murasoli thalayangam

விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!

முரசொலி தலையங்கம் (10-07-2026)

கரூர் என்றால் யாருக்கு பயம்? - 2

தமிழ்நாடு அரசு விசாரித்தால் உண்மை உடனே வெளிவந்து விடும் என்று நினைத்து சி.பி.ஐ. பின்னால் போய் பதுங்கிக் கொண்டார் விஜய். இதற்குக் காரணமும் பயம்தானே?

கரூரில் பலியான அப்பாவிக் குடும்பத்தினர் சிலரை ஏமாற்றி அவர்கள் மூலமாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்குப் போட வைத்தார்கள். பிரித்விக் என்ற சிறுவன் இந்தச் சம்பவத்தில் அநியாயமாக பலியானான். அவனது தந்தை பன்னீர்செல்வம்,சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்குப் போட்டார். ‘எட்டு ஆண்டுகளாக நானும் பன்னீர்செல்வமும் பிரிந்து வாழ்கிறோம். என் குழந்தை இறந்தபோதுகூட அவர் வரவில்லை' என்று அந்தச் சிறுவனின் தாய் ஷர்மிளா பேட்டி கொடுத்தார்.

இந்தச் சம்பவத்தில் சந்திரா என்பவர் இறந்து போனார். அவரது கணவர் செல்வராஜ் பேரில் சி.பி.ஐ. கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செய்தி வெளியானதும், 'அரசாங்க வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கையெழுத்து கேட்டார்கள். போட்டேன். சி.பி.ஐ. கேட்டு நான் மனு போடவில்லை' என்று சொன்னார் செல்வராஜ். இப்படி பல்வேறு கேவலங்களைச் செய்தார்கள் விஜய் கட்சி நிர்வாகிகள். சி.பி.ஐ. கேட்டு ஓடியது பயத்தினால்தானே?

காவல் துறை அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு செய்தார். ‘அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். இதுவும் பயத்தினால்தானே? 'அஸ்ரா கர்க் விசாரித்தால் உண்மை வெளியில் வந்துவிடும்' என்று தானே பயந்தார்கள். அதே அஸ்ரா கர்க்தான் இன்றைய த.வெ.க. ஆட்சியில் புலனாய்வுப் பிரிவைக் கவனிக்கிறார்!

கரூர் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று 13.10.2825 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதியரசர்கள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் கொண்ட அமர்வு அது. சி.பி.ஐ. விசாரணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் மூவர் குழுவையும் நீதிமன்றம் அமைத்தது. அதுவரை விஜய்யும் விஜய் கட்சி நிர்வாகிகளும் பதுங்கித்தான் இருந்தார்கள். இவர்கள் பயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

ஆட்சிக்கு வந்ததும் கரூர் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் 19 பேரை இடமாற்றம் செய்தது பயத்தின் வெளிப்பாடுதான். உள்துறையை கையில் எடுத்ததும் முதலமைச்சர் விஜய் போட்ட முதல் கையெழுத்து இதுதான். எதனால் இந்த பயம்? அந்த 19 பேரை மாற்றியதால் உண்மை மாறி விடுமா? அவர்களை கரூரில் இருந்து மாற்றியதால் அவர்கள்தான் மாறி விடுவார்களா? விஜய்க்கு மனச்சாட்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு மனச்சாட்சி இருக்கத்தான் செய்யும்.

இப்போது எதற்காக திடீர் கரூர் பயணம்? சாட்சிகளான அந்தக் குடும்பத்தினர் தனக்கு எதிராக மாறி விடக் கூடாது என்பதுதானே? கரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல, தன் தலையைக் காப்பாற்றிக் கொள்ளவே விஜய் கரூர் செல்கிறார். தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளும் பயம், அவரது முகத்தில் தெரிகிறது.

இறந்தவர் குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூட சொல்லாமல், அவர்களைச் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னார் விஜய். இப்போது மீண்டும் எதற்காக கரூர் செல்ல வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். ‘கரூர்’ அவர் கனவில் வந்து அந்தளவுக்கு ஆட்டிப் படைக்கிறது.

இவ்வளவு பயந்த விஜய், உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி மனுதாக்கல் செய்துள்ளார் என்றதும் மேலும் பயந்து போனார். கரூருக்கு விஜய் செல்லக்கூடாது என்றோ, பாதிக்கப்பட்ட குடும்பத்- துக்கு நிவாரணம் தரக் கூடாது என்றோ அந்த மனுவில் குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்துக்கொண்டு இருக்கும் போது, ‘கரூரில் நாங்கள் தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கிறது’ என்றோ, 'போலீஸ்காரர்களை வைத்து சதி செய்து கொன்றார்கள்' என்றோ சொல்லலாமா? என்பதே தி.மு.க. எழுப்பும் கேள்வி ஆகும்.

‘கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுன், நிர்மல்குமார் ஆகியோர் கரூர் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்பதுதான் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தாக்கல் செய்த வழக்கு. ‘இந்த மனுவை நீதிமன்ற அவமதிப்பு வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

“விஜய் கரூர் செல்வது, நிவாரணம் கொடுப்பது தொடர்பான விஷயங்களை உச்சநீதிமன்றத்தால் இதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவிடம் கொடுங்கள்’” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதியும் வழங்கி இருக்கிறார்- கள். அதாவது தி.மு.க.வின் இரண்டு கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.க்கும், சி.பி.ஐ. வழக்கை கண்காணிக்கும் குழுவுக்கும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அனுப்பி இருக்கிறார். நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு அனுப்பிய மனுவில், “முதல- மைச்சர் விஜய் கரூர் செல்ல இருக்கிறார். அதைக் கண்காணிக்க வேண்டும். ஏற்கனவே சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். “சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்து- தல், தடுத்தல், தலையீடு செய்தல் ஆகிய செயல்களுக்காக ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கரூருக்கு விஜய் செல்லக்கூடாது என்றோ, பாதிக்கப்பட்டவர் குடும்பங் களைச் சந்திக்கக் கூடாது என்றோ தி.மு.க. சொல்லவில்லை. ஆனால், ‘கரூர் செல்ல விஜய்க்கு தடை இல்லை' என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வர வைக்கிறது விஜய் அரசு. நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைக்கூட அறிந்து கொள்ளாமல் தலைப்புச் செய்தி எழுதுகிறவர்கள் கையில் பாரம்பரிய நாளிதழ்கள் சிக்கிவிட்டன. என்ன செய்ய?

‘தலைப்புச் செய்திகளை' மாற்றலாம். நடக்க இருப்பதை மாற்ற முடியாது. கரூரில் 41 பேரை தனது விளம்பர வெறிக்காக பலியிட்ட விஜய், இன்றல்ல என்றாவது ஒருநாள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். ‘என்னை இங்க வரவிடாமல் கூட தடுத்தார்கள்' என்று அவர் அழலாம். ஆனால் வருங்கால தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.

Also Read: கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!