murasoli thalayangam

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!

முரசொலி தலையங்கம் (26-08-2025)

கருத்தியலை உள்ளடக்கிய தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்காக நடக்கும் தேர்தலை, ‘இரண்டு கொள்கைகளுக்கு இடையிலான போர்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சொல்லி இருக்கிறார். உண்மைதான். அது இரண்டு விதமான கொள்கையாளர்கள் பிரிந்து நின்று மோதும் தேர்தலாகத்தான் இருக்கிறது .

பா.ஜ.க. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்திவிட்டு, ‘தமிழராகிய இவரை தி.மு.க.வும் ஆதரிக்க வேண்டும்’ என்று சிலர் பேசியது கேலிக்குரியதாகும் . இதற்கு மிகச் சரியான பதிலடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

“தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அனைத்து நடவடிக்கை களையும் செய்துவிட்டு, ‘தமிழர்’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆதரவு கேட்கிறார்கள். இது எல்லாம் பழைய காலத்தந்திரங்கள். தனிமனிதர்களை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும். தனிமனிதர்கள் என்பவர்கள் வெறும் பிம்பங்கள்தான். அதனால், எந்தக் கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ அதைத்தான் ஆதரிக்க வேண்டும்” – என்று நெத்தியடி அடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

பா.ஜ.க. தலைமையானது தமிழ்நாட்டுக்கு இழைத்துவரும் கொடுமைகளின் பட்டியல் மிகமிக நீண்டது ஆகும்.

தமிழ்நாட்டின் நிதி உரிமைகள், ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாகப் பறிக்கப்படுகிறது.

அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை.

தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை.

பள்ளிக் கல்விக்கான ரூ.2000 கோடி நிதி இன்றுவரை மறுக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் நிதி தந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது.

நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையானது இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது.

தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை விட சமஸ்கிருதத்துக்கு தரும் நிதி 17 மடங்கு அதிகமாக இருக்கிறது.

தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கீழடி அறிக்கையை வெளியில் விடாமல் மறைக்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் மேலான தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் செய்து விட்டு, ‘தமிழரை’ நிறுத்தியிருக்கிறோம் என்றால் ஏமாறுவதற்கு தமிழர்களும், தமிழ்நாடும் முட்டாள்கள் அல்ல. முனை மழுங்கியும் கிடக்கவில்லை.

தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்றுகூட, தமிழ்நாடு அரசை மிகமிகக் கொச்சைப்படுத்தி ஆளுநர் ரவி பேசினார். இப்படி ‘குட்டியை’ விட்டு ஆட்டம் காட்டிக்கொண்டு, தி.மு.க.வின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல அசிங்கமானது.

மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது. இதையெல்லாம் நீதியுடனும் நேர்மையுடனும் பரிசீலித்து பார்க்கக் கூடிய ஒருவர் தேவை என்பதால்தான் சுதர்சன் அவர்களை திமுக ஆதரிப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

“நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. நான் அரசியலமைப்பைப் பின்பற்றும் அரசியல்வாதி. இந்த நாட்டுக்குச் சேவை செய்வது ஒன்றுதான் என்னுடைய நோக்கம். குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் என்பது அரசியல் கட்சி அலுவலகம் அல்ல” என்று சொல்லி இருக்கிறார் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதர்சன்.

அவரை ‘நக்சல்’ என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அடுத்தவர் மீது கறைபூசுவது காவிகளுக்கு இயல்பானது தானே? அமித்ஷா மீதான பழைய வழக்கு விபரம் என்ன என்று சுதர்சன் விளக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக காவல் படைகள் நடவடிக்கைகள் எடுக்காமல் ‘சல்வார் ஜூடும்’ என்ற பழங்குடி அமைப்பை உருவாக்கி அவர்களை வைத்து மோதலை உருவாக்கினார்கள். இதற்கு எதிராக 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் அடங்கிய அமர்வு, ‘பழங்குடி இளைஞர்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என்று தீர்ப்பளித்தது. இதை வைத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவரை ‘நக்சல்’ என்று சொல்லலாமா? என கேள்வி எழுப்பியுள்ள முரசொலி நாளேடு, ‘முதலில் இந்தத் தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள்’ என்று சுதர்சன் அவர்கள்.

அரசமைப்பு சட்டத்துக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காக, சமத்துவத்துக்காக சுதர்சன் பேசுவது அமித்ஷாவுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான் ‘நக்சல்’ என்று திசை திருப்புகிறார். ‘தமிழரை நிறுத்தி இருக்கிறோமே?’ என்று ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதைப் போன்று தமிழ்நாட்டுக்கு வந்து சிரிக்கிறார் அமித்ஷா.

ராஜஸ்தான் தேர்தலுக்காக ஜெகதீப் தன்கரைக் கொண்டு வந்தார்கள். தேர்தல் முடிந்ததும் அவரைக்கழற்றி விட்டார்கள். அப்படித்தான் தமிழ்நாடு தேர்தலுக்காக ‘தமிழரை’ நிறுத்துகிறார்கள் என்பதை அறியாத மாநிலம் அல்ல தமிழ்நாடு. ‘தலித்’ ஆதரவுக்காக ராம்நாத் கோவிந்தை கொண்டு வந்ததும், அதனை அவமரியாதை செய்ததையும் பார்த்தோம். வடகிழக்கு மாகாண அரசியலுக்காக முர்முவைக் கொண்டு வந்து அவருக்கு உரிய மரியாதை தராததையும் பார்த்துத்தான் வருகிறோம்.

பச்சை ஆர்.எஸ்.எஸ். காரரான ஜெகதீப் தன்கரையே பழிதீர்த்துக் கொண்டு விழுங்கி விட்டது பா.ஜ.க. பூதம்! இதில் ‘தமிழர்’ முகமூடி எல்லாம் மூன்றாவது நிமிடத்தில் கிழித்தெறியப்பட்டு விடும் என்பதே கடந்த கால பா.ஜ.க.வின் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் ஆகும்.

Also Read: 162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!