murasoli thalayangam
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
காரைக்காலில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாய்க்கு வந்ததை அள்ளிவிட்டுள்ளார். ‘புதுச்சேரியில் இரட்டை எஞ்சின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாகி உள்ளது' என்று அமித்ஷா சொன்னது முக்கியமான அல்வா ஆகும். இதைக் கேட்டதும் புதுச்சேரி மக்களை விட அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி தான் அதிகம் சிரிக்கிறார். ‘அப்படியா? அந்த எஞ்சின் எந்த ஷெட்டில் நிற்கிறது? எந்தப் பாதையில் ஓடுகிறது?' என்று அவர் கேட்டிருப்பார்.
பிரதமர் நரேந்திரமோடி, புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆகிய இரட்டை எஞ்சின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லவே நான் வந்திருக்கிறேன்" என்ற பீடிகை போட்டு பொய் மூட்டைகளை அவிழ்த்திருக்கிறார் அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய அரசு புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்யாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சராக ரங்கசாமி இருந்தாலும், அவரை நிம்மதியாக ஆள விட்டதா பா.ஜ.க.? துணை நிலை ஆளுநர்கள் மூலமாக அவருக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஏற்கனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ரங்கசாமி. அப்போதெல்லாம் நிம்மதியாக ஆண்ட அவர், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பிறகு அவரது நிம்மதி போனது. ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு முன்பே, “ நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டும். ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் கேட்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும். நாம் நினைத்தபடி புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த முடியவில்லை.
தொழில் செய்ய அனுமதி விரைவாகக் கிடைக்கவில்லை என்பதால் புதுச்சேரி வருவதற்கே அச்சப்படுகின்றனர். புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க நினைத்தேன். இதுவரை அதற்காக எதுவும் செய்ய முடிந்ததா? இல்லை. நிர்வாகச் சிக்கலே இதற்குக் காரணம்” என்று வருத்தப்பட்டார் ரங்கசாமி. இப்படித்தான் வைத்திருந்தார்கள் ரங்கசாமியை.
புதுச்சேரி மக்களின் முக்கியமான கோரிக்கையே மாநிலத் தகுதி பெறுவதுதான். அதற்கு துளிகூட முயற்சி எடுத்ததா ஒன்றிய மோடி அரசு? இல்லை. தன்னை வந்து சந்தித்தவர்களிடம், “எனக்கு நாள்தோறும் மன உளைச்சல் தான் ஏற்- படுகிறது. புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை” என்று ரங்கசாமி புலம்பியதாகச் செய்திகள் வந்ததே! அதனை அறிவாரா அமைச்சர் அமித்ஷா?
ஆளுநர், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என்பதை பலமுறை புலம்பினாரே ரங்கசாமி. சுகாதாரத் துறை இயக்குநர் நியமனத்தில் தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்பதால் மூன்று நாட்கள் சட்டசபைக்கே செல்லாமல் இருந்தார் ரங்கசாமி. புதுவை மக்களைப் போலவே தொல்லைக்கு மேல் தொல்லை அனுபவித்தவர் அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி. இதைத்தான் சூப்பரான ஆட்சி என்கிறார் அமித்ஷா.
மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் பிரச்சினை தீர்க்கப்பட்டதா?பாப்ஸ்கோ (PAPSCO) மற்றும் பாசிக் (PASIC) ஆகிய நிறுவனங்களை மீண்டும் சீரமைத்து, ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பல ஊழியர்களுக்குச் சம்பளப் பாக்கி தீர்க்கப்படாமல் உள்ளது.
ஏ.எப்.டி (AFT) பஞ்சாலைகளைத் திறந்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இலவச அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நியாய விலைக்கடைகளை (Ration Shops) மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. பலமுறை இதற்கான முயற்சிகள் எடுக்- கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இன்னும் முழுமையாக அனைத்துக் கடைகளும் செயல்படத் தொடங்கவில்லை.
அரசுத் துறைகளில் உள்ள சுமார் 10, 909-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. சில துறைகளில் தேர்வுகள் நடந்தாலும், பெரும்பாலான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்குவதில் தேக்கம் நிலவு கிறது. நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை நடத்தவில்லை. மின்துறை தனியார் மயமாக்கப்படுவதைத் தடுப்போம் என்று கூறிவிட்டு, தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஊழியர்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சமீபத்தில் மருந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்- கப்பட்ட சில மருந்துகள், அவற்றின் காலாவதி தேதி (Expiry Date) முடிந்த பிறகும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய சோதனை யில், புதுச்சேரி அரசு கொள்முதல் செய்த சில மருந்துகள் "தரமற்றவை” (Not of Standard Quality) என வகைப்படுத்தப்பட்டன. அரசு மருத்துவமனை களில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அடிப்படை மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளிகள் தரப்பில் தொடர் புகார்கள் வந்தன. மருந்துகள் இருந்தும் அவை முறையாக விநியோகிக்கப் படவில்லை
அல்லது கணக்கில் காட்டப்படவில்லை என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டபோதும் முறையான பதில் இல்லை.
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களை காவல் துறையை ஏவி அடித்துக் கொலை வெறித்தாக்குதல் நடத்தி, அவர்கள் மீதே வழக்குப் போட்டது தான் என்.ஆர். பா.ஜ.க. இரட்டை எஞ்சின் செயல்பாடு ஆகும். 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட அவலத்தையும் மக்கள் மறக்கவில்லை. இரட்டை எஞ்சின் என்பது புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!