murasoli thalayangam

நாடு முழுவதும் LPG சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு! - மேற்காசிய போரை நிறுத்த முரசொலி அறிவுறுத்தல்!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும், அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தும் தாக்குதலும், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.

போர் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்.பி.ஜி. உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்.பி.ஜி.யை இறக்குமதி செய்ய முடியவில்லை.

அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இந்தியாவின் எல்.பி.ஜி. இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், சமையல் கேஸ் (எல்.பி.ஜி.) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தான், தமிழ்நாடு விடுதி உரிமையாளர் நலச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் டீ, காபி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவை வழங்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறது.

அதேபோல, சாம்பார் மற்றும் குருமாவுக்குப் பதில் சட்னி வழங்கப்படும் எனவும் கலவை சாதங்கள், முட்டை போன்ற குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவுகள் மட்டுமே கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாற்று வழிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டுப்பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தடையின்றி காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது.

“வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, சமையல் கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி எல்.பி.ஜி. சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான உள்நாட்டு சாராத் துறைகளுக்கு அதன் இருப்பை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மற்ற உள்நாட்டு சாராத் துறைகளிடமிருந்து வரும் கோரிக்கைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் செயல் இயக்குநர்களைக் கொண்ட ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் தகுதி, அவசியம் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய தன்னிச்சையான போரே இதற்கு அடிப்படைக் காரணம் ஆகும். இதுதான் மேற்கு ஆசியாவைத் தாண்டிய உலகப் பாதிப்பாக மாறி வருகிறது. இதுபோன்ற பாதிப்புகளை முன்கூட்டியே ஒன்றிய பா.ஜ.க. அரசு கணித்ததாகத் தெரியவில்லை. முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகம் இத்தகைய நெருக்கடியைச் சந்திக்கும் என போர் நடத்தும் நாடுகளுக்கு எச்சரிக்கை செய்யவும் இல்லை.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை நீக்க துரிதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட வேண்டும். போர் சூழலை உருவாக்கிய நாடுகளுக்கு அழுத்தம் தர வேண்டும். போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Also Read: இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் - முழு விவரம்!