
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்தும் நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.
இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில் SIR என்று சொல்லப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம், பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம்.

இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிப்பதாகவும், அதில் ஒரு சிலரின் தந்தை பெயர், ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆங்கில Alphabetical-ல் இருந்து எழுத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது தேர்தல் ஆணையம் SIR பணிகளை தொடங்கியுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. நாளை திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், SIR-க்கு ஆதரவாக அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிமுகவின் இந்த செயலுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டன பதிவு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :-
இந்திய திருநாட்டில், நமது மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை யை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
அது வேறு யாரும் அல்ல, ஒன்றியத்தை ஆளும் பாசிச கூட்டத்தின் பிரதான அடிமை கட்சி அதிமுக தான் !
இதன் மூலம் "இந்தியாவிலேயே SIR-க்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரே கட்சி" என்று குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்துகொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது !
ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், SIR குறித்து தங்களது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது !
தெலுங்கு தேசம் கட்சியும் (TDP) இந்த சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை சந்தேகிக்கப் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெளிவாக கருத்து தெரிவித்து ஒரு "க்" வைத்துள்ளது.
ஆனால் இத்தகைய சூழ்நிலையில் கூட பாஜக வின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான் நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் அவர்கள் குறைந்தது மௌனமாகக்கூட இருந்திடாமல், முன்பு 2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்ததுபோல முழுமையான அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளனர் !
தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக செய்திருக்கும் மிக நீண்ட துரோகப் பட்டியலில் இது இனி முதல் 3 இடங்களை பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது அதிமுக.
ஆனால் நமக்கு கவலை வேண்டாம் ! எது வந்தாலும் தமிழ்நாட்டின் நலனையும் இங்கு வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்கும் மகத்தான தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தின் கொடூர உள்நோக்கத்தை முறியடித்து, தமிழ் மக்களின், குறிப்பாக நமது சிறுபான்மை மக்களின், ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாப்பார் !
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணையோடு, அனைத்து மக்களின் வாக்குரிமைகளை பாதுகாப்பார்கள் !






