murasoli thalayangam
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
முரசொலி தலையங்கம் (26-11-2025)
பா.ஜ.க. கொட்டம் அடக்கிய பஞ்சாப்!
சண்டிகரை தனது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குள் கொண்டு வர நினைத்த பா.ஜ.க. வின் சதிச் செயலை வீறு கொண்டு தடுத்துள்ளது பஞ்சாப்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகாரத்துக்குள் வர மறுக்கும் மாநிலங்களைச் சிதைப்பது பா.ஜ.க. கடைப்பிடிக்கும் பிரித்தாளும் கொள்கை ஆகும். அதனை முதலில் காஷ்மீரில் செய்தார்கள்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று ஒன்றிய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது. அது முதல் ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதியை விரைவில் தருவோம் என்று பா.ஜ.க. சொல்லி வருகிறது. ஆனால் செய்யவில்லை. அடுத்ததாக பஞ்சாப்பில் செய்யப் பார்த்தார்கள்.
பா.ஜ.க. வின் பசப்பு அரசியல் எடுபடாத மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது. அங்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. அதனால் பஞ்சாப்பின் முகத்தை, கனத்தை, வலிமையைச் சிதைக்க நினைத்தது பா.ஜ.க.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1966 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அரியானா, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் பொதுவான தலைநகராக சண்டிகர் இருந்து வருகிறது. 1984 ஆம் ஆண்டில் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டில் சண்டிகர் கொண்டு வரப்பட்டது. தலைமைச் செயலாளர் பதவி, ஆளுநரின் ஆலோசகர் பதவியாக மாற்றப்பட்டது.
அதில் இருந்து, ‘சண்டிகர் தங்களுக்குதான் சொந்தம்' என்று பஞ்சாப், அரியானா ஆகிய இரு மாநிலங்களும் உரிமை கோரி வருகிறார்கள். இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக சண்டிகர் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. பஞ்சாப் மாநில ஆளுநரே சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.இது பா.ஜ.க.வின் கண்ணை பல காலமாக உறுத்தி வந்தது.
சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 246 கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டது. இதற்காக, 131வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் போல சட்டசபை கலைக்கப்பட்டால், ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சண்டிகர் சென்றுவிடும்.
சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக பஞ்சாப் கவர்னரே தற்போது செயல்பட்டு வரும் சூழலில், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சண்டிகருக்கு என தனியாக நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார். இதனை பஞ்சாப் மாநிலம் கடுமையாக எதிர்த்தது.
இது நடந்தால் சண்டிகர் நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும். அதை வைத்து தாங்கள் எதையும் செய்யலாம் என்று பா.ஜ.க. நினைத்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன. "சண்டிகர் பஞ்சாப்புக்குச் சொந்தமானது.” என்ற குரல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ‘பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சண்டிகரை பிரிக்க நினைக்கும் முயற்சி' என்று பஞ்சாப் மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தார்கள்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “சண்டிகரில் பஞ்சாப் மாநிலத்திற்கான உரிமையை பா.ஜ.க. பறிக்கிறது. இது அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்.” என்று சொல்லி இருக்கிறார். சண்டிகர் மக்களின் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சி என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறும்போது, “எந்த ஒரு சர்வாதிகாரி முன்பும் பஞ்சாப்பியர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை வரலாறு சொல்லும். சண்டிகர் பஞ்சாப் மாநிலத்துக்கு சொந்தமானது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுவ் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கூட்டாட்சி மீதான பலவீனப்படுத்தும் தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார். "1966 பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இரு மாநில தலைநகராக சண்டிகர் இருக்கும் நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உரிமைகளின் மீதான தாக்குதலைச் செய்யக் கூடாது. எனது கேள்வி என்னவென்றால், மோடி அரசும் பா.ஜ.க.வும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்? சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்குவது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தனது முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளார். “”தற்போது வரை அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சண்டிகர், யூனியன் பிரதேசத்தின் பாரம்பரிய நிர்வாக கட்டமைப்பை மாற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்கள். குளிர்காலக் கூட்டத் தொடரில் இதனைக் கொண்டு வரும் திட்டமில்லை என்று பின் வாங்கி விட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
பஞ்சாப்பில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தது பா.ஜ.க. அதன் கொட்டத்தை அடக்கி விட்டது பஞ்சாப்.
Also Read
-
உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!