murasoli thalayangam
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!
முரசொலி தலையங்கம்
07.03.2026
நிதிஷ்குமாரின் கதியைப் பாருங்கள்!
பத்து முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரைப் பந்தாடிவிட்டது பா.ஜ.க. அவரையே ஆக்ஸிஜனாக வைத்து வளர்ந்த பா.ஜ.க., இப்போது அவரது இருதயத்தையே பறித்து உறுப்புகளை மாற்றி விட்டது. ‘எல்லாம் அவரால்’ என்று சொல்லப்பட்ட நிதிஷ்குமார், நிர்கதியாக டெல்லிக்குப் போகப் போகிறார். இதைத் தான் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்பார்கள்.
மகாபாரதக் கதையில் ஒரு காட்சி...
பாரதப் போர் முடியும்போது பாண்டவர்கள் திருதராஷ்டிரனிடம் வணக்கம் சொல்ல வருவார்கள். பீமனை அணைத்து அழிக்க திருதராஷ்டிரன் திட்டமிடுவார். ‘பீமா வா, உன்னை கட்டிப் பிடிக்க வேண்டும்’ என்று திருதராஷ்டிரன் கூப்பிடுவார். கிருஷ்ணனுக்கு திருதராஷ்டிரனைப் பற்றித் தெரியும் என்பதால் பீமன் போல ஒரு வெண்கலச் சிலையை செய்து திருதராஷ்டிரன் முன் நிறுத்துவார். ஒரே தழுவலில் அந்தச் சிலையை சுக்குநூறாக நொறுக்குவார் திருதராஷ்டிரன். இதற்குப் பெயர்தான் ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்று பெயர். அந்தக் கதிக்குத் தான் ஆளாக்கப்பட்டுள்ளார் நிதிஷ்குமார். அது கதை. இப்போது நிதிஷ்குமாருக்கு நடந்திருப்பது உண்மை.
கடந்த நவம்பர் மாதம் பீகாரில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பா.ஜ.க. 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வென்றன. நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வரானார்.
பீகார் தேர்தலின்போது, நிதிஷ் குமார் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறி பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. அதனால் தான் ஆட்சிக்கு வந்தது அக்கூட்டணி. ஆனால் மூன்றே மாதத்தில் நிதிஷின் பதவியைப் பறித்துவிட்டது பா.ஜ.க.
இந்நிலையில் தான் தற்போது நிதிஷ் குமார் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்குள் நுழைகிறார். பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. இதற்கு நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம். மோடி அமைச்சரவையில் அதிகாரமற்று நிதிஷ்குமாரை உட்கார வைக்கப் போகிறார்கள்.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் அரியணை ஏற இருக்கிறார். பீகார் மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜ.க.வின் ஆட்சி அமைய உள்ளது. பீகாரில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமைந்ததே இல்லை. முதல்வராக ஒருவர்கூட பா.ஜ.க.வில் இருந்தது இல்லை.
1974 ஆம் ஆண்டில் இருந்து பீகார் மாநில அரசியலில் இருப்பவர் நிதிஷ் குமார். முதல்முறையாக 2000ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு முதல்வரானார்.
இதுவரை 10 முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அவரையே முடக்கிவிட்டது பா.ஜ.க. மோடியை மிகக்கடுமையாக தொடக்க காலத்தில் இருந்து எதிர்த்தவர் நிதிஷ்குமார். அந்த அரசியலை ஒழுங்காகச் செய்யாததன் விளைவைத் தான் நிதிஷ்குமார் இப்போது அனுபவிக்கிறார்.
2014ஆம் ஆண்டில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தபோது பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்டவர் நிதிஷ். பின்னர் அவரே அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு மோடிக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் முதல் தலைவராக இருந்தவரும் நிதிஷ் தான். ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் மிகச்சிறப்பாக நடத்தியவரும் அவர்தான். திடீரென பின்வாங்கினார் நிதிஷ். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். 2025 பீகார் சட்டசபைத் தேர்தலில் பாதிக்கு பாதி இடங்களை நிதிஷ்குமாரிடம் பறித்தது பா.ஜ.க. இப்போது அவரிடம் இருந்து முதலமைச்சர் பதவியையே பறித்துவிட்டது பா.ஜ.க.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே அந்தப் பதவியை விட்டு விலகி ராஜ்யசபா எம்.பி.யாக நிதிஷ் குமார் முடிவெடுத்திருப்பது அவரது விருப்பம் அல்ல, கட்டாயம் ஆகும். ‘எப்போதும் பீகாரிகளுக்காகப் பாடுபடுவேன்’ என்று கூறிவந்த அவர், அவர்களை விட்டுவிட்டு டெல்லிக்குப் போனது நிர்ப்பந்தமே தவிர வேறல்ல. பா.ஜ.க.வைச் சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்க, நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை பலியிடப்பட்டது. பா.ஜ.க.வுக்கு பாதசேவை செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணங்கள் மகாராஷ்டிராவும் பீகாரும்.
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசை உடைத்தார்கள். சிவசேனாவை உடைத்தார்கள். உடைத்து வந்தவர்கள் இப்போது பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக மாறிக் கிடக்கிறார்கள். 2024 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடத்தப்பட்டது. ஆனால், ‘மகாயுதி’ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, பா.ஜ.க–வின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஷிண்டே துணை முதலமைச்சராகத்தான் ஆனார். அஜீத் பவார் மர்மமான முறையில் மறைந்தும் போனார். மறுநாளே அவர் மனைவி துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டுவிட்டார். பா.ஜ.க. ஆட்சி தொடர்கிறது. இதுதான் மராட்டியத்தின் இன்றைய அரசியல்.
நிதிஷ் குமார் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவர்களால் என்ன செய்ய முடியும்? இதனைத்தான் பீகார் மாநிலத்தில் இருந்து தேஜஸ்வீ அபாய எச்சரிக்கை செய்துள்ளார்.
‘’கூட்டணிக் கட்சிகளை ஹைஜாக் செய்வதுதான் பா.ஜ.க.வின் வாடிக்கை. நிதிஷ்குமாரின் கட்சியை பா.ஜ.க. ஹைஜாக் செய்துவிடும் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன். கூட்டணிக் கட்சிகளை அழிப்பது பா.ஜ.க.வின் வாடிக்கையாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. என தங்களுடன் கூட்டணி வைப்பவர்களை அழிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. பீகாரில் நிதீஷ்குமார் பதவி விலகுவது தமிழ்நாட்டுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது’’ என்று தேஜஸ்வீ மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
நாம் சொன்னால் எடப்பாடி பழனிசாமி கேட்க மாட்டார். இதோ நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி.
Also Read
-
“கழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநாடு...” - வரலாற்று சுவடுகளோடு முதலமைச்சர் மடல்!
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!