murasoli thalayangam

நேபாளம் மீண்டும் எரிகிறது - இந்த போராட்டம் ஜனநாயகத்தை நோக்கியதாக அமைய வேண்டும் : முரசொலி!

முரசொலி தலையங்கம் (12-09-2025)

மீண்டும் நேபாளம் எரிகிறது!

2004ஆம் ஆண்டு நேபாளம் மிகப்பெரிய கலவரத்தைச் சந்தித்தது. இப்போது மீண்டும் எரியத் தொடங்கி இருக்கிறது நேபாளம்!

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகமாகி வருவது தான் இதற்கு மிக முக்கியக் காரணம் ஆகும். ‘நேபாள அரசு, இதற்கான தீர்வைக் காணவில்லை, மக்கள் பிரச்சினைக்கு செவிமடுக்காத அரசாங்கமாக இருக்கிறது’ என்று இளைஞர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முறைகேடுகள் அதிகமாகி விட்டதாகப் புகார்கள் அதிகம் கிளம்பி உள்ளது. போராட்டம் நடத்தியவர்களில் பலரும் பள்ளி மாணவர்கள். அவர்கள் தங்களது சீருடையில் வந்து போராடினார்கள். “ஜென் Z” போராட்டம் என்று அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள்.

நேபாள அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் இளைஞர்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கினார்கள். உடனடியாக சமூக ஊடகங்களை நேபாள அரசு தடை செய்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை, உள்நாட்டுச் சட்டங்களை மீறியதாகக் கூறி, அரசு தடை செய்தது. இந்த முடிவு, இளைஞர்களை அதிகம் கோபம் கொள்ள வைத்தது.

நேபாளத்தின் முக்கியச் சாலைகள் அனைத்திலும் இளைஞர்கள் போராட்டங்கள் தொடங்கினார்கள். போராட்டக்காரர்களைத் தடுக்க முற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது. செப்டம்பர் 8 அன்று தொடங்கிய இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டின் நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துணை பிரதமர் விஷ்ணு பிரசாத் வீடு தாக்கப்பட்டது. வீட்டை விட்டு ஓடிய துணை பிரதமர், போராட்டக்காரர்களிடம் சிக்கிக் கொண்டார். சரமாரியாக அவர் தாக்கப்பட்டார். அமைச்சர்கள் பலரும் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.

முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயில் அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார். நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம் எரிக்கப்பட்டது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பெளடேல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை விட்டு விலகினார்கள். இதனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.

அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குள் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்று விட்டார்கள். சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைது செய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரக் கலவரத்தை அடுத்து, அந்நாட்டுடன் எல்லையைப் பகிரும் நமது நாட்டின் உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் உள்ளிட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வேலியிடப்படாத பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும், சாஸ்திர சீமா பால் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டுக்கு பயணிப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுரை சொல்லி இருக்கிறது.

சமூக ஊடகங்கள் மீதான தடையை நேபாள அரசு நீக்கிய போதிலும், மக்களின் கோபம் தணியவில்லை. இன்று சமூக ஊடகங்கள் மிகமிக முக்கியமானவை. இன்றைய தலைமுறை இளைஞர்கள், சமூக ஊடகங்களை மிகமிகச் சிறுவயதில் இருந்தே அறிந்த தலைமுறை ஆகும். கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை, தொழில் நுட்ப அறிவு, உலகத் தொடர்பு ஆகிய அனைத்துக்கும் சமூக ஊடகங்களே அடிப்படையானவையாக ஆகிவிட்டன. எனவே, சமூக ஊடகங்களைத் தடை செய்வது இயலாத காரியம் ஆகும்.

இந்தப் போராட்டத்தின் முக்கியமான நபராகச் சொல்லப்படுபவர் சுதன் குருங் என்பவர். இவர் சமூக சேவை, பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். ‘ஹமி நேபாளம்’ என்ற தன்னார்வலர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். ‘மக்களுக்காக... மக்களால்’ என்பதை தனது முழக்கமாகச் சொல்கிறார். இவர் இளைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப வசதிகளை அமெரிக்காவும் சீனாவும் அறிமுகம் செய்துள்ளன. இதில் எதைப் பெறுவது என்பதில் நேபாள அரசுக்கு ஊசலாட்டம் இருந்ததாகவும், அதில் முடிவெடுக்க முடியாமல் மொத்தமாக அனைத்துச் சமூக ஊடகங்களையும் தடை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. சமூக ஊடகங்கள், மாற்று சக்திகளுக்கு உதவியாகப் போய்க் கொண்டிருப்பதை நேபாள அரசு தடுக்க முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சி.பி.எம்–எம்.எல்.) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக நிலையற்ற தன்மை கொண்டதாக நேபாள அரசியல், ஆட்சி இருக்கிறது. அதுவும் மிக அடிப்படையான காரணம் ஆகும். மீண்டும் மதச்சார்பு நாடாக நேபாளத்தை மாற்ற இப்போராட்டம் நடப்பதாகச் சொல்வது, தவறான தகவல் ஆகும். முறைகேடுகளுக்கு எதிராகவும், வேலைவாய்ப்புகளைக் கேட்டும், ஜனநாயக உரிமைகளுக்காகவும்தான் இப்போது போராட்டக்காரர்கள் முழக்கங்களை வைத்துள்ளார்கள். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள் இப்போராட்டத்துக்கு எதிராக எழுதி வருகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கை இப்படித்தான் எரிந்தது. கடந்த ஆண்டு வங்க தேசம் இதே போன்ற சூழலைச் சந்தித்தது. இப்போது நேபாளத்தில் இதனை நாம் பார்க்கிறோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்றவை மதவாத அரசியலுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளாக இருப்பவை என்பது அனைவர்க்கும் தெரியும். மதவாத அரசியல், மற்ற எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்பதைத்தான் இது போன்ற நாடுகளில் ஏற்படும் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

நேபாள ஜனாதிபதி பௌடேல், “ஜென் Z” போராட்டக்காரர்களை நேபாள ராணுவத்துடன் சந்தித்து, அரசியல் பிரச்சினைக்கு அமைதியான தீர்வை உரையாடல் மூலம் காணத் திட்டமிட்டு வருகிறார். இடைக்கால அரசு அமைக்க போராட்டக்காரர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

நேபாளத்தில் இப்போது எழுந்துள்ள போராட்டமானது ஜனநாயகப் பூர்வமானதாக அமைய வேண்டும். ஜனநாயகத்தை நோக்கியதாக அமைய வேண்டும். நேபாளம் இன்று சந்தித்துவரும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மாற்றுத் திட்டங்கள் இல்லாமல் இடைக்கால அரசு அமைவது, நிரந்தரத் தீர்வாக அமையாது. பல்வேறு புரட்சிகள், மாற்றுத் திட்டம் இல்லாமல், எழுந்த வேகத்தில் அடங்கி இருக்கின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது.

Also Read: 35 ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் சட்டமாக்கினார் ; இப்போதுதான் உ.பி உணர்கிறது : முரசொலி!