murasoli thalayangam

பிரதமர் மோடியின் செவிகளில் விவசாயிகளின் கோரிக்கை குரல்கள் விழுமா? :முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (25-11-205)

உழவர்க்கும் உணவுக்கும் துரோகம்!

உழவர்க்கு மட்டுமல்ல; மக்கள் உண்ணும் உணவுக்கும் சேர்த்து துரோகம் இழைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமர் மோடியின் காதுகளுக்குக் கேட்கவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டுக்கு வந்தார் பிரதமர் மோடி. உழவர்களை உச்சிமுகர்ந்து பேசினார் பிரதமர். வேளாண்மையை வானளவுக்கு புகழ்ந்தார் பிரதமர். கோவையில் இருந்து டெல்லி சென்றதும் உழவர்கள் தலையில் அவரே மண்ணைப் போட்டுவிட்டார். வேளாண்மையின் வளர்ச்சியை அவரே தடுக்கப் பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் அதிக நெல்உற்பத்தி நடைபெற்றுள்ளது. இதனால் கொள்முதலில் சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. மழை அதிகமாக பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகி உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்கள்.

அதில் தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி சாதனைகள் அனைத்தையும் முதலமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டுச் சொல்லி இருந்தார்கள்.

கடந்த ஆண்டு நெல் கொள்முதல் 4.83 லட்சம் மெட்ரிக் டன். இந்த ஆண்டு 14.11 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நெல் கொள்முதலின் மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த நிலையில் கொள்முதல் இலக்கை ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை குறைத்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவுக்கு ஏற்ப இதனை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதி மற்றும் பிறமாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 இல் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரி இருந்தார். ஆனால் அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசில் இருந்து இதுவரை மூன்று குழுக்கள் டெல்டா மாவட்டங்களுக்கு வந்து பார்வையிட்டார்கள். அதன் பிறகும் ஒன்றிய அரசின் முடிவில் மாற்றம் இல்லை.

ஈரப்பத அளவு தளர்வு உத்தரவு கிடைக்காவிட்டால் வேளாண் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இதனை எல்லாம் சிந்திக்கும் மனநிலையில் பிரதமரும் இல்லை, ஒன்றிய அரசும் இல்லை என்பதையே அவர்களது செயல்பாடுகள் காட்டுகின்றன.

முதலமைச்சர் அவர்கள், அக்டோபர் 19 ஆம் தேதியன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். ஒன்றிய அரசின் கடிதம் நவம்பர் 17 வந்துள்ளது. முதலமைச்சர் எழுதிய கடிதத்துக்கு ஒரு மாதம் கழித்து பதில் அனுப்பி இருக்கிறது ஒன்றிய அரசு. ஒரு மாதம் கழித்து ஈரப்பத கோரிக்கைக்கு அனுமதி இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். ஈரப்பதம் அதிகமானதற்குக் காரணம், வேளாண் மக்களோ, தமிழ்நாடு அரசோ அல்ல. இயற்கையின் சூழல் அப்படி அமைந்து விட்டது. தென் மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது.

இதனைத்தான் விவசாய சங்கங்களும் சொல்கின்றன. “ஒன்றிய அரசின் அதிகாரிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆய்வு செய்தார்கள். உடனடியாக ஈரப்பதம் விலக்களிப்பதற்கான அறிக்கை தரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதனை ஒன்றிய அரசு செய்யவில்லை. மழையால் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இழப்பை எதிர் நோக்கியுள்ள விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ஈரப்பதம் விலக்கைக் கூட அளிக்கமறுப்பது கண்டிக்கத்தக்கது. பிரதமர் கோவைக்கு வந்து, நான் விவசாயி களின் பாதுகாவலன் என்று பேசிச் சென்றது ஏமாற்றும் செயல்” என்று விவசாய சங்கங்கள் கொந்தளித்துள்ளன.

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின்டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூரிலும் திருவாரூரிலும் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கோவையில் முழங்கிவிட்டு, டெல்லி சென்றுள்ள பிரதமரின் செவிகளில் இக்குரல்கள் விழுமா?

“விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்” என்று இதனைத்தான் சொல்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு போராடுகிறது என்று குற்றம் சாட்டுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் அமைச்சர்கள் அதைத் தான் தி.மு.க. மீது குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். அனைத்துக்கும் போராட்டம் நடத்தும் சூழலில்தான் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வைத்துள்ளது என்பது தான் முழு உண்மை ஆகும்.

Also Read: அரசு அலுவலர்களை தற்கொலைக்கு தள்ளும் SIR : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி கண்டனம்!