murasoli thalayangam
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
தனிமனிதரைப் பொறுத்தவரையில் ஆண்டொன்று போனால், வயதொன்று கூடும். சமூகத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்குஎன்றால் அது மேல் நோக்கிய வளர்ச்சியின் தொடர்ச்சியாக அமைய வேண்டும். அதுதான் புத்தாண்டுக்கு ஆக்கப் பூர்வமான பொருளாக அமையும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2026 ஆம் ஆண்டு என்பது சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறப் போகும் ஆண்டு ஆகும். ஏழாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போகும் ஆண்டு ஆகும். 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கப் போகும் ஆண்டு ஆகும்.
'இது ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக அமையும்' என்று ஆட்சி அமைக்கும் முன், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். 'வாக்களித்தவர்கள் மகிழும் வகையில், வாக்களிக்க மறந்தவர்கள் வருந்தும் அளவுக்கு எனது ஆட்சி இருக்கும்' என்று சொன்னார்கள். அதை நேரடி சாட்சியங்கள் மூலமாக நாம் பார்த்து வருகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர் மட்டுமல்ல; கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்ல; அனைவரும் பாராட்டிப் போற்றும் ஆட்சியாக அமைந்துள்ளது திராவிட மாடல் ஆட்சி. எதிர்க்கட்சிகளே கூட, விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்களே தவிர, பெரிய குற்றச்சாட்டுகளை வைக்க முடியாத அளவில் ஆட்சியை நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சரின் செயல்பாடுகள், எதிரிகளாலும் குற்றம் சாட்டப்பட முடியாத வகையில், குறை சொல்ல முடியாத வகையில் அமைந்துள்ளது. பல்வேறு குடைச்சல்களைக் கொடுக்கும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் கூட தி.மு.க. அரசின் மீது குறை சொல்லவில்லை. முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு கள் வைக்கவில்லை. ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. அனைத்து வளர்ச்சிக் குறியீட்டிலும் தமிழ்நாடு வளர்ச்சியைத் தொட்டு, அதில் நின்று நிலைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 11.19 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது யாராலும் அடைய முடியாத சாதனை ஆகும். ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தான் இது இடம்பெற்றுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது 2021 ஆம் ஆண்டில் 7.39 விழுக்காடாக இருந்தது. தற்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்து விட்டது. இதுதான் தமிழ்நாட்டின், முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும். 14 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டி இருக்கிறது. தமிழ்நாடு அரசு, தனக்கென ஒரு கணிப்பை முன்பு வெளியிட்டு இருந்தது. அதைவிட அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
இந்திய அளவை விட தமிழ்நாடு அதிகம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகம் என்ற சாதனையை நிறைவேற்றி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சரின் விரிவான பொருளாதாரப் பார்வை மூலமாக இது சாத்தியமாகி உள்ளது.
ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் கட்டணமில்லா பேருந்துப் பயணம் செய்கிறார்கள். 21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர் தினந்தோறும் காலையில் சூடான, சுவையான உணவை உண்கிறார்கள். 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களில் பாதிக்கும் மேல் பெண்கள்தான் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 13 விழுக்காடு பெண்கள் தொழில் முனைவோர்களாக பங்களித்து வருகிறார்கள்.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தில் மிகப்பெரிய கல்விப் புரட்சியை உருவாக்கிவிட்டது. உலகம் முழுக்க படிக்கச் செல்கிறார்கள், உலகம் முழுக்க வேலைக்குச் செல்கிறார்கள், பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதி உள்ள இளைய சமுதாயத்தை உருவாக்கி வருகிறார் முதலமைச்சர்.
இவை அனைத்தையும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் அறிந்தும், புரிந்தும் விட்டார்கள். சமூக ஊடகங்களில் ஆட்சி தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் மக்கள் பேட்டி எடுக்கும் அனைவருக்கும் கிடைக்கும் பதில் என்பது, 'மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் நல்ல ஆட்சி', 'தி.மு.க. ஆட்சி தான் தொடர வேண்டும்' என்பதாக இருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் மீது மிகப்பெரிய அளவில், 'நல்ல மனிதர்' என்ற பிம்பம் மக்கள் மனதில் உருவாகி விட்டது.
முதலமைச்சருக்கு எதிராக இருக்கும் அனைவரையும் விட, இவரே நல்லவர், இவரே சிறந்தவர், இவரே உண்மையானவர், இவரே நல்லது செய்பவர், இவரே நமக்காக நிற்பவர், இவரது ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கும், இவர் ஆட்சி தொடர்ந்தால்தான் இதுவரை கிடைத்த நன்மைகள் தொடரும், இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். இதனைத் தான் தேர்தல் முடிவாக 2026ஆம் ஆண்டில் காண இருக்கிறோம்.
புத்தாண்டு பிறக்கட்டும்!
புத்துணர்வு ஆட்சி தொடரட்டும்!
Also Read
-
திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!
-
ரூ.10.38 கோடி 2 புதிய ‘தோழி’ விடுதிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் MRF நிறுவனம்!: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
காவல்துறையினருக்கு 2,138 அடுக்குமாடிக் குடியிருப்புகள் : 22 காவல் பயிற்சி மையங்கள்!
-
ஈரானின் உச்ச தலைவர் கொலை… ஈரானை குறிவைத்து தொடர் தாக்குதல் : இஸ்ரேல், அமெரிக்காவின் அட்டூழியம்!