murasoli thalayangam
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!
முரசொலி தலையங்கம் (27-11-2025)
உரிமைப் பறிப்புச் சட்டங்கள்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தி உள்ளன தொழிற்சங்கங்கள்.
தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.சி.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு. உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
‘ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது. தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி உள்ளதற்கு, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை, இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்கு தலாகக் கருதுகிறோம்.
இவை தொழிலாளர்களை அடிமையாக்குவதுடன் அவர்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும். புதிய சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது. பல்லாண்டு காலமாக தொழிலாளர் வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் போராடியதன் மூலமாகக் கிடைத்த சட்டங்களை முற்றிலுமாகப் பறிக்கும் செயலைச் செய்துள்ளது. தொழிலாளர்கள் தொடர்புடைய 29 சட்டங்களை, மொத்தமாக 4 சட்டமாக ஆக்கிவிட்டார்கள்.
தொழிலுறவு சட்டத் தொகுப்பு 2000, சம்பளத் தொகுப்பு 2019, பணித்தலப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 என்ற நான்கும்தான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள். இதனை நவம்பர் 21 முதல் அமல்படுத்துவதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டங்கள் நான்கும் தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இவை மக்கள் விரோத, ஜனநாயக விரோத, சமூக விரோத சட்டங்கள் ஆகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இவை. பலத்த எதிர்ப்பு காரணமாக இவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது மீண்டும் தூசி தட்டி எடுத்து வருகிறார்கள். முந்தைய சட்டங்களில் இருந்த தொழிலாளர் பாதுகாப்பு விதிகள், இதில் கவனமாக நீக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் சாதகமாக இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு என்பதை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன் மூலமாக நிரந்தர வேலை வாய்ப்பை முடி- வுக்கு கொண்டு வர நினைக்கிறார்கள். நிரந்தரத் தொழிலாளர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றவே இச்சட்டம் பயன்படும்.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் ஆலை மூடலுக்கு அனுமதி தேவை என்று இருந்த சட்டத்தை 300 தொழிலாளிக்கு மேல் தேவை என மாற்றி விட்டார்கள். 300 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லா- மல் எதையும் செய்யலாம் என்ற அதிகாரம் தரப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் ஆட்குறைப்பு, பணி நீக்கம், ஆலை மூடல் ஆகியவற்றைச் செய்யலாம்.
இந்தியாவில் தொழிலாளர் தொடர்புடைய 12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டங்கள், இந்த வழக்கின் தன்மையை மாற்றும். சிக்கல் ஆக்கும். முடிவெடுக்க விடாமல் செய்யும். தொழிலாளர்களின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் கேள்விக்குறி ஆகி உள்ளது. இவர்களது பணிப் பாதுகாப்பு பற்றிய கவலை இச்சட்டங்களில் இல்லை. இலட்சக்கணக்கான தொழிலாளர்களை, ஊதிய வரம்புக்கு வெளியே நிறுத்துகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத் தொழிலாளர்கள் குறித்து, இச்சட்டங்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
18 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் ‘தொழிலாளி' என்ற வரையறைக்குள் வரமாட்டார். தொழிலாளி, ஊழியர் என்ற சொற்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி குழப்பம் செய்துவிட்டார்கள். ஒப்பந்த அடிப்படை நியமனத்தை சட்டபூர்வமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டுமானால் அதன் ஊழியர்களில் 18 விழுக்காடு தொழிலாளர்கள், அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சங்கத்துக்கு 51 விழுக்காடு தொழிலாளர்களது ஆதரவு தேவை. தொழிலாளர் நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு, தீர்ப்பாயங்கள் வரப் போகின்றன. ஊதியம் நீங்கலான இதரப்படிகள், இனி சட்டபூர்வமானவை அல்ல. தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் இனி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது. 'விலக்கு அளிக்கலாம்' என்ற நிபந்தனையுடன் வார விடுமுறை தரப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சட்டங்களை, விதிமுறையாக மாற்றிவிட்டார்கள். இவைதான் இனி அடுத்தடுத்து நடக்க இருப்பவை ஆகும்.
மதவாதக் கொள்கையும், கார்ப்பரேட் சலுகையும் மட்டும் தான் ஒன்றிய பா.ஜ.க.வின் இரண்டு வகையான முகம் ஆகும். இவற்றுக்கு எதிரான அனைத்தையும் எப்போதும் செய்வார்கள். நாட்டின் மிக முக்கியமான அமைப்பான இந்தியத் தொழிலாளர் மாநாடு ( ILC) கடந்த பத்து ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. இதனைக் கூட்டுங்கள் என்று இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல; ஆர்.எஸ். எஸின் தொழிற்சங்க அமைப்பு கூட கோரிக்கை வைத்தது. அதனையே செய்யாத அரசு தான் பா.ஜ.க. அரசு. இவர்கள் கொண்டு வந்த சட்டத்தின் சில பிரிவுகள் தொழிலாளர் விரோதமானவை என்று பாரதிய மஸ்தூர் சங்கமும் சொல்கிறது.
கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவை. இச்சட்டமானது தொழிலாளர் விரோதமானவை மட்டுமல்ல; மக்கள் விரோதமானவை. பா.ஜ.க. அதனைத் தான் எப்போதும் செய்யும். இதனை ஜனநாயக அமைப்புகள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
Also Read
-
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்... எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் சொன்னது என்ன?
-
“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!” : உதயநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!