murasoli thalayangam
“மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட்.. மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” : கொந்தளித்த முரசொலி!
கடந்த மே 3 ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு நேற்றைய தினம் (ஜூன் 21) நடைபெற்றது. மறுதேர்வு பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தற்கொலையைத் தூண்டும் ஒரு தேர்வை இன்னமும் ஏன் நடத்துகிறீர்கள்?
கோவை மாணவி அனுகீர்த்தனா, நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். பதற்றம் அதிகம் ஆகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மே 3 நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதியவர்தான். 'கடந்த முறை நன்றாக எழுதினேன். ஆனால் தேர்வு ரத்தாகி விட்டது' என்று அவர் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார்.
சேலம் கோபிகாவும் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு முறை தேர்வு எழுதியும் நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார் கோபிகா. தேர்வுக்குத் தயாராகி வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘நல்ல மதிப்பெண் பெற முடியாவிட்டால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது' என்று மகள் சொல்லி வந்ததாக அவரது அப்பா சொல்கிறார்.
பாலக்கோடு எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தவர் தற்கொலை செய்து விட்டார்.
தர்மபுரி மாவட்டம் பாகலூர் வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே மூன்று முறை தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. கடிதம் எழுதி வைத்துவிட்டு மரணத்தைத் தழுவி இருக்கிறார்.
இதே போல் இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் 20 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி அகாங்ஷா சதுர்வேதி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவர் மத்தியப் பிரதேசத்தில் மோ கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மாகனியா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை கிருஷ்ண குமார் சௌபே விவசாயி. மகளின் படிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு கடன் மூலம் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தேர்வு ரத்தானதால் மனம் உடைந்து தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மாணவி தனது அப்பா அம்மாவைக் குறிப்பிட்டு, "உங்கள் மகள் நன்றாகப் படித்து மருத்துவர் ஆவாள் என்று மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால் மீண்டும் ஒரு நீட் தேர்வை எழுத எனக்கு இப்போது தைரியம் இல்லை. என்னுடைய முதல் முயற்சியில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இப்போது மீண்டும் நான் சிறப்பான மதிப்பெண் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்” என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.
இப்படி எத்தனையோ பேரின் வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது நீட் தேர்வு. ஒழுங்காக ஒரு தேர்வைக்கூட நடத்தத் தெரியாதா?
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே - 3 -ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 22.79 லட்சம் மாணவர்கள்
இத்தேர்வைஎழுதினார்கள்.
இந்தத் தேர்வையே தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.கேள்வித்தாள் கசிந்து விட்டதாகச் சொல்லி ரத்து செய்வதாகச் சொன்னார்கள். 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ஏதாவது ஒரு பிரச்சினை இத்தேர்வில் நடப்பது வழக்கமானதுதான். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது அதிகம் நடப்பதும் இந்தத் தேர்வில்தான். கேள்வித்தாள் லட்சக்கணக்கில் விற்பதும் இந்தத் தேர்வில்தான். சி.பி.ஐ. விசாரணை நடத்துவதும் இந்தத் தேர்வில்தான். மாணவர்கள், பெற்றோர்கள் கைதாகி இருப்பதும் இந்தத் தேர்வில்தான். இப்படி ஒரு தேர்வை எதற்காக நடத்த வேண்டும்?
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. இளைஞரணிச் செயலாளர் தினேஷ் பின்வாலும் அவரது சகோதரர் மன்கிலால் பின்வாலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தில் கடந்த ஆண்டு மட்டும் நான்கு பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்த ஆண்டு தினேஷ் பின்வாலின் மகன் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். கேரளாவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் ராஜஸ்தான் மாணவருக்கு முதலில் இந்தக் கேள்வித்தாள் கிடைத்துள்ளது. அவர் மூலமாக
ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு இது விற்கப்பட்டுள்ளது. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும். அதற்காக தேர்வுகளை ரத்து செய்து கொண்டே போவீர்களா? யாரோ சிலர் செய்யும் தவறுக்காக லட்சக்கணக்கான மாணவர் உயிரோடு விளையாடுவதா?
ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக, சர்ச்சைக்கு இடமில்லாத வகையில், புகார் வராத வகையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானால் நடத்த முடியவில்லை. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 'தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற மாட்டோம்' என இளைஞர்கள் போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று முறை மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை.
ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வு முறையையே ரத்து செய்தாக வேண்டும். மோசடித் தேர்வுக்கு முதலில் முற்றுப்புள்ளி வையுங்கள்.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!