murasoli thalayangam
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
முரசொலி தலையங்கம்
14.10.2025
காஸாவில் நிரந்தர அமைதி!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் வெடிச் சத்தம் நின்றிருக்கிறது. இது தற்காலிக அமைதிதான். அதனை நிரந்தர அமைதியாக ஆக்கும் கடமையும், பொறுப்பும் உலக நாடுகள் கையில் இருக்கிறது. குறிப்பாக இஸ்ரேல் கையில் இருக்கிறது.
2021 ஆம் ஆண்டும் இதே போன்ற போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப் பட்டது. ஆனால் அது நீடிக்கவில்லை. போர் தொடங்கியது. 2023-ஆம் ஆண்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதுவும் நீடிக்கவில்லை. கடந்தஇரண்டு ஆண்டுகளாக உலகம் பார்த்த கொடுமையானது, மகா கொடுமைகள்ஆகும்.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் குழந்தைகள். 11 ஆயிரம் பேர் பெண்கள். 26 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். 175 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். காசாவின் பெரும்பகுதி ஓராண்டு காலத்துக்குள் அழிக்கப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.
உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. பட்டினியால் வாடும் பாலஸ்தீனர்கள்உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்த போது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடந்தது. இதைவிடக் கொடூரம் இருக்க முடியாது.
காசாவில் மரணத்தின் விளிம்பில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு வழங்கஉணவுப் பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக்கொண்டு சென்ற தன்னார்வலர்களைக் கடந்த வாரம் கடத்தியது இஸ்ரேல்.இந்த கப்பலில் 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சென்றுள்ளார்கள். அவர்களை தடுத்து கைது செய்துள்ளார்கள். இவை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். இப்படி ஒட்டுமொத்தமாக மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும்தான் காசா பகுதியில் நடந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இம்முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டார். அவர் இப்பேச்சுவார்த்தைகளில் அதிக முனைப்புக் காட்டினார். இது போர் நிறுத்த அறிவிப்பாக முடிந்தது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
“காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியது” என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்த பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது. “போர்நிறுத்த ஒப்பந்தம்அமலுக்கு வந்துவிட்டது. எனவே, பிணைக்கைதிகளை விடுதலை செய்யும்பணி நடந்து வருகின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தெற்கு பகுதியில் இஸ்ரேல்பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அச்சுறுத்தல் கொடுத்தாலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர்” என்று இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பு இதனை உறுதி செய்தது.
காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.
காசாவில் இருக்கும் இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வடக்கு காசாவில் உள்ள தங்களது இருப்பிடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். ஒப்பந்தத்தின் விளைவாக, பிணைக் கைதிகளை இரண்டு தரப்பும் விடுவிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் நடவடிக்கையை வரவேற்று, இஸ்ரேல் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் டெல் அவிவில் உள்ள பிணைக் கைதிகள் சதுக்கத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஹமாஸ் தரப்பு தனது ஆயுதங்களை ஒப்படைப்பது போன்ற சிக்கலான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. காசாவை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ‘ஹமாஸ் படைகள் ஆயுதங்களை துறக்காவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்' என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இது போன்ற கொக்கரிப்புகள்தான் பிரச்சினைகளை மறுபடியும் உருவாக்கும். இந்த எதேச்சதிகாரத் தனத்தை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இது போன்ற விவகாரங்களை உலக நாடுகள் பேச வேண்டுமே தவிர இஸ்ரேல் பேசக் கூடாது. இஸ்ரேலை பேச விடவும் கூடாது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இதனால்தான் இஸ்ரேல் கொஞ்சம் அடங்கத் தொடங்கி இருக்கிறது. இந்த அடக்கம், நிரந்தர அடக்கம் ஆக வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,“இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும் உடனடியாக முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம் - காசாவை மறு கட்டமைப்பு செய்வது - மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள், உறுதிமொழிகள் பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். இவைதான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!