murasoli thalayangam

“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!

அறிக்கை என்ற பெயரால் அபத்தக் களஞ்சியத்தை வெளியிட்டு விட்டுப் போயிருக்கிறார் பழனிசாமி. ‘உண்மை, உழைப்பு, உயர்வு என்று நடைபோடும் கடைசித் தொண்டனாம்’ எடப்பாடி பழனிசாமி. தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார்.

அவர் யாருக்கு உண்மையாக இருந்தார். தனக்குப் பதவி கொடுத்த சசிகலாவுக்குக் கூட உண்மையாக இல்லை. ‘நீ ஏன் கட்சியை சொந்தம் கொண்டாடுகிறாய்? எனக்கு பதவி வாங்கிக் கொடுத்தாயா?’ என்று ஒருமையில் கேட்ட பச்சோந்திதான் பழனிசாமி. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் அத்தனை பேரும் உணர்வார்கள்.

இவரைப் பற்றி ஜெயலலிதாவுக்கே நன்கு தெரியும். அதனால் தான் பல முறை அவரது பதவியை ஜெயலலிதாவே பறித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு சேலம் மாவட்டச்செயலாளர் ஆன பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிச்சாமிக்குத் தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப்பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப் பட்டது. 2008 இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது. பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு என்பதை ஜெயலலிதா அறிவார். இதெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இவரது தலைமையை அ.தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை.

‘அ.தி.மு.க.வை கட்டிக் காத்தாராம்’. இதையே அவர் சொல்லிக் கொள்கிறார். ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க. இன்று இருக்கிறதா?

2019 – நாடாளுமன்றத் தேர்தல், 2019 – சட்டமன்ற இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 – ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 – நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 – ஈரோடு இடைத்தேர்தல், 2024 – நாடாளுமன்றத் தேர்தல், 2024 – விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் – ஆகிய அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் தான் பழனிசாமி.

அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அதல பாதாளத்துக்குக் கொண்டு போய் போட்டார் பழனிசாமி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்றவர்தான் பழனிசாமி. தென் சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 7 தொகுதியில் அவருக்கு டெபாசிட் போய்விட்டது.

12 தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு பழனிசாமியின் கட்சி போனது. கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடம் போனது பழனிசாமியின் கட்சி. இவர் தான் அ.தி.மு.க.வை காத்தேன் என்கிறார். ஒருவேளை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை மிச்சம் வைத்திருப்பதால் அ.தி.மு.க.வைக் காத்தேன் என்கிறாரா?

‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்பது இவரது இலட்சியமாம். இவர் முதலமைச்சராக இருந்த போது இல்லாதவர்க்கு ஏதாவது செய்திருப்பாரா? தனது சம்மந்திக்கு செய்தார். சம்மந்தியின் சம்மந்திக்கு செய்தார். மற்றபடி இல்லாதவருக்கு ஏதும் செய்ததாக யாரும் இதுவரை சொல்லவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையாவது நிறைவேற்றினார்களா? என்றால் அதுவும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் அபத்தத்தின் உச்சம் என்பது, ‘மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் மூலம் தமிழக மக்களின் நலனுக்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்’ என்று சொல்லி இருப்பதுதான்.

பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கி வரும் பழனிசாமி, அப்படி எத்தனை திட்டத்தை ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை சீக்கிரம் கட்டித் திறங்கள் என்றாவது ஒரு வார்த்தை சொல்லி இருப்பாரா?

யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதுதானே முக்கியம்? பா.ஜ.க., பழனிசாமிக்கு நன்மை செய்திருக்கலாம். அவரையும் அவரது மாஜிக்களையும் உறவினர்களையும் ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். புலனாய்வு அமைப்புகளின் பிடியில் இருந்து விடுவித்து இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஒரு செப்படிகூட லாபம் இல்லை.

நன்மை செய்யவில்லை என்பதை பா.ஜ.க.வே அறியும். மற்ற மாநிலங்களுக்காவது தேர்தல் நேரத்தில் திட்டங்கள் அறிவிப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு தேர்தல் நேரத்தில் கூட அறிவிப்பது இல்லை. தமிழ்நாடு என்றதும் கல் நெஞ்சாக அவர்களுக்கு மாறிவிடும். அத்தகைய பா.ஜ.க.விடம் கூட்டுச் சேர்ந்து நன்மை செய்யப் போகிறாராம் பழனிசாமி.

‘மாநிலங்களுக்கு உரிய நிதி தர வேண்டும்’ என்று ஒன்றிய அரசிடம் இப்போது கோரிக்கை வைக்கும் பழனிசாமி, ஐந்தாண்டு காலம் முறையாக நிதி தராத ஒன்றிய அரசை ஒருமுறையாவது கேட்டிருப்பாரா?

“இந்த இயக்கத்திற்கு தனிக் கொள்கைகள் உண்டு. மதச்சார்பின்மை, மனிதநேயம், ஏழை எளியோர் மேம்பாடு, சமூக நீதி, சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு போன்றவை எங்களின் உயிர்நாடி. அவற்றில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம். தொடர்ந்து செயல்படுவோம்” என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது யார்? இந்தியா முழுவதும் இசுலாமியர்கள் அந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய போது, ‘எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்’ என்று கேட்டவர்தான் பழனிசாமி. போராடிய இஸ்லாமியர் மீது தடியடித் தாக்குதலை நடத்தியவர்தான் பழனிசாமி.

‘’நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தார்கள், கடன் சுமையில் தள்ளினார்கள்’’ என்கிறது அறிக்கை. ஆனால் தி.மு.க.வின் வாக்குறுதிகளைத்தான் பழனிசாமி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் என்று ‘திராவிட மாடல்’ அரசு எதையெல்லாம் செய்து வருகிறதோ, அதையே காப்பி அடித்து சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. ‘எப்படி இத்தனை திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்?’ என்று கேட்டால், ‘ வரியை ஏற்றுவோம்’ என்று சொன்ன பொருளாதார மேதை தான் பழனிசாமி.

‘நாம்தான் ஆட்சிக்கு வரப்போவது இல்லை, வாய்க்கு வந்ததை அடித்து விடுவோம்’ என்று அபத்தக் குவியலாக ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளார், மக்களிடம் இருந்து தோல்வியை மட்டுமே பரிசாகப் பெற்று வரும் ‘பக்கா தோல்வி’ பழனிசாமி.

Also Read: திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!