murasoli thalayangam

“அ.தி.மு.க - பா.ஜ.க.வின் டெபாசிட்டுக்கு ஆபத்து வந்துவிட்டது! பரிதாபமாக இருக்கிறது!” : முரசொலி தலையங்கம்!

மகாபாரதத்தில் குந்தியை நினைத்து காந்தாரி கதறியதைப் போல அரசியல் களத்தில் சில கயமைக் குரல்கள் கேட்கின்றன. அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயை வழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3,000 ரூபாயைக் கொடுக்கச் சொல்லிவிட்டார் முதலமைச்சர். அத்தோடு கோடைக்காலச் சிறப்புத்தொகுப்பாக .2,000 ரூபாயும் கொடுக்கச் சொல்லி விட்டார். இதன்படி 1.31 கோடி மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் பிப்ரவரி 13 போய்ச் சேர்ந்துவிட்டது.

1.31 கோடி மகளிர் இப்போது ஆயிரம் ரூபாயை மாதம் தோறும் உரிமைத் தொகையாக பெற்று வருகிறார்கள். "திராவிட மாடல் 2.0ஆட்சியில் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்" என்றுஅறிவித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர்.

இது போன்ற திட்டங்களை முடக்க பா.ஜ.க. சதி செய்தது. இத்திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்து விட்டார் முதலமைச்சர்.

  • ரூ.5 ஆயிரம் வரவு வைத்தது.

  • ரூ.2 ஆயிரம் என வாக்குறுதி அளித்தது.

  • திட்டத்தை முடக்கும் சதியை முறியடித்தது.

மூன்று ஆகப்பெரும் செயல்களைச் செய்து விட்டார் முதலமைச்சர் அவர்கள். இதுதான் இவர்களைக் கதற வைக்கிறது.

அதைவிட முக்கியமாக யாருக்கும் முன்கூட்டியே தெரிய வாய்ப்பு இல்லாமல் ரகசியமாக இப்பணிகளை முடித்து விட்டார் முதலமைச்சர் அவர்கள். மகளிருக்கு வங்கிக் கணக்கில் பணம் போய்ச் சேர்ந்த பிறகுதான் அனைவருக்கும் தெரியும்.

'தோல்வி பயம்' என்கிறார் பழனிசாமி. எட்டு ஆண்டுகளாக நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அது வருமா? பத்துத் தேர்தல்களாக தோல்வியை மட்டுமே தழுவி வருபவர் பழனிசாமிதான். அவர்தான் முதலில் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்றார். ஏமாற்றிவிட்டார்கள், அல்வா கொடுத்துவிட்டார்கள் என்றார். கொடுக்கத் தொடங்கியதும் எல்லாருக்கும் கொடுக்கவில்லை என்றார்.

பின்னர், அவரே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தார். இப்படி அவரைத் தூங்கவிடாமல் விரட்டிக் கொண்டிருந்ததுதான் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம்.

பா.ஜ.க.வின் சதியால் மூன்று மாதங்களுக்கு தடை போட நினைத்தார்கள். அதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட முதலமைச்சர் அவர்கள் முன்கூட்டியே ரூ.3 ஆயிரத்தை வழங்கிவிட்டார். ரூ.2 ஆயிரத்தை கோடைகால சிறப்பு நிதியாகவும் கொடுத்துவிட்டார். சமூக வலைத்தளத்தை திறந்தால் பல்லாயிரக்கணக்கான மகளிர் முதலமைச்சருக்குத்தான் பாமாலை தொடுத்து வருகிறார்கள்.

வள்ளல் என்றும் கடவுள் என்றும், மகாராசன் என்றும் புகழ்கிறார்கள் பெண்கள். அனைத்துப் பெண்களின் அன்பு மனிதராக ஆகிவிட்டார் முதலமைச்சர். ஐயோ பாவம், பழனிசாமி என்ன செய்வார்? அடிவயிற்றில் காந்தாரியைப் போல அடித்துக் கொள்கிறார். அதைத் தவிர என்ன செய்ய முடியும்?

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கஜா புயல் ஏற்பட்டது. 2,000 ரூபாய் தரப்போவதாக அன்றைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னார். தேர்தல் முடிந்த பிறகு 2000 ரூபாயை மறந்துவிட்டார் பச்சைப் புளுகு பழனிசாமி. அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னபோது, 'அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது?' என்று பழனிசாமி கேட்டார். தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும்,

4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தவர்தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 13 விதமான மளிகைப் பொருட்களையும் சேர்த்துக் கொடுத்தார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று நிரூபித்தார் முதலமைச்சர் அவர்கள்.

பழனிசாமியை விடப் பெரிய பொய்யர்கள்தான் ஒன்றிய பா.ஜ.க.வினர். கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து கூட விடாத ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று சொன்னார்கள் மோடியும், அமித்ஷாவும். இதுவரை கருப்புப் பணத்தையும் மீட்கவில்லை. ரூ.15 லட்சமும் போடவில்லை. 15 ரூபாயைக் கூட போடவில்லை.

இதைப் பற்றிக் கேட்டபோது 'ஜூம்லா' என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதாவது 'சும்மா சொன்னோம்' என்று கூலாகச் சொன்னார் அமித்ஷா. இத்தகைய கூட்டம்தான் இப்போது முதலமைச்சரின் நடவடிக்கையைப் பார்த்து எரிச்சல் அடைகிறது.

பொருளாதாரக் கவலை எல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு வந்துள்ளது. லட்சம் கோடிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தூக்கிக் கொடுத்த அரசு பா.ஜ.க. அரசு. அப்போது எல்லாம் இவர்களுக்கு அந்தக் கவலை வராது. கோடிகளில் கடன் வாங்கி, அதைக் கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்ப விடும் அரசு பா.ஜ.க. அரசு. அப்போது பொருளாதாரக் கவலை வராது. ஏழை எளிய பெண்களுக்கு, அன்றாடச் செலவுக்கு, அவசியமான செலவுகளுக்கு பணம் கொடுத்தால் உடனே, 'கஜானா கவலை' வந்துவிடு-கிறது.

‘டெபாசிட் ஆவது வாங்குவோம்’ என்ற நினைப்பில் இருந்தனர் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்டவர்கள். இப்போது அந்த டெபாசிட்டுக்கும் ஆபத்து வந்துவிட்டது. அதனால்தான் கதறுகிறார்கள். கதறுங்கள். கதறட்டும்.

Also Read: 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!