murasoli thalayangam
”சமத்துவத்தை உருவாக்கும் பயணத்தில் ஒரு மைல்கல்” : திராவிட மாடல் அரசை பாராட்டிய முரசொலி!
முரசொலி தலையங்கம் (11-10-2025)
சமத்துவத்தை உருவாக்கும் அரசு!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மானமிகு ஆசிரியர் உருவாக்கிக் கொடுத்துள்ள தீர்மானங்களை சமூகக் களத்தில் பரப்புரை செய்யுங்கள், திமுக ஆட்சியை பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்” என்று உறுதி அளித்தார். நேற்றைய தினம் வெளியாகி உள்ள அரசாணை, இதனை மையப்படுத்தியதாக இருக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள தெருக்கள், சாலைகள், வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறுபெயரிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சமத்துவத்தை உருவாக்கும் பயணத்தில் ஒரு மைல் கல் ஆகும்.
சாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற எந்தவொரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள், கொள்கை முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக இந்த அரசாணை உறுதி அளிக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும் போது மட்டுமே உண்மையான சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை அரசாணை உறுதி செய்கிறது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்கள் உறுதியாக மாற்றப்பட வேண்டும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு பூக்களின் பெயர்களையும், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயர்களையும் சூட்ட வேண்டும், இந்தப்பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதிச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள ELCOT மூலமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகள் ஆகியவற்றில் சாதிப் பெயர்கள் இடம் பெறாத வகையில் திருத்தங்கள் செய்யலாம் என பதிவுத்துறைக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சாதியை மறுத்தல் என்பதன் முதல்படி, சாதி அடையாளங்களைத் தவிர்த்தல் ஆகும். அதைனைத்தான் முதலமைச்சர் அவர்கள் செய்து காட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே சாதிப் பெயர் தாங்கிய பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அவை சமூகநீதி விடுதிகள் என ஆக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக அந்த அடையாளச் சொல்லை வைத்து இழிவு செய்வது தவிர்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல் அமைச்சர், அதில் வைத்த மிக முக்கியமான கோரிக்கையும் இது தொடர்பானதுதான்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர், தமிழ்நாட்டின் சாதிப் பெயர் பட்டியலில் 76 ஆதிதிராவிடர் சாதிப் பெயர்களும், 37 வகையான பழங்குடியினர் சாதிப் பெயர்களும், அறிவிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களை சேர்நத பெரும்பான்மையான மக்கள் சாதிப் பெயரில் இறுதி எழுத்து ‘N’ மற்றும் ‘A’ என முடிவதால், சாதிப் பெயரை ஒருமையுடன் குறிப்பிடுவதாக இருப்பதாகவும், சமூகத்தில் உரிய பெருமை கிடைக்கப் பெறவில்லை என கூறி ‘N’ மற்றும் ‘A’ என்பதற்கு பதிலாக ‘R’ எனப் பெயர் மாற்றம் செய்து உரிய மரியாதையை பெற்றுத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்காணும் சாதிகளில் உரிய பெயர் மாற்றம் செய்ய சட்டமியற்றுமாறு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது” என்பதுதான் பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கையாகும்
ஊரின் பெயர், தெருவின் பெயர், சாலையின் பெயர், பள்ளியின் பெயர், விடுதியின் பெயர் ஆகியவை மூலமாக சாதியை அடையாளப்படுத்தி இழிவு செய்தல் இனியும் தொடரக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.
‘சமூகரீதியாக’ பகை கொள்வதை தடுத்தாலே 90 விழுக்காடு சாதிச் சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பதே உண்மை, அதற்கு ‘சமூகரீதியாக’ அடையாளப்படுத்துதல், அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனைத்தான் முதலமைச்சர் செய்துள்ளார்கள்.
Also Read
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !
-
ஆப்கானின் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம்... மூடப்பட்ட தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா அறிவிப்பு !
-
“தாலிபானின் பிற்போக்குத்தனமான செயலை எப்படி அனுமதிக்கலாம்?” : ஒன்றிய அரசுக்கு, கனிமொழி MP கடும் கண்டனம்!
-
12,480 ஊராட்சிகள்.. 3 முக்கிய தேவைகளுக்கு உடனடி ஒப்புதல்: முதலமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம் !
-
“கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” : கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!