murasoli thalayangam
“ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்யுங்கள்!” : S.I.R குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
“எனது வாக்கே எனக்கு இருக்குமா என்று தெரியவில்லை” என்று சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ். இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம், ஒவ்வொருவரையும் அந்த நிலைமைக்குத்தான் கொண்டு வந்து விட்டுள்ளது.
S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் அதே நேரத்தில் அதனை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இது தொடர்பான சட்டப் போராட்டத்தை ஒரு பக்கம் நடத்தினாலும், பொதுமக்கள் விழிப்படைய ஒரு காணொலியை வெளியிட்டு இருக்கிறார்கள்.
“ 'உங்களின் வாக்கு நீக்கப்படுமா?' என்று கேட்டால், அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதைத் தடுக்க வேண்டும் என்றால், உங்கள் பகுதிக்குரிய BLO யார்? என்று கேட்டு, அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி, சரியாக நிரப்பி, திரும்பச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் மறக்காமல் வாங்க வேண்டும். இதுதான் உங்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும்." என்று மிகத் தெளிவாக அறிவுரை சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"BLO-க்கள் தங்களின் பணியைச் சரிவர செய்யவில்லை என்றால், இந்த S.I.R. பணியே மொத்தமாக பாதிப்பைச் சந்திக்கும். BLO-க்களும், கட்சிகளின் BLA-2-க்களும் இணைந்து செயல்ப-டத் தேவையான அனைத்தையும் செய்வோம் என்று தேர்தல் ஆணையம் சொன்னார்கள்! அவ்வாறு சொன்னார்களே தவிர, அவ்வாறு ஒரு சூழலை இதுவரை உருவாக்கவே இல்லை. தி.மு.க. BLA2 தயாராக இருந்தாலும் கூட, பல இடங்களில் BLO-க்கள் வராமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறித்தான் நம்முடைய செயல்வீரர்கள் விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.
S.I.R.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தில் பல குழப்பங்கள் இருக்கிறது. ஒரு வாக்காளர் எதற்காக அவரது உறவினர் பெயரைச் சொல்ல வேண்டும்? உறவினர் என்றால் யார்? எந்த உறவினரைச் சொல்வது? அதுவும் 2002 இல் அவர்களது EPIC எண்ணை எங்கிருந்து எப்படி தேடி கண்டு பிடிப்பது..? ஊர் மாறி இருந்தால், தெரு மாறி இருந்தால் என்ன ஆகும்?
2002 முதல் 2025 வரைக்குமான காலகட்டத்தில் தொகுதி வரையறை மூலம் பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் மாறியுள்ளன. அதே முகவரியில் இருந்தாலும் கூட ஒரு தொகுதியில் இருந்த ஊர் வேறொரு தொகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கலாம். தொகுதி மாறவில்லை என்றாலும் பலருக்கு வாக்குச்சாவடி மாறி இருக்கலாம். இதை எல்லாம் என்ன செய்வது?
மொத்தத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்து குழப்பம் ஏற்படுத்தவே துடிக்கிறது தேர்தல் ஆணையம். சரியான தகவல் தரவில்லை என்று சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கை உறுதி செய்து கொள்வதுதான் மிகமிக முக்கியமானது.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சுருக்கத் திருத்தம் (Special Summary Revision -SSR) மேற்கொள்கிறது. இதில் வாக்காளர் தனது பெயரைச் சேர்க்கலாம். இறந்து போனவர் பெயரை நீக்கலாம். தனது விபரங்களில் திருத்தம் செய்யலாம். இது ஆண்டுதோறும் நடக்கிறது.
இப்போது மேற்கொள்ளப்படும் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத் தில் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கச் சொல்லி இருக்கிறார்கள். வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் இந்தப் பணிகள் செய்யப்படுகின்றன.
வாக்காளர் பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் கணக்கெடுப்புப் படிவம் தரப்படும். அதனைப் பூர்த்தி செய்து தரவேண்டும். இந்தப் படிவம் வீடு தேடி வரும். வராவிட்டால் அதனைக் கேட்டுப் பெற்றாக வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை கொடுத்ததற்கு அத்தாட்சி நகல் வழங்கப்படும். அதனையும் மறக்காமல் வாங்க வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் செய்தாக வேண்டும். புதிதாகச் சேர்ப்பதற்கான பணிகள் டிசம்பர் 9 தொடங்கி ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஒரே முகவரியில் தான் வசிக்கிறீர்கள் என்றால் சிக்கல் இல்லை. வேறு முகவரிக்கு மாறி இருந்தால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வாக்காளர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பின்போது பதிவு செய்கிறார்கள். பலரும் வேறு முகவரிக்கு மாறி விட்டாலும் வாக்களிக்கும் தினத்தன்று சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
முந்தைய முகவரியில் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்க முடியவில்லை என்றால் அவர்கள் பெயர் நீக்கப்பட்டு விடும். எனவே தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில்தான் அவர் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வினருக்கு மட்டும் அமைத்-திருக்கும் உதவி மையம் இல்லை; அனைவருக்குமானது. S.I.R.-ஆல் பாதிக்கப்படும் அனைத்துப் பொதுமக்களும் 03065420020 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்யுங்கள்.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!