murasoli thalayangam
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி தலையங்கம்!
தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல, எண்ணமாகப் பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனேயே இரண்டு முக்கியமான தடைகள் தமக்கு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். முந்தைய பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சீரழித்த அ.தி.மு.க. ஆட்சி என்பது ஒன்று. தமிழ்நாட்டின் வளர்ச்சியை அனைத்து வகையிலும் தடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொன்று என்பதை முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த இரண்டு தடைகளுக்கும் தீர்வு கண்டு, தமிழ்நாட்டை மீட்பது மட்டுமல்ல, வளர்க்கவும் வேண்டிய கடமையும் பொறுப்பும் முதலமைச்சருக்கு இருந்தது.
பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் சீரழிவுகளைச் சரி செய்து, ஒன்றிய பா.ஜ.க. அரசின் தடைகளையும் வென்று இன்று தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்த்தெடுத்துள்ளார்.
1. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது 2021 ஆம் ஆண்டில் 7.89 விழுக்காடாக இருந்தது. தற்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்து விட்டது. 14 ஆண்டு களுக்குப்பின், மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டி இருக்கிறது.
2. இந்திய நாட்டின் வளர்ச்சியில் நூறில் பத்து விழுக்காடு பங்கை தமிழ்நாடு செலுத்தி வருகிறது.
3. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் முழுமையாக தனது பணியைத் தொடங்கும் போது 35 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
4. இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக, அதிகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் உள்ள மாநிலமாக, அதுவும் பெண் பணியாளர் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
5. நிதிப் பற்றாக்குறை திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
6. மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் குறையும் போக்கில் உள்ளது. ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைத்த அளவான 28.7 விழுக்காட்டில் இது 2.63 விழுக்காடு குறைவே ஆகும். கடனுக்கு மிக முக்கியமான காரணம், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள்தான். மாநிலத்துக்குத் தர வேண்டிய நிதியையும் தருவது இல்லை. ஒன்றிய அரசின் திட்டங்களையும் மாநில அரசின் நிதியில் தான் செய்யவேண்டி உள்ளது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விட்டுச் சென்ற கடனுக்கு வட்டியாக மட்டும் ரூபாய் 1.40 லட்சம் கோடியை இன்றைய அரசு கொடுக்க வேண்டி உள்ளது.
7. நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் 31.1.2025 அன்று 2024–25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவின் தோல்பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல்பொருள்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது என்றும், தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலைமானியங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
8. மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், மின்னணுவியல் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
9. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. சமூக முன்னேற்றக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. குறைந்த வறுமை நிலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வறுமை நிலை என்பது 11.28 விழுக்காடாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வறுமை நிலை என்பது 1.43 ஆக குறைந்துவிட்டது. அதாவது குறைக்கப்பட்டு விட்டது.
10. பணவீக்கம் குறைந்துவரும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8ஆம் இடத்தில் – குறைந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தைக் கொண்டுள்ள மாநிலமாக இருக்கிறது.
11. அனைத்து நிதியும் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் ஆகியவை பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருக்கிறது. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது. உடலினை உறுதி செய், காலை உணவு ஆகிய இரண்டும் பள்ளிக் குழந்தைகளின் நலத்தை அடிப்படையாகக் கொண்டவை. உள்கட்டமைப்பு வசதிக்காகச் செலவு செய்யப்பட்டவை அனைத்தும் வளர்ந்து வரும் மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றன. வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கோரப்படும் கடனானது மூலதனச் செலவுகளுக்குச் செய்ய வேண்டும். அதனைத் தான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதை வைத்து நிதி நிர்வாகத்தை அளவிட வேண்டும்.
இப்படி நிதியை நீதியுடன் வழங்கும் மாநிலம் எங்கும் இல்லை.
Also Read
-
2026 திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் கருத்து... உங்கள் கருத்துகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
13 பேருக்கு மாநில அளவில் சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர் விருதுகள்... வழங்கினார் முதலமைச்சர் - விவரம்!
-
இந்து சமய அறநிலையத்துறை: புதிய திட்டப் பணிகள் முதல் முடிவுற்றப் பணிகள் வரை... திறந்து வைத்தார் முதல்வர்!
-
TAPS திட்டத்தை செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு : 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்!
-
“மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்” : பணி நியமன ஆணை பெற்ற காவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!