murasoli thalayangam
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் ஆலோசனை நடத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரான் போர் பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றுள்ளது.
போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உரத் தொழில் சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. உரம் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் வரும் சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு மாற்று உரம் உறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டம் ஆலோசனை நடத்தி உள்ளது.
அதே போன்று எரிவாயு பயன்படுத்தும் தொழில் சாலைகளுக்குத் தொடர் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் அவசியமான, முக்கியப் பொருள்களின் பதுக்கல் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அவர்கள் பேசி இருக்கிறார்கள். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு ரமலான் வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் போர் நடைபெற்று வரும் சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றாலும் மற்ற நாட்டுக் கப்பல்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவையும் பாதிக்கிறது. இதுவரை இரண்டு முறை ஈரான் அதிபருடன் இந்தியப் பிரதமர் பேசி இருக்கிறார்.
ஈரான் அதிபருடன் பேசிய இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரிடம் பேச வேண்டாமா? இஸ்ரேல் நாட்டுத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா?
உண்மையில் போரைப் பற்றி விரிவான ஆலோசனையை ஒன்றிய அமைச்சரவை செய்திருக்க வேண்டும். விளைவுகளைப் பற்றி அவர்கள் பேசி இருக்கிறார்கள். காரணத்தை தடுக்கும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஏனென்றால், இந்தப் போர் மிக மோசமானதாகப் போய்க் கொண்டு இருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் வழித் தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டது ஈரான். இதுதான் எரிவாயு நெருக்கடிக்குக் காரணம் ஆகும். இதனை எரிவாயு நெருக்கடியாக மட்டும் பார்க்கக் கூடாது. எரிவாயு நெருக்கடியை விட மோசமானது போர். அந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு வெளிப்படையாக எடுக்க வேண்டும்.
எரிவாயு நெருக்கடி மட்டுமல்ல; போர் நெருக்கடியும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதுதான் உண்மை. ஈரான் நாட்டைச் சேர்ந்த போர்க் கப்பல், இங்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்றது. அப்பயிற்சியை முடித்துவிட்டு ஈரான் நாட்டுக்கு அக்கப்பல் திரும்பிக் கொண்டு இருந்தது. இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அப்பால் ஈரான் போர்க்கப்பல் சென்று கொண்டிருந்த போது அதனை அமெரிக்கா தனது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தான் இது நடந்தது. இது மிகமிக மோசமான செயல் அல்லவா?
இதற்குப் பதிலடியாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு விமானத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி ஈரான், 2 ஏவுகணைகளை வீசி உள்ளது. ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தளத்தை குறி வைத்து உள்ளது. எந்தளவுக்கு அதி நவீன ஆயுதங்கள் இப்போரில் பயன்படுத்தப் படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். போர் விரிவடைவதன் அடையாளமாகவும் இதனை நாம் பார்க்க வேண்டும்.
ஈரான் நடான்ஸ் பகுதியில் உள்ள அந்த நாட்டின் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘எங்கள் ஏவுகணைகளை இஸ்ரேலால் இடைமறிக்க முடியவில்லை' என்று ஈரான் சொல்லி இருக்கிறது.
ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 48 மணி நேரக் கெடு விதித்துள்ளார். 48 மணி நேரத்துக்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார் டிரம்ப். ஈரான் போரின் இறுதி இலக்குகளை நெருங்கி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 'போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது' என்று இஸ்ரேல் ராணுவத் தளபதி இயல்ஜமீர் சொல்லி இருக்கிறார். 'இஸ்ரேல் வெற்றி பெறும் வரை போர் நீடிக்கும்' என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது. இது இந்தியாவையும் பாதிக்கும் போராக மாறுவதற்கு முன் தடுத்து நிறுத்தும் கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!