murasoli thalayangam
”மகளிர் இட ஒதுக்கீடு.. தொகுதி மறுவரையறை.. தென் மாநில தயவு தேவையில்லை என்ற எண்ணம்” : முரசொலி விமர்சனம்!
தொகுதி எண்ணிக்கையில் பாகுபாடு!
முரசொலி (14.04.2026)
மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவைக் கேடயமாகப் பயன்படுத்தி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது பாஜக. தொகுதிகளை அதிகரித்தால் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று தொடர்ந்து தென் மாநிலங்கள் கூறி வருகின்றன. அதனை மீறித்தான் இதனைச் செய்யப் போகிறார்கள்.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இப்போது 543 ஆக இருக்கிறது. இதனை 816 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இடங்கள் அதிகரிப்பு 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரலாம்.
வெளியில் தெரியவந்துள்ள பட்டியல் படி தற்போது பாஜக ஆட்சியில் உள்ள வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை 420 ஆக உயரும். அதே நேரத்தில் தென் மாநிலங்கள், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 275 ஆக மட்டுமே உயரும்.
வட மாநிலங்களை வைத்தே தொடர்ந்து ஆட்சியில் இருந்துவிடலாம், தென் மாநிலங்களின் தயவு தேவையில்லை என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து இதனைச் செய்கிறார்கள். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து 48.6 விழுக்காடு இருக்கிறார்கள். அதாவது இந்திய மக்கள் தொகையில் பாதியை இந்த ஐந்து மாநிலங்கள் வைத்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு அதிகமான இருக்கைகள் கிடைக்கும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை முன்பு சொன்ன ஐந்து மாநிலங்களைப் போல அதிகரிக்காது.
தொகுதி மறுவரையறைச் சதியை முன்கூட்டியே, தொடக்கத்தில் இருந்து எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம். தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தையே மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டினார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தையும் கூட்டினார்கள்.
"மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள்தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று 2000வது ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம்ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் உயர்த்த வேண்டும். ஆனால் அதிலும் பாகுபாடு காட்டி உயர்த்தப் போகிறார்கள்.
அதனால் தான், ”இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இரு மடங்காகும் அதேவேளையில் தென்மாநிலங்களின் அளவு 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும்.
இந்த நடவடிக்கையால் கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகிய தென் மாநில முதலமைச்சர்களும் இதனை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இப்போதுள்ள தொகுதி அளவிலேயே வழங்க வேண்டியது தானே? பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டிலும் பாஜக நாடகம் தான் ஆடியது. மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி விட்டதாக பாஜக சொல்லிக் கொள்கிறது.
அந்த சட்டத்தில் என்ன இருக்கிறது என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு - அதனடிப்படையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியானால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், அதனடிப்படையில் தொகுதி மறுவரையறையையும் இவர்கள் செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகி விட்டது. இவை இரண்டையும் செய்யவே பத்து ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு தான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் அதனைக் காரணமாக வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் அதிகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
இன்று உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு 80 தொகுதிகள் இருக்கிறது. அந்த எண்ணிக்கை 120 ஆகப் போகிறது. உத்திரப் பிரதேசத்தையும் சுற்றி இருக்கும் எட்டு வட மாநிலங்களையும் மட்டும் கைப்பற்றினால் போதும் நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.தென் மாநிலங்களின் தயவு தேவையில்லை. இதுதான் தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் இருக்கும் சதிச் செயல் ஆகும்.
தென்னிந்திய மக்களின் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்கும் வகையில் இந்த சதியைச் செய்கிறார்கள். இது வடக்கு - தெற்கு பிளவு அதிகரிக்கவே செய்யும்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
-
மகளிர் இடஒதுக்கீட்டுடன், தொகுதி மறுவரை.. பாஜகவின் பகிரங்க திட்டம்: ராணிப்பேட்டையில் முதலமைச்சர் பேச்சு!
-
“தமிழ்நாடு - தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது!”: திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“டெல்லி இருளை வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் அரசை தொடரச் செய்வோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
உழவர்களை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத் திமிர் : தி.மு.க IT WING கண்டனம்!