murasoli thalayangam

“’சமூகநீதி விடுதிகள்’ - சமூகநீதிப் பயணத்தில் இது முக்கிய மைல் கல்!”: முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு!

மாணவர் விடுதிகளுக்கு, சமூகநீதி விடுதிகள் என்று பெயர் சூட்டியதன் மூலம், நாடு எத்தகைய சமுகநீதி நாடாக மாற வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்று முரசொலி தெரிவித்துள்ளது.

“சமூகநீதி விடுதிகள்!” என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு :-

“சாதி வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமாக விலக்கும் பயணத்தின் பல்வேறு படிநிலைகளை நாம் படிப்படியாகத் தாண்டி வர வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர்ந்து பயணித்து வருகிறது”என்று குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பெயரைச் சூட்டி உள்ளனர்.

பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் தொடர்ந்து கல்விப் பயின்றிட, நமது மாநிலமெங்கும் பல்வேறு அரசுத் துறைகளின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் தொடர்ந்து வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவர், மாணவிகள், 455 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ, மாணவிகள், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ, மாணவிகள், 20 சிறுபான்மையினர் நல விடுதிகள். விடுதிகளில் 1,250 மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ, மாணவியரும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ, மாணவியரும் சேர்ந்து படித்து வருகின்றனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த விடுதிகள் அனைத்தும் ‘சமூகநீதி விடுதிகள்’ ஆகின்றன. பல்வேறுசாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் தொடர்ந்து வரும் மாணவர் விடுதிகளின் பெயர்கள் இனி, ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பெயரோடு அழைக்கப்பட உள்ளன.

சாதி வேறுபாடுகள், மாறுபாடுகள் அற்ற சமூகநீதிப் பயணத்தில் இது முக்கியமான மைல் கல் ஆகும்.

• காலனி என்ற சொல் நீக்க உத்தரவு போட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ‘N’ மற்றும் ‘A’ என்பதற்குப் பதிலாக ‘R’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர்.

• 25.6.2025 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை, பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் ஏற்பட பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவை முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்து உள்ளனர்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’ என்ற மனுநீதி கோலோச்சிய சமூகத்தில் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்தது நீதிக்கட்சி. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் சமூகநீதி அரசாணைகளை 1920 ஆம் ஆண்டு பிறப்பித்தது நீதிக்கட்சியின் ஆட்சி. குலக்கல்வியை குருகுலக் கல்வியாக முடக்கி வைத்திருந்த சூழலை மாற்றி, ஊர்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தது அந்த ஆட்சி.

திராவிடர்களை பள்ளிக் கூடங்களில் சேர்க்க மறுத்தால், அதற்கான அனுமதி அரசாணையை ரத்து செய்வோம் என அரசாணை போட்டது நீதிக்கட்சி ஆட்சி. போன்ற நடவடிக்கைகள்தான் பல நூறாண்டு இருளை நீக்கி கல்வி ஒளியைப் பாய்ச்சியது.

இதில் மண்ணைப் போட முயற்சிக்கும் வகையில் குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வந்தது இராஜாஜி ஆட்சி. நிதி நெருக்கடி என்று சொல்லி கல்விச் சாலைகளுக்கு மூடுவிழா நடத்த நினைத்தார்கள். இராஜாஜி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பச்சைத்தமிழர் காமராசர் ஆட்சியை உருவாக்கினார் தந்தை பெரியார். குலக்கல்வியை தடுத்தது மட்டுமல்ல; ஊர்கள் தோறும் பள்ளிகள் திறந்தார் பெருந்தலைவர். ‘காரணம் பெரியார் – காரியம் காமராஜர்’ என்று தலையங்கம் தீட்டியது ‘ஆனந்த விகடன்’.

கல்லூரிக் கல்வியை வளர்த்தெடுத்தார் தமிழினத் தலைவர் கலைஞர். இன்று உயர் கல்வியை, ஆராய்ச்சிக்கல்வியை, உலகக் கல்வியை தமிழ்நாட்டு மாணவ,மாணவியருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

1912 ஆம் ஆண்டு நடேசனார் உருவாக்கியது, ‘திராவிடன் இல்லம்’. சென்னைக்குப் படிக்க வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒளிவிளக்காக அமைந்தது. ஆனால் இந்த மாநிலம் முழுவதும் ஏராளமான விடுதிகள் அமைந்துள்ளன. 2,739 விடுதிகள் இன்று மாநிலம் முழுவதும் உள்ளன. ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 568 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். நீதிக்கட்சி விதைத்த விதை இன்று விருட்சமாகக் காட்சி அளிக்கிறது. ‘படியுங்கள், உங்களது மற்ற தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

‘சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் சூட்டியதன் மூலமாக நாடு எத்தகைய சமுகநீதி நாடாக மாற வேண்டும் என்ற தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். முதலமைச்சர் அவர்கள். பல்லாயிரம் ஆண்டு மனித மன அழுக்கைத் துடைப்பது சாதாரணமானது அல்ல. அதற்குப் பல நூறு ஆண்டு முயற்சிகள் தேவை. அத்தகைய முயற்சிகளைச் செய்து காட்டுவதில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மை அடங்கி இருக்கிறது.

சமூகநீதி – சமநீதி – சட்ட நீதி ஆகியவை அடங்கும் பொது என்ற நிலையை உருவாக்க பங்காற்றி வரும் திராவிட மாடல் அரசுக்கு தொடர்ந்து துணை நிற்போம்.

Also Read: “வாக்­கா­ளர்­களை நீக்­க பாஜக சதி - இது பீகார் பிரச்சினை அல்ல; இந்தியாவின் பிரச்சினை” : முரசொலி தலையங்கம்!