்பப்பட்டது. “நேத்து காலைல ராசேந்திரனையும், செந்தில் செல்வனையும் கூப்பிட்டு, ரெண்டு பேரும் ராஜினாமா செய்தா ஜெயிக்க வைக்கிறேன்னு சி. எம். சொல்றாரு... ராஜினாமா செய்றீங்களா என்று நான் கேட்டேன். ரெண்டு பேரும் பதில் சொல்லல. எனக்கு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லி விட்டு நான் போய்விட்டேன். உயர் நிலைக் குழு நடந்த போது என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ராசேந்திரன் சொன்னார். 'ராஜினாமா செய்தால் ஜெயிக்க முடியாது' என்று ராசேந்திரன் சொன்னார். ‘அண்ணா தோற்கலையா? அடியேன் தோற்க- லையா?' என்று நான் சொன்னேன். 'உங்களை இதை விட உயர்ந்த இடத்தில் நான் உட்கார வைப்பேன்' என்றேன். ஆனால் பதில் சொல்லாமல் போன ராசேந்திரன் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்” என்று பேசி இருக்கிறார். இந்தக் காட்சிகளும் வீடியோக்களாக வந்துள்ளது.

‘நீங்கள் இருவரும் ராஜினாமா செய்தால், அதன்பிறகு நடக்கும் இடைத்தேர்தலில் நான் வந்து பிரச்சாரம் செய்கிறேன்' என்று விஜய் தன்னிடம் சொன்னதாக வைகோ சொன்னது விஜய் நடத்திய அப்பட்டமான குதிரை பேரம் அல்லவா?

ராஜினாமா செய்யுங்கள், அதே இடத்தில் நீங்களே நிறுத்தப்படுவீர்கள் என்பது தானே பேரம்?

அதை விட பெரிய பேரம் நடத்தியதை வைகோவே ஒப்புக் கொள்கிறார். ராஜினாமா செய்ய மறுத்த கடையநல்லூர் தி.மு.ராசேந்திரனிடம், ‘இதை விட உயர்ந்த இடத்தில் நான் உங்களை உட்கார வைப்பேன்' என்று வைகோ சொன்னது எதை மனதில் வைத்து? ‘அமைச்சர் ஆக்குகிறேன்' என்பது தானே? அந்த வாக்குறுதியையும் வைகோவுக்கு விஜய் கொடுத்துள்ளது இதன் மூலம் அம்பலம் ஆகவில்லையா?

இவை எல்லாம், 'வைகோ சொன்னாராம்' என்பது மாதிரியான கற்பனைகள் அல்ல. அவரே பொதுக்குழுவில் பேசியவை. பொதுக்குழுவுக்குப் பிறகு பேட்டி அளித்தவை. சமூக ஊடகங்களில் இவை அனைத்தும் கிடக்கின்றன. குதிரை பேரத்தை யாரோ ஒரு த.வெ.க. அநாமதேயம் நடத்தவில்லை. முதலமைச்சர் விஜய்யே நடத்துகிறார் என்பதற்கு வைகோ கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இவை. சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும். ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.

விஜய் ஆட்சிக்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன், வாரியத் தலைவர் பதவி தருகிறேன் என்று ஏமாற்றி அவர்கள் ஆதரவைப் பெற்றார் முதலமைச்சர் விஜய். வோட்டுப் போட்டதும் அவர்களுக்கு ‘அல்வா' கொடுத்தார். அதில் 19 பேர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கே போய்விட்டார்கள். இது அப்பட்டமான பேரம் அல்லவா?

இதை அ.தி.மு.க. வின் சொந்தக் கட்சிப் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மீதான உண்மையான கோபம் என்றால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஆதரித்து போயிருக்க மாட்டார்கள்.

விஜய் ஆசை வார்த்தையை நம்பி வந்தார்கள். அது நிறைவேறவில்லை என்றதும் போய்விட்டார்கள். இது கூடவா புரியவில்லை?

விராலிமலை விஜயபாஸ்கருக்கும் கரூர் விஜயபாஸ்கருக்கும் கிளீன் சர்டிபிகேட் கொடுக்கும் வேலையை மார்க்சிஸ்ட் சண்முகம் பார்க்கத் தொடங்கி இருப்பது மகத்தான மாற்றம் தான்!

Also Read: லஞ்சம் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என சொல்லும் விஜய் இதைப் பற்றி விளக்கம் அளிப்பாரா? : முரசொலி கேள்வி!