murasoli thalayangam
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
திராவிட முன்னேற்றக் கழகம் அடையாத வெற்றியும் இல்லை. சந்திக்காத தோல்வியும் இல்லை. வெற்றி கண்டு ஆடியதும் இல்லை. தோல்வியால் துவண்டதும் இல்லை. வெற்றிகளை மகுடங்களாகக் கருதியது இல்லை. மக்களுக்குக் கடமை செய்யும் வாய்ப்பாகவே கருதியது.
‘பதவி தோளில் கிடக்கும் துண்டைப் போல. கொள்கை என்பது கட்டி இருக்கும் வேட்டியைப் போல’ என்றுதான் தலைவர் கலைஞர் அவர்கள் செயல்பட்டார்கள். அப்படித்தான் கற்பித்தார்கள். பதவியா, கொள்கையா என்றபோது கொள்கையைக் காக்க பதவியையும் தூக்கி எறிந்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். ‘தலையா, தலைப்பாகையா என்றால் தலையைக் காக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றார் தலைவர் கலைஞர் அவர்கள்.
கொள்கைக்காக இயக்கம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், அக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றுதான் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார்கள்.
ஆட்சி என்பது அதிகாரத்தைச் சுவைப்பதற்காக அல்ல, அன்னைத் தமிழினத்தைக் காப்பதற்காக, தனிப்பெரும் தேசிய இனமாம் தமிழினத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக, தமிழ் நல்லுலகை அனைத்து வகையிலும் மேம்படுத்துவதற்காக என்றுதான் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் பாதை போட்டுத் தந்தார்கள். அத்தகைய உயிரோட்ட உணர்வையே கட்சிக்கும் ஆட்சிக்கும் இலக்கணமாக ஆக்கித் தந்தார் திராவிட நாயகன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
2018 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், 2019, 2024 ஆகிய இரண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் முழுமையான வெற்றியைக் குவித்து இந்தியாவின் தனிப்பெரும் கட்சியாக கழகத்தை உயர்த்தினார்கள்.
இன்றைக்கு சமூகநீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, மகளிர் உரிமைகள் ஆகிய கொள்கைகளை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான கொள்கையாக ஆக்கிய பெரும் கடமையை திராவிட முன்னேற்றக் கழகம் செய்ய, அவர் பெற்றுத் தந்த பெருவெற்றியே காரணம் ஆகும். ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வுக்கு கொள்கைக் கடிவாளம் போட்டுத் தடுக்கும் இயக்கமாக தி.மு.க.வை உயர்த்திக் காட்டினார் தலைவர்.
ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர வைத்தார் தலைவர் அவர்கள். பதவிக்கு வந்த நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு திட்டமும் கோடிக்கணக்கான, இலட்சக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாக அமைந்திருந்தது.
1.31 கோடி மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததும், தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணித்ததும், 21 லட்சம் பள்ளி மாணவ,மாணவியர் காலை உணவு சாப்பிட்டதும், 29 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதும், 10 லட்சம் மாணவர்கள் மடிக்கணினி பெற்றதும், 48 லட்சம் மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் தகுதி பெற்றதும் ... என, எத்தனை திட்டத்தைச் சொல்வது? எதனை விடுவது? எந்தத் தனிமனிதனும் விடுபட்டு விடக்கூடாது என்று பார்த்துப் பார்த்துச் செயல்பட்டார். செய்து கொடுத்தார்.
அவர் தனக்குத் தானே பல இலக்குகளை வைத்துக் கொண்டு செயல்பட்டார். அவருக்கு யாரும் இலக்கு நிர்ணயிக்கவில்லை. அந்த இலக்குகள் அனைத்திலும் வென்று காட்டினார். இந்தியாவிலேயே தலை சிறந்த, உன்னதமான மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தினார். தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் பொறாமைப்பட்டார்கள். இன்னும் சொன்னால், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழைப் பார்த்தே பலரும் பொறாமைப்பட்டார்கள்.
‘உங்களில் ஒருவனாகவே’ வாழ்ந்தார். ஒருவேளை, மக்களோடு மக்களாக இருந்ததுகூட தவறா? தூரமாக, எப்போதாவது பார்க்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டுமா?
வாக்களித்த மக்களுக்கு அவர் மிகமிக உண்மையாக இருந்தார். தனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்பட்டார். எதிரிகளும் பாராட்டும் வகையில் இருந்தார். எதிர்க்கட்சிகளால் குற்றம் சொல்ல முடியாத அளவுக்குச் செயல்பட்டார். ஆனாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தமிழ்நாட்டு மக்கள், மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஏன் வாக்களிக்கத் தவறினார்கள்?
“ நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்” என்றார் தலைவர் கலைஞர்.
‘ஏன் வாய்ப்பை மறுத்தீர்கள்?’ என்று கேட்கும் உரிமை கழகத்துக்கு உண்டு. 75 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்த இயக்கம் இது. ஆறு முறை ஆட்சிக்கு வந்து, இன்று நாம் பார்க்கும் தமிழ்நாட்டை உருவாக்கிய இயக்கம் இது.
“நான் முதலமைச்சர் ஆவதற்கோ, 30 பேர் அமைச்சர் ஆவதற்கோ அல்ல, தமிழ்நாட்டின் நலனைக் காக்க திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும்’’ என்றுதான் ஓரணியில் தமிழ்நாட்டைத் திரட்டினார் தலைவர்.
தமிழ்நாட்டின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் எதிரான பா.ஜ.க., கொத்தடிமை அ.தி.மு.க.வை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க. மீது நல்லெண்ணம் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக நடிகர் விஜயை மிரட்டி கட்சி தொடங்க வைத்தது பா.ஜ.க.
இத்தகைய சூழலில் தி.மு.க. நீங்கலாக யார் ஆட்சிக்கு வந்தாலும் அது பா.ஜ.க.வின் ஆட்சியாகத் தான் அமையும் என்று அரசியல் களத்தில் தெளிவுபடுத்தி பரப்புரை செய்யப்பட்டது. இந்த நிலையிலும், பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் இருப்பதை உணர்த்தி விட்டது இத்தேர்தல் முடிவுகள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கான வாய்ப்பை இழந்திருக்கலாம். களத்தை அல்ல. என்றும் கழகமே தமிழ்நாட்டு மக்களுக்கு காப்பரண். பயணிப்போம்.
Also Read
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!