murasoli thalayangam

“பா.ஜ.க. வந்­தால் பற்றி எரி­யும்… மீண்டும் வந்தால் மீண்டும் எரியும்!” - முரசொலி தலையங்கம் விமர்சனம்!

முரசொலி தலையங்கம் (09.02.2026)

பா.ஜ.க வந்தால் பற்றி எரி­யும்...

பா.ஜ.க. வந்­தால் பற்றி எரி­யும் என்­ப­தற்கு நிரந்­த­ர­மான எடுத்துக்காட்டாக இருக்­கி­றது மணிப்­பூர் மாநி­லம்.

மூன்று ஆண்டுகளாக எரிகிறது மணிப்பூர். பா.ஜ.க. ஆளும் மாநிலம் அது. வன்முறையை அடக்க முடியாத நிலையில் ஆட்சியை விட்டு விலகினார் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங். உண்மையில் பார்த்தால் அந்த ஆட்சியையே கலைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. தலைமை. சட்டமன்றத்தை முடக்கி வைத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்னால் மணிப்பூர் சட்டமன்றத்தை மீண்டும் செயல்பட வைத்தது பா.ஜ.க. தலைமை. மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. லேசான அமைதி சிதைந்து, மீண்டும் பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது.

மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறினார்கள். காவல் துறை மொத்தமாக செயல் இழந்தது. காவல் நிலையங்களில் இருந்த துப்பாக்கிகளை வன்முறை கும்பல் எடுத்துச் சென்றது. துப்பாக்கிகளைக் கொண்டு வந்து கொடுங்கள் என்று காவல் துறை அறிவித்த அவலம் மணிப்பூரில்தான் நடந்தது.

பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன்சிங், செயல்படாமல் இருந்தார். பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தலைமையிடம் பா.ஜ.க. மாநில அரசையே குறை சொன்னார்கள். அதன்பிறகுதான் அக்கட்சியின் முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகினார். ஒன்று வேறு முதலமைச்சரை அப்போதே தேர்வு செய்திருக்க வேண்டும். அல்லது அந்தச் சட்டசபையை முழுமையாக கலைத்திருக்க வேண்டும்.

மிகத் தந்திரமாகச் செயல்பட்டது பா.ஜ.க. தலைமை. எதிர்ப்புகளைச் சமாளிக்க இருந்த முதலமைச்சரை பதவி விலக வைத்து விட்டு, சட்டசபையை எப்போது வேண்டுமானாலும் செயல்பட வைத்து, பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் உருவாக்க நினைத்தார்கள்.

ஆறு மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சி அமல் ஆனது. பின்னர் மீண்டும் ஆறு மாதத்துக்கு நீட்டித்தார்கள். கலவரம், வன்முறை ஓய்ந்துவிட்டதாக நினைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்தது.

மெய்தி, குகி இனங்களை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் கருத்து கேட்டார். பின்னர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. முதல்வர் பொறுப்பை ஏற்கும் வகையில், சட்டசபை தலைவராக ஒய்.கெம் சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

குகி சமூகத்தை சேர்ந்தவர்கள், பா.ஜ.க. தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர்.

போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்ததோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, குகி பழங்குடியின எம்.எல்.ஏ. என்.சனதே, ஜோ ஹமர் பழங்குடியின எம்.எல்.ஏ. எல்.எம்.காவுதே ஆகியோர் உடன் இருந்தனர். சட்டசபை கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இதனை அந்த இன மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். குகி, ஜோ ஹமர் பழங்குடியினத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. கைகளில் கட்டைகளை ஏந்திக்கொண்டு மாவட்ட தலைநகரில் வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள் போராட்டக்காரர்கள்.

துய்போங் வனத்துறை கேட் அருகே வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கும்பல் கற்களை வீசியது. அதனால், பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைத்தனர். அதிகாலைவரை மோதல் நீடித்தது.

20 மாதங்கள் கழித்துதான் பதவி விட்டு விலகினார் முந்தைய முதலமைச்சர் பிரேன்சிங். இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே வன்முறை அரங்கேறி இருக்கிறது. புதிய அரசில் இணைந்துள்ள குக்கி எம்.எல்.ஏக்களை ”சமூகப் புறக்கணிப்பு” செய்ய வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 'அடுத்து நடக்க இருக்கும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு' என்று அறிவித்துள்ளார்கள். எனவே வன்முறை இப்போதைக்கு நிற்கும் எனத் தெரியவில்லை.

மணிப்பூரில் எப்படியாவது பா.ஜ.க. ஆட்சி அமைத்து விட வேண்டும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க முயலவில்லை. உண்மையான பிரச்சினை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற எந்த ஆலோசனையும் செய்யவில்லை.

மணிப்பூர் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு, வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கு எதையும் செய்யவில்லை. காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரால், மலைவாழ் மக்களை வதைத்தார்கள்.

மலைவாழ் மக்களது வாழுமிடங்களில் உள்ள வீடுகளை இடித்தார்கள். மலைவாழ் மக்கள் கஞ்சா பயிரிடுவதாகச் சொல்லி தொடர்ந்து ஒடுக்கினார்கள். பா.ஜ.க.வைச் சேர்ந்த மலைவாழ் இன எம்.எல்.ஏ.க்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட பா.ஜ.க. தலைமை செவிமடுக்கவில்லை. பிறகு எப்படி அமைதி திரும்பும்?

பா.ஜ.க. இருந்தால் எரியும், மீண்டும் வந்தாலும் எரியும் என்பதைத்தான் மணிப்பூர் காட்டுகிறது.

Also Read: “ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !