murasoli thalayangam
கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!
முரசொலி தலையங்கம்
02.04.2026
கொரோனா காலத்தில் பழனிசாமி!
“கொரோனா இருந்த காலத்திலும் சிறப்பான ஆட்சியை நான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் இப்படி கப்சாக்களை அடித்து விடுகிறார் பழனிசாமி.
கொரோனா பரவிய போது அ.தி.மு.க.வின் பழனிசாமி ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. என்ன செய்தார்கள் என்றால் ஊரடங்கு போட்டுவிட்டு அன்றைய முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர்களும் பதுங்கி விட்டார்கள். அப்போதும் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை தொடங்கி மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கியது தி.மு.க. உணவுப் பொருள் தயாரித்து தந்தது தி.மு.க. தொண்டர்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்த மிக முக்கியமானது தடுப்பூசி தான். அதனைக் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குத் தரவில்லை. பழனிசாமி அதனை துணிச்சலாகத் தட்டிக் கேட்கவும் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் பழனிசாமி, வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.
திராவிட மாடல் அரசு மலர்ந்ததும் தடுப்பூசி செலுத்துவதை மாபெரும் இயக்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றினார்கள். கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பல சிறப்பு முயற்சிகளை அரசு எடுத்தது. மாநிலம் முழுவதும், வாரம் தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தடுப்பூசிக்குத் தகுதியானவர்களில் 8.09 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவிகித மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என்ற குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சி களால் இந்த நிலை மாறி, ஏழே மாதங்களில் 86.95 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 சதவிகித மக்களுக்கு இரண்டாம் தவணையும் என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஓராண்டுக்குள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டு, பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கொரோனா காலத்தில் மின் கட்டணம் அனைத்து வீடுகளுக்கும் அதிகம் ஆனது. 'எல்லோரும் வீட்டில் இருப்பதால் மின் கட்டணம் அதிகம் ஆகிறது' என்று பழனிசாமி விளக்கம் அளித்தார். முந்தைய மாதம் ரூ. 420 கட்டணமாக ஒருவருக்கு இருந்தது. கொரோனா காலத்தில் 5,200 ரூபாய் கட்டணமாக வந்தது. முந்தைய மாதம் வரை ரூ.900 செலுத்தியவருக்கு ரூ.4 ஆயிரம் வந்தது. ஒருவர் வீடு மூன்று மாதமாக பூட்டி இருக்கிறது. அவருக்கு ரூ.9 ஆயிரம் கட்டணம் வந்தது. ஏழை விவசாயி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வந்தது. மின் கட்டணம் மூலம் மக்களிடம் கொள்ளை அடிக்கும் வேலையைச் செய்தது பழனிசாமி ஆட்சி.
அநியாயக் கட்டணம் வசூலித்தது மட்டுமல்ல, அதனைச் செலுத்துவதற்கும் கட்டாயப்படுத்தினார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு மட்டும் சலுகை அறிவித்தார்கள். மற்ற மாவட்டத்து மக்களை ஏமாற்றினார் பழனிசாமி. கொரோனா கொடூரத்திலும் மக்களுக்கு ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்தார் பழனிசாமி.
* கொரோனா பரவுகிறது என்று தெரிந்து முன்கூட்டியே சட்டசபையை ஒத்திவைக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார். அதன் பிறகு ஒத்தி வைத்தார்.
* அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார். அதன்பிறகு அதிக டெஸ்ட் எடுக்கத் தொடங்கினார்.
* வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். பணம் இல்லை என்று மறுத்தார் பழனிசாமி. அதன்பிறகு ரூ.2500 கொடுத்தார்.
* பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யச் சொன்னார் தி.மு.க. தலைவர். அதன்பிறகுதான் ரத்து செய்தார்.
* இ - பாஸ் ரத்து செய்யச்சொன்னார் தி.மு.க. தலைவர். அதன்பிறகுதான் ரத்து செய்தார்.
- இப்படி ஒவ்வொன்றையும் தி.மு.க. சொன்னபிறகுதான் செய்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி.
கொரோனா பரவலின்போது நிதி நிலையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை 27.4.2020 முதல்பழனிச்சாமியால் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஈட்டியவிடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியது 'திராவிட மாடல்' அரசு.
பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவு கடன் வாங்கினார். 'கொரோனா வந்ததால் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது’ என்று சொன்னார். கடன் வாங்கி, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
‘தமிழ்நாட்டில் ஒரே ஒருவருக்கு கொரோனா வந்தால் கூட அம்மாவின் அரசு அவரை காப்பாற்றும்' என்று சட்டமன்றத்தில் சொன்னவர் பழனிசாமி. ஆனால் 38 ஆயிரம் பேர் இறந்தார்கள். கொரோனா வைரஸ் பற்றிய புரிதலே இல்லாமல் முதல் மூன்று மாத காலம் அனைத்து வகையிலும் மறைத்தவர் பழனிசாமி. இறந்தவர் கணக்கில் பொய்க்கணக்குக் காட்டியவர் பழனிசாமி. கொரோனாவில் ஊழல் செய்தவர் பழனிசாமி என்பதை மக்கள் மறக்கவில்லை.
Also Read
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்… எத்தனை துறைகள்… என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம் அறிய!
-
பழனிசாமியின் அரசியல் அனுபவம் இதுதான் : தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!