murasoli thalayangam

“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6- ஆம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் நாளன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கேரளா, அசாம், புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம்தேதி நடைபெறுகிறது. மே முதல் வாரத்தில் மீண்டும் முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்அத்தகைய முடிவெடுத்தே வாக்குப் பதிவு நாளுக்குக் காத்திருக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 14 வயதில் இருந்து தமிழ் மக்களுக்காக உழைத்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைக்காக தனது வாழ்க்கையை ஒப்படைத்துள்ளார்.

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. அமைப்பாளராக, ஆயிரம் விளக்கு பகுதிக் கழகப் பிரதிநிதியாக, இளைஞரணி அமைப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக, இன்று கழகத் தலைவராக இயங்கி வருகிறார்.

சென்னை மாநகரத்தின் மேயராக சட்டமன்ற உறுப்பினராக மாநிலத்தின் அமைச்சராக, துணை முதலமைச்சராக எதிர்க்கட்சித் தலைவராக இன்று முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார். இத்தகைய அரசியல் வரலாறும், வளர்ச்சியும், தொண்டும், வாழ்க்கையும் முதலமைச்சராக நினைக்கும் மற்ற யாருக்காவது உண்டா என்றால் கிடையாது. இதில் பாதிகூட கிடையாது. கால் பங்கு கூட இருக்காது. இத்தகைய உழைப்பின் அடையாளமாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகுநடைபெற்ற அனைத்துத் தேர்தலிலும் வென்று காட்டி இருக்கிறார். எதிரிகளுக்குத்தோல்வியையே பரிசாகக் கொடுத்துள்ளார். கழகத் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தை சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற வைத்தது அவரது வெல்லும் வரலாறு ஆகும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் அமைத்த 'திராவிட மாடல்' ஆட்சியானது தமிழ்நாட்டை அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக ஆக்கிவிட்டது.

“2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்ற போது ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. அதனை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா என்ற கவலைதான் எனக்கு இருந்தது.

முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. அதனைச் சரி செய்தாக வேண்டும். நமக்கு மேலே இருக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைக்காத ஒரவஞ்சனை அரசாக இருந்தது.

இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான்எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள் ஆகும். அத்தகைய சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன். ஆனால் இப்போது ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில்நான் இப்போது சொல்கிறேன்... நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள்மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் துணிச்சல் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தான் உண்டு.

கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு என்ற உயரிய பொருளாதாரவளர்ச்சியை தமிழ்நாடு எட்டி இருக்கிறது என்பதுதான் 'திராவிட மாடல்' ஆட்சியின்மகத்தான சாதனையாகும். மகுடம் என்று சொல்லத்தக்க சாதனை ஆகும்.

கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாடு இத்தகைய வளர்ச்சியை அடைவது இதுவே முதல்முறை. இந்தியாவில் எந்த மாநிலமும் இத்தகைய வளர்ச்சியைப் பெறவில்லை. ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில்தான் இது இருக்கிறது. இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024-25 ஆகிய ஆண்டில் 6.5 விழுக்காடாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. இதுதான் தமிழ்நாட்டின் வெற்றியாகும். இதைச் சொல்வது ஒன்றியஅரசு தான். நாம் அல்ல.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தது மட்டுமல்ல; தனது திட்டங்களின் பயனை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்த்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள். எல்லாத் திட்டமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துவிட்டது. அதனால்தான் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்.

சமூக வலைதளத்தில் பேட்டி அளிக்கும் பொதுமக்கள் அனைவரும், 'மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரணும்' என்று சொல்கிறார்கள். 'நான் போன முறை அவருக்கு வாக்களிக்கவில்லை, இந்த தடவை அவருக்குத் தான் வாக்கு' என்று உண்மை உணர்வோடுபேட்டி அளித்து வருகிறார்கள்.

ஐம்பது ஆண்டு கால பொதுவாழ்க்கை அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடியது - தனது ஆளுமைத் திறத்தால் தொடர் வெற்றிகள் - பதினைந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஐந்து ஆண்டுகளில் செய்து காட்டிய நிர்வாகத் திறன் - அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலினையே மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என்று மக்கள் உறுதி எடுத்துவிட்டார்கள். அதற்காக உழைப்போம்.

Also Read: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!