murasoli thalayangam
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
குற்றத்தை மறைக்கும் விஜய் ஆட்சி!
போலீஸ் ராஜ்யம் நடத்தத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
'கடைக்குப் போகிறேன்' என்று (21 ஆம் தேதி) அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி அவர். காணவில்லை. அரைமணி நேரத்தில் அந்தக் குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கி காவல்துறைக்குப் புகார் கொடுக்கிறார்கள். 22 ஆம் தேதி இரவு கண்ணம்பாளையம் குளக்கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் சிறுமி.
இதை அறிந்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிங்காநல்லூர் மருத்துவமனை முன்பும், காவல் நிலையம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோரும் உறவினர்களும் சொன்னார்கள். இப்படி பொதுவெளியில் வெளிச்சம் ஆனபிறகுதான் காவல் துறை செயல்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குற்றவாளிகளும் சிறுமியைத் தேடுவது போல நாடகம்ஆடி இருக்கிறார்கள். பின்னர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பெற்றோருக்குப் போன் செய்த காவல் துறை அதிகாரிகள், 'சிறுமி உயிரோடுதான் இருக்கிறார்' என்று முதலில் சொல்லி இருக்கிறார்கள். பின்னர், ‘சிறுமி இறந்து விட்டார்' என்று சொல்லி இருக்கிறார்கள். காவல் துறையின் முதல் தவறு இது.
இதன் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகும் காவல் துறை அதிகாரிகள் தந்திரமாக நடந்துள்ளார்கள்.
சிறுமியின் தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் மட்டும் பேசி இருக்கிறார்கள். "சிறுமியின் உடலை மருத்துவமனையின் பின் வாசல் வழியாக எங்களுக்குத் தெரியாமல் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் அப்பாவை தனியாக அழைத்துப் பேசி, தாய்க்குக் கூட தெரியாமல் உடலை அனுப்பி வைத்துள்ளார்கள்” என்று சிறுமியின் சித்தி பேட்டி அளித்துள்ளார்.
தடயம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சடலத்தை எரித்துவிட்டதாக தாயார் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தனக்குத் தெரியாமல் தனது குழந்தையின் உடலை எரித்துவிட்டதாக சிறுமியின் தாயார் கதறு கிறார்.
"உடற்கூறாய்வு முடிந்த பிறகு எனது மகளை என் கண்ணில் காட்டவில்லை. பின் வாசல் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று விட்டனர். வாடகைக்கு கார் பிடித்து நாங்கள் மேட்டூர்சென்றோம். எனது சம்மதம் இல்லாமல் என் குழந்தையின் உடலை எரித்து விட்டார்கள். நான் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதால் எரித்துவிட்டார்கள். நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்ன பிறகு என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை ஒப்படைத்துவிட்டார்கள். எதற்காக போலீஸார் இப்படிச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் மேட்டூர் சென்றபோது என்னை அடிக்க வந்தனர். எங்களுக்கு பலர் மீதும் சந்தேகம் உள்ளது” என்று சொல்லி இருக்கிறார் சிறுமியின் தாய்.
”தகவல் அறிந்து நாங்கள் மேட்டூர் சென்ற போது குழந்தையின் சடலம் எரிக்கப்பட்டு இருந்தது. அனைத்துச் சடங்குகளையும் எங்களுக்குத் தெரியாமல் முடித்து விட்டார்கள். சிறுமி கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். கோர்ட் உத்தரவுப்படி உடலைத் தோண்டி எடுக்கக் கூடாது என்பதற்காக எரித்துள்ளார்கள்” என்று சிறுமியின் சித்தி பேட்டி அளித்துள்ளார்.
எதற்காக போலீஸ் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பது தானே அரசு? இப்படிச் சொல்லி ஏமாற்றித்தானே வாக்கு களைப் பெற்றார் விஜய்? சிறுமியின் அம்மாவைப் பார்த்து, 'இவரை மனநல மருத்துவமனையில் சேருங்கள்' என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்லி இருக்கிறார்.
இதுதான் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலாக இருக்கும் முறையா? பேட்டிக்கு முன்னதாக போலீஸ் அதிகாரிகள் சிரித்துக் கொண்டிருந்த காட்சியை ஊடகங்களில் பார்த்தோம். சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து கேட்டபோது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சிரிக்கிறார். இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம்.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. 2020 அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அப்பாவிப் பெண், நான்கு பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இறந்த அந்த பெண்ணின் உடலை அவர்களது குடும்பத்துக்குக் கூட காட்டாமல், தராமல் போலீஸே எரித்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் தந்தையை கடத்தி வைத்துவிட்டு இதனை செய்திருக்கிறார்கள் ;
கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு காட்சியைத் தான் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி வருகிறார் முதலமைச்சர் விஜய்!
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!