murasoli thalayangam
பெண்கள் பாதுகாப்பு பற்றி எப்படி பிரதமரால் வாய் திறந்து பேச முடிகிறது? : முரசொலி சாடல்!
முரசொலி தலையங்கம் (29-01-2026)
அந்தப் பெண் இறந்தது தெரியுமா பிரதமரே?
பெண்கள் மீதான வன்முறை தமிழ்நாட்டில் அதிகம் நடப்பதைப் போல ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க - அ.தி.மு.க அணி நினைக்கிறது. அதனைத்தான் தனது உரையிலும் பிரதமர் மோடி சொல்லிச் சென்றுள்ளார். அவர் இந்தியாவுக்கே பிரதமர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கே, எந்த மாநிலத்தில் அதிகம் நடக்கிறது என்று கேட்டால் மறுநொடியே அவரது மேசைக்கு புள்ளிவிபரங்கள் கொண்டு வந்துகொட்டப்பட்டு விடும். அதன் பிறகு அவரால் வாயைத் திறந்து பேச முடியாது.
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போது, ”பாலியல் வல்லுறவுகளைப் பற்றி கேள்விப்படும்போது வெட்கத்தால் தலைகுனிய வேண்டியுள்ளது” என்று கூறி இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவுகளை கண்டித்தார். ஆனால் அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் இவை குறைந்துள்ளதா? அவர் தலைகுனிய மாட்டார். இந்தியா தலைகுனியும் நிலைமையில்தான் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன.
2022 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தேசிய குற்றப்பதிவு அறிக்கை வெளியானது. இந்தியா முழுமைக்கும் 31 ஆயிரத்து 516 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் முதலாவது இடத்தில் இருப்பது ராஜஸ்தான். முழுமையான பட்டியலைப் பாருங்கள்...
1. ராஜஸ்தான் – 5.399 பாலியல் வன்கொடுமை வழக்குகள்
2. உத்தரப்பிரதேசம் - 3,690
3. மத்தியப் பிரதேசம் –3,029
4. மகாராஷ்டிரா – 2,904
5. அரியானா - 1.787
6. ஒடிசா-1,464
7. ஜார்கண்ட் -1,298
8. சட்டீஸ்கர் −1,246
9. டெல்லி -1,212
10. அசாம் - 1,113
பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகம் பதிவான முதல் பத்து மாநிலங்களின் பட்டியல் இது. இந்த மாநிலங்களை ஆளும் மாநில அரசுகள் யார் என்பதை வரைபடம் பார்த்து பிரதமர் மோடிதான் சொல்ல வேண்டும். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 28 ஆவது இடத்தில்தான் இருக்கிறது. இது ஒன்றிய அரசின் பட்டியல்தான்.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருப்பது பா.ஜ.க.வின் யோகி ஆளும் உத்தரப்பிரதேசம். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைஇந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2023- ஆம் ஆண்டில் மொத்தம் 4,48,211 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2822 ஆம் ஆண்டில் 4,45, 256 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 4,28,278 ஆகவும் இருந்தது.
மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால் உத்தரப்பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்துள்ளது. அங்கு 66,381 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 47,181 வழக்குகளுடன் இரண்டா- வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 45,450 வழக்குகளையும், மேற்கு வங்கம் 34, 691 வழக்குகளையும், மத்தியப் பிரதேசம் 32, 342 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி பெண்களுக்கு எதிரான குற்றவிகிதம் (ஒரு லட்சம் பெண்களுக்கு) குறைவாக உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவதாக இருக்கிறது. இவை அனைத்தும் பிரதமர் அறிந்த புள்ளிவிபரங்கள்தான்.
பில்கிஸ் பானு வழக்கில் 14 பேரைக் கொன்று, 7 பேரைச் சீரழித்த குற்ற வாளிகளை விடுதலை செய்து, அவர்களுக்கு மாலை போட்டு வரவேற்றது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கூட்டம். இந்தக் கொடுமைக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு வாரத்துக்கு முன்னால் ஒரு மாபெரும் சோகம் நடந்துள்ளது. பா.ஜ.க.வின் இரட்டை இஞ்சின் ஆட்சி நடக்கும் மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், தனக்கு நீதி கிடைக்கும் முன் மரணம் அடைந்துவிட்டார்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மணிப்பூரில் நான்கு பேரால் அந்தப் பெண் கடத்தப்பட்டார். ஒரு காரில் இழுத்துச் செல்லப்பட்டார். வேறு ஒரு ஊரில் பல ஆண்களால் தாக்கப்பட்டார். துப்பாக்கி ஏந்திய சிலரால் அங்கிருந்து மீண்டும் கடத்தப்பட்டார். மலை உச்சி போன்ற இடத்தில் மூன்று பேரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரைக் கொன்று விடலாமா, அல்லது விட்டு விட்டுப் போகலாமா என்று அந்த மூவரும் வாக்குவாதம் செய்தார்கள். அப்போது வண்டியை ஓட்டியவர் கோபமாக வாகனத்தை ஓட்டி வந்து அந்தப் பெண்ணை இடித்தார். மலை உச்சியில் இருந்து அந்தப் பெண் விழுந்தார்.
அந்தப் பெண் விழுந்து கிடந்த இடத்தின் வழியாக வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரால் அவர் காப்பாற்றப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மணிப்பூரில் இருந்து நாகலாந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்- பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
2026 ஜனவரி வரைக்கும் சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை சி.பி.ஐ. வெறும் எஃப்.ஐ.ஆர். மட்டுமே பதிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வாரம் - 16 ஆம் தேதியன்று அந்தப் பெண் இறந்தே போனார். சூரசந்த்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது அந்தப் பெண்ணுக்காக!
‘இவளுக்கு இதைச் செய்தவர்களை எப்போது தண்டிப்பீர்கள்?' என்று கேட்கிறார் அந்தப் பெண்ணின் தாய். பதில் உண்டா பிரதமரிடம்?
‘கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மகள் பயத்தில்தான் வாழ்ந்தாள். இனிமேல் வாழ விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். கனவுகள் வந்து கொண்டே இருந்தது. தூங்க முடியாமல் தவித்தாள். அவள் மனநிலையே அவள் உடலை மோசமாக்கியது' என்கிறார் அந்தப் பெண்ணின் தாய். அந்த தாய்க்கு பதில் சொல்ல வேண்டிய கடமை பிரதமருக்குத் தானே இருக்கிறது?
தேர்தல் ஆதாயத்துக்காக பொய்த் தகவல்களைப் பரப்பும் பிரதமர், இந்த உண்மைத் தாய்க்கு பதில் சொல்லாமல் பதுங்கலாமா? அல்லது பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசும் தகுதிதான் அவருக்கு இருக்கிறதா?
Also Read
-
“UGC-யின் புதிய விதிகளை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
பா.ஜ.க, அ.தி.மு.க-வை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும்: IMUL மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்தியாவிலேயே முதல்முறையாக... உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026ஐ முன்னெடுக்கும் தமிழ்நாடு: முக்கிய விவரங்கள்!
-
கோவையில் “ஜவுளி தொழில் மாநாடு 360!” : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?
-
“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!