murasoli thalayangam
”சூப்பர் ஸ்டாராக தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை.. விழி பிதுங்கி நிற்கும் பழனிசாமி” : முரசொலி தலையங்கம்!
தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக ஆக்கியவர், இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகப் போற்றப்படும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை, 'சூப்பர் ஸ்டார் அறிக்கை' என்று அவர் சொல்லி இருக்கிறார். சூப்பர் முதலமைச்சர் வெளியிடும் அறிக்கை ஸ்டார் அறிக்கையாகத் தானே இருக்கும்!
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையே அ.தி.மு.க. அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனவே, தி.மு.க. அறிக்கைக்கு முன்னதாக தனது அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி. இப்போது மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து விழிபிதுங்கிக் கிடக்கிறார் பழனிசாமி.
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம் முதல் மக்களைச் சந்தித்து அவர்களது கருத்தை, கோரிக்கைகளை, கனவுகளைப் பெற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 17 ஆவது சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களது கோரிக்கைகளைப் பெற்று அதனடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரித்து வழங்கி உள்ளது. 96 பக்க அறிக்கையில், பக்கத்துக்குப் பக்கம் ஸ்டார்கள்தான்.
இப்போதைய கழக அரசின் மாபெரும் சாதனை என்பது, ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இதனை மூன்று மாத காலத்துக்கு தடுக்கும் சதியை பா.ஜ.க. செய்ய நினைத்தது. அந்தச்சதியை முறியடித்து 3 ஆயிரம் ரூபாயும், கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.5 ஆயிரத்தை 1.30 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். கொடுக்க நினைத்தால் எப்படியும் கொடுத்துவிடுவோம் என்பதை செயலில் காட்டினார்.ஆயிரம் ரூபாயை இரண்டாயிரம் ரூபாயாக திராவிட மாடல் 2.0 ஆட்சி காலத்தில்உயர்த்தி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
கடந்த முறை பதவியேற்று வந்ததும் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் ஆகும். விடியல் பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 881 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளார்கள். அதன் பயனாக பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மகளிரும்மாதந்தோறும் ரூ.600 முதல் 1200 ரூபாய் வரைசேமிக்கிறார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகம் ஆகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பெண்களை தொழில் முனைவோராக ஆக்க நினைக்கிறார் முதலமைச்சர் அவர்கள். சுய உதவிக் குழு உறுப்பினராகஇருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில்பிணை எதுவுமின்றி ரூ. 5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெண்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் அருமையான திட்டம் ஆகும்.
‘இல்லத்தரசிகள் திட்டம்' இப்போதைய அறிக்கையின் சூப்பர் ஸ்டார் அறிவிப்பு ஆகும்!
"மகளிர் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இல்லத்தரசிகள் தம் வீட்டில் பயன்படுத்தும் வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ்மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாகவாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களுக்குமாற்றாக வாங்கவோ, 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் மேற்கூறியவீட்டு உபயோகப் பொருட்களைவாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம்ரூபாய் கூப்பன் வழங்கப்படும்”என்ற முதலமைச்சரின் அறிவிப்பானது யாராலும் எதிர்பாராதது.
ஒரு குறிப்பிட்ட பொருளை, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மட்டும் கொடுக்காமல், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருளை வாங்கிக் கொள்ள கூப்பன் கொடுத்திருப்பது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 'இந்த அறிக்கை ஹீரோ மட்டுமல்ல; ஹீரோயினும் தான்' என்று முதலமைச்சர் சொன்னது உண்மையில் மிகமிகப் பொருத்தமானது ஆகும்.
கோடிக்கணக்கான பெண்களை இத்திட்டம் மகிழ்விக்கிறது என்றால்,கோடிக்கணக்கான உழவர்களை மகிழ்விக்கிறது பம்பு செட்டுகள் வழங்குவோம் என்ற அறிவிப்பு."கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெருமளவில் நம்பியே இன்றும் தமிழ்நாட்டின் விவசாயம் உள்ளது. இப்பாசனத்தை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்பு களின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்”என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். உழவர்களின்மனங்களை மகிழ்விக்கும் அறிவிப்பு இது. பல்லாண்டு காலமாக மாற்றாமல் பழைய பம்பு செட்டுகளை வைத்திருக்கும் உழவர்களுக்கு இது வான்மழையைப் போன்ற அறிவிப்பு ஆகும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500--ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500 -- ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும். இந்த மூன்றும் உழவர்களை மகிழ்ச்சியில் துள்ளி எழ வைத்துள்ளது.
அனைத்து மக்களது கனவையும் உள்ளடக்கியதாக அரசின் திட்டங்கள் இருக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது இந்த அறிக்கை. கடைக்கோடி மனிதரையும் அரசின் கரங்கள் அரவணைத்துக் காக்கும் என்பதை உறுதி செய்கிறது இந்த அறிக்கை.
திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னால் செய்யும், உறுதியாகச் செய்யும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சொல்லைக் காப்பார் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்கள் மனதில் உள்ளது. அந்த நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.
Also Read
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPIM-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!