murasoli thalayangam

“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!

தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் – ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியை திமுகழகம் தொடங்கி இருக்கிறது என முரசொலி நாளேடு தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முரசொலி நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு;-

“ஓரணியில் தமிழ்நாடு”!

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

ஜூலை 1 ஆம் தேதி அன்று அண்ணா அறிவாலயத்தில் இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். 45 நாட்கள் தி.மு.க. படையானது தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறது. தலைவரின் – முதலமைச்சரின் தூதுவர்களாக இவர்கள் மக்களைச் சந்திப்பார்கள்.

இந்தச் சந்திப்பின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய விரும்பும் குடும்பங்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். தி.மு.க.வில் சேர ஆர்வமுள்ளவர்கள் செயலி மற்றும் நேரடிப் படிவம் மூலம் பதிவு செய்யப்படுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது, காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறது. அதனால்தான் 75 ஆண்டுகளைக் கடந்தும் அதே இளமை மிடுக்கோடு இருக்கிறது.

இளைஞர்களால், இளைஞர்களுக்காக, எதிர்கால நன்மைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இந்த இயக்கத்தை அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மாறாமல், அதே நேரத்தில் காலத்தின் தன்மைக்கு ஏற்ப பரப்புரை உத்திகளை மாற்றிக் கொண்டே செயல்பட்டு வந்தார்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் காலம், மேடைகளின் காலமாக இருந்தது. தலைவர் கலைஞர் காலத்தில் பத்திரிக்கைகள், இதழ்கள் முக்கியப் பங்கு ஆற்றியது. இருந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டார்கள்.

அதே வழியில்தான் மக்களோடு மக்களாக இருக்கிறார் இன்றைய முதலமைச்சர். இன்றைய தினம் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்கள் அதிகம் வலிமை பெற்றுள்ளன. தான் சொல்ல வேண்டியதை அடுத்த ஒரு நிமிடத்தில் கொண்டு சேர்க்க ஊடக வலிமை இருந்தாலும் மக்களை நேரடியாகச் சந்திப்பதில் உறுதியாக இருக்கிறார் இன்றைய முதலமைச்சர். அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சிக்காக வந்தாலும் நடைபயணங்கள் மூலமாக மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை தொடர்ந்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

குறைந்தது ஐந்து கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக பத்து கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று மக்களைச் சந்திக்கிறார் முதலமைச்சர் அவர்கள். மக்கள் முகங்களில் உள்ள மகிழ்ச்சியை அறிகிறார். பல்வேறு திட்டங்களின் மூலமாக பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்கிறார்கள். பெண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவிகள், குழந்தைகள் என அவர் செல்லும் சாலைகள் அனைத்திலும் மக்கள் அலை அலையாக வருகிறார்கள். இன்னும் சொன்னால் அவர் முகத்தைப் பார்க்கவும் மக்கள் கூட்டம் திரள்கிறது. அருகில் வரவும், கை கொடுக்கவும் அலைமோதுகிறார்கள். இந்த மக்கள் சந்திப்பானது, மக்கள் மனங்களை அறியும் சந்திப்பாக இருக்கிறது.

‘மக்களோடு செல், மக்களுக்காக நில்’ என்று சொல்வாரே அண்ணா. அத்தகைய நோக்கம் கொண்டதாக இவை அமைந்துள்ளன. இதே பாணியை தான் மட்டுமல்ல, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடுதல் என்ற பாணியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையாக முதலமைச்சர் அவர்கள் வடித்துக் கொடுத்திருக்கிறார். “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி இது” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்கு இவர்கள் சொல்ல இருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியை விட, பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கான நிதியை அதிகமாகக் கொடுத்துவிட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப பிரதமர் முதல் அனைவரும் சொல்லி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை அடிக்கடி சொல்லி வருகிறார். எந்தெந்த திட்டங்களின் மூலமாக இதனைத் தருகிறார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ஒன்றிய அரசின் திட்டங்களாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கும் கூட தமிழ்நாடு அரசுதான் நிதியைக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்கள் பல கூட்டங்களில் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி விட்டார்கள். ‘மாப்பிள்ளை அவர்தான், ஆனா சட்டை என்னுடையது’ என்ற திரைப்பட டயலாக்கை உதாரணமாகச் சொல்லி புரியவைத்து விட்டார். அதற்கான விளக்கத்தை இன்று வரை பா.ஜ.க. தரப்பு சொல்லவில்லை.

‘தமிழ்நாட்டுக்காக கடந்த பத்தாண்டு காலத்தில் செய்து தரப்பட்ட சிறப்புத் திட்டம் என்ன?’ என்பதுதான் மாண்புமிகு முதலமைச்சரின் ஒற்றைக் கேள்வி. இவர்கள் அறிவிப்பில் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்பது மட்டும்தான் சிறப்புத் திட்டம் ஆகும். 2015 ஆம் ஆண்டு அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் அறிவிக்கப்பட்ட திட்டம் அது. 2019 தேர்தலுக்கு முன்னதாக அடிக்கல் நாட்டினார் பிரதமர். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டில் இருக்கிறோம். அப்படியே கிடப்பில் கிடக்கிறது. சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். வீடியோ தயாரிக்க ஆறு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. தரும் மரியாதை ஆகும்.

இப்படி தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் – ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியை திமுகழகம் தொடங்கி இருக்கிறது.

மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும், மக்களுக்குச் சொல்வதுமான ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. என்பது மக்கள் இயக்கம் என்பதன் அடையாளம்தான் இந்தப் பரப்புரையாகும். ஒரு காலத்தில் திண்ணைப் பரப்புரை செய்வார்கள். இது மண்ணைக் காக்கும் பரப்புரையாகும்.

Also Read: “இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!