murasoli thalayangam
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதியை இந்தியா வழங்க இருக்கிறது. இலங்கை அதிபர் திசநாயகாவைச் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் இதனை அறிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக அவர் சென்றதாகச் செய்திகள் வெளியிடப்பட்டது. இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உள்ளார். அவரிடம் பிரதமர் மோடி கொடுத்த கடிதத்தையும் அமைச்சர் வழங்கி இருக்கிறார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 'பெய்லி' பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதனை இலங்கை அதிபர் முன்னிலையில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹீரத்தும் திறந்து வைத்துள்ளார்கள்.
இது தொடர்பாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆதரவாக நிற்போம். இலங்கை மறுசீரமைப்புக்காக 4 ஆயிரத்து 50 கோடி ரூபாயை வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவியதை நாம் விமர்சிக்கவில்லை. தாராளமாக வழங்கட்டும்.
இன்னும் பல பொருளாதார உதவிகளை இலங்கைக்கு இந்தியா செய்து வருகிறது. இயற்கைப் பேரிடரால் இலங்கை பாதிக்கப்பட்டதும், 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து விமானம், கப்பல்களில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்திய ஹெலிகாப்டர்கள், இரண்டு வாரங்களுக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்திய நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படை அங்கே சென்று செயல்பட்டது. ஆயிரம் டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மருந்துப் பொருட்கள் 14.5 டன் வழங்கப்பட்டது. இதையும் நாம் குறை காணவில்லை. வழங்கிய உதவிகள், வழங்கப்பட வேண்டிய உதவிகள்தான்.
“தீவு நாடான இலங்கையில் சுற்றுலாப் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிப்பதால் இந்தியாவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு, அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு உள்பட பிறவழிகளில் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும். இலங்கையின் வலுவான உறுதிப்பாடு, மீட்சியை கடந்த காலங்களில் கண்டுள்ளோம். தற்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில் முன்பை விட வலுவாக இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது" என்று தனக்குத் தானே தோளில் தட்டிக் கொண்டுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். இதில் வெறும் பொருளாதார உதவிகள் மட்டுமே இருக்கிறது.
வெறும் பொருளாதாரப் பார்வை மட்டுமே போதுமா? அரசியல்பார்வை வேண்டாமா? தொடர்ச்சியாக தமிழ்நாடு ஒரு செய்தியை ஒன்றிய அரசுக்குச் சொல்லி வருகிறது. இந்திய மற்றும் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் வருகிறார்கள். அவர்கள் படகுகள் சேதப்படுத்தப்படுகிறது. உடைக்கப்படுகிறது. மீன் பிடி வலைகள் அறுக்கப்படுகிறது. பல நேரங்களில் உயிர்க் கொலைகள் நடத்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசாங்கம் என்ன செய்தது?
இலங்கையில் வாழும் மக்கள் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் போது அதனைத் தடுக்க முன் வரும் ஒன்றிய அரசாங்கம், இந்திய மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? கண்டும் காணாமல் இருப்பது ஏன்? ஒன்றிய அமைச்சர், இலங்கை அதிபருடன் இது பற்றிப் பேசியதாகச் செய்திகள் இல்லை. ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளிக்கும் போதும் இது பற்றிப் பேசவில்லை? என்ன காரணம்?
இலங்கை அதிபரையும், இலங்கை பிரதமரையும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்த அன்று(டிசம்பர் 23) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். “மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு அன்றைய தினமே கடிதம் அனுப்பி இருந்தார்.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின்வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இது தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கவலையோடு தெரிவித்து இருந்தார்.
இது இன்று நேற்று பிரச்சினை அல்ல. அன்றாடப் பிரச்சினையாக இருக்கிறது. போராளி அமைப்புகளைக் காரணம் காட்டி 2009 வரை சொன்னார்கள். அதன்பிறகும் இந்திய மீனவர்களைக் கைது செய்வது நிற்கவில்லை.
தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 243 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசாங்கத்தின் வசம் உள்ளது. 62 மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள். இதில் 13 பேர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். இந்த 62 பேரும் இந்தியர்கள். அவர்களைப் பற்றி, இந்திய அரசு கவலைப்பட வேண்டாமா? அது குறித்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாமா?
தமிழர்கள் இளிச்சவாயர்களா? தமிழ்நாடு ஏமாளிகள் வாழும் மாநிலமா?
தமிழில் வணக்கம்' சொன்னால் போதுமா? இரண்டு திருக்குறள் சொன்னால் போதுமா? 'காசி சங்கமம்' நடத்தினால் போதுமா? இந்தியத் தமிழர் வாழ்கையைப் பற்றிய கவலை வேண்டாமா?
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!