murasoli thalayangam

“இந்தியாவை 11 ஆண்டுகளாக ஆண்டு வரும் பா.ஜ.க. அரசின் 11 மெகா தவறுகள்..” - பட்டியலிட்டு விமர்சித்த முரசொலி!

முரசொலி தலையங்கம்

13.06.2025

பா.ஜ.க. அரசின் 11 மெகா தவறுகள்!

இந்திய நாட்டை 11 ஆண்டுகளாக ஆண்டு, 12 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதில் கொண்டாடிக் கொள்ள ஏதுமில்லை. இந்திய நாட்டை பின்னோக்கிய பாதையில் மிக வேகமாக அழைத்துச் செல்வது தான் பா.ஜ.க. அரசின் சாதனைகள் ஆகும். அனைத்து வகைகளிலும் இந்திய நாட்டின் கட்டமைப்பைச் சிதைக்கும் செயலையே ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளாகப் பார்த்துள்ளது என்ற வேதனையைத் தான் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.

1. அச்சமற்ற ஆட்சியை பா.ஜ.க. தரவில்லை. மக்கள் ஒரு ஆட்சியிடம் எதிர்பார்ப்பது அமைதியான சூழல்தான். ஆனால் அதனை பா.ஜ.க. அரசு வழங்கவில்லை. எல்லோரையும், எல்லாக் காலத்திலும் பதற்றத்தோடு வைத்துள்ளது பா.ஜ.க. அரசு. எப்போது என்ன செய்வார்களோ என்ற அச்ச சூழலே இந்த 11 ஆண்டுகளாக இந்திய நாட்டில் நிலவுகிறது.

2. அரசியலமைப்புச் சட்டம்தான் இந்திய நாட்டின் பாதுகாப்பு ஆகும். இந்த நாட்டை இத்தனை ஆண்டுகள் வழிநடத்துவதும் அதுதான். அந்தச் சட்டத்தைச் சிதைக்கும் செயலை சிறுகச்சிறுகச் செய்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவானது நாடு, அனைவருக்கும் பொதுவானது சட்டம், அனைவரது எண்ணங்களுக்கும் விருப்பமானது இந்த நாடு, அனைவரது விருப்பங்களையும் நிறைவேற்றும் கடமை ஒன்றிய அரசுக்கு உண்டு. ஆனால் அதனைச் செய்யவில்லை பா.ஜ.க. ஆட்சி. ‘ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு’ கொண்டதாக ஆட்சியை நடத்தி, அத்தகைய நாடாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

3. இந்தியா என்பது கூட்டாட்சி நாடு. பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மாநில அரசுகளை அரவணைத்து கூட்டாட்சித் தன்மையுடன் இந்திய நாட்டை நடத்த வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய நாட்டை ஒற்றையாட்சி நாடாக மாற்றப் பார்க்கிறார். மாநிலங்களை மதிப்பது இல்லை. மாநில அரசுகளுடன் உரையாடுவது இல்லை. கலந்தாலோசனை செய்வது இல்லை. பா.ஜ.க. நினைப்பதை, பல நேரங்களில் தான் நினைப்பதை மட்டும் செயல்படுத்தும் ஆட்சியாக ஒன்றிய அரசை மாற்றி விட்டார்.

4. அவர்களது சாதனையாகச் சொல்லப்படுவது காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி பறிக்கப்பட்டது, காஷ்மீரின் மாநிலத் தகுதியைப் பறித்தது, முத்தலாக் சட்டம், குடியுரிமைச் சட்டம், பொதுசிவில் சட்டம் ஆகியவை ஆகும். இவை அனைத்தும் சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல்களே தவிர வேறல்ல. பா.ஜ.க.வும், அதன் மூதாதை அமைப்பும் என்ன மறைமுக நோக்கத்துக்காகச் செயல்படுகிறதோ அதை மட்டும் செய்து கொண்டார்களே தவிர வேறல்ல.

5. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பது இயல்பான நடவடிக்கையாக மாறிவிட்டது. வெறுப்புப் பேச்சுகள் பேசுவது நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. வெறுப்புப் பேச்சுகள் சட்டபூர்வமானதாக ஆகிவிட்டன. வன்முறையைத் தூண்டுவதற்காக வெறுப்புப் பேச்சுகள் பேசப்படுகின்றன. வன்முறைகள் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட, தண்டனை பெற்றவர்கள் அறமற்ற வழியில் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

6. காங்கிரஸ் அரசைப் பார்த்து, மன்மோகன்சிங்கைப் பார்த்து உலக நாடுகள் பயப்படவில்லை என்பதைத்தான் 2014 தேர்தல் பரப்புரையில் மோடி சொன்னார். ஆனால் இன்று உலக நாடுகளின் மரியாதையை வாங்கிக் கொடுத்து விட்டாரா என்றால் இல்லை. இந்தியப் பொருட்களுக்கு அநியாய வரி போடுகிறது அமெரிக்கா. இந்தியர்களை விலங்கு மாட்டி அனுப்புகிறது அமெரிக்கா. இந்திய எல்லைக்குள் புகுந்து வீடுகட்டிவிட்டது சீனா. இந்தியப் பகுதிக்கு தனது மொழிப் பெயரை வைக்கிறது சீனா. இந்திய மீனவர்களை தினந்தோறும் கைது செய்கிறது இலங்கை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது பாகிஸ்தான். பெரிய நாடு முதல் சுண்டைக்காய் நாடுகள் வரை மதிக்கிறதா பா.ஜ.க. அரசை? பிரதமர் போகாத நாடில்லை, நாளில்லை. ஆனால் மரியாதை இல்லை.

7. பாதுகாப்புத் துறையை நவீனமயம் ஆக்கியது தனது சாதனை என்று சொல்கிறார் பிரதமர் அவர்கள். பதான்கோட் தாக்குதலில் 7 வீரர்கள் பலி, பொம்பொரியில் எட்டு ராணுவ வீரர்கள் பலி, உரித் தாக்குதலில் 19 படைவீரர்கள் பலி, அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலி, லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலையத் தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி, புல்வாமா தாக்குதலில் 40 படைவீரர்கள் பலி, இரஜோரி ராணுவ முகாம் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி, ஷோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் பலி, பகல்காம் தாக்குதலில் 22 பேர் பலி – இதுதான் பா.ஜ.க. அரசின் சாதனைப் பட்டியல் ஆகும். இந்திய நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாக ஆகி வருகிறது. ஆனால் பாதுகாப்புக்கான நிதி மட்டும் லட்சம் கோடிகளாக ஆகிக் கொண்டு இருக்கின்றது.

8. பொருளாதார முன்னேற்றம்தான் அதிகமாக அவர்களால் பேசப்படுகிறது. ஆனால் உண்மை அப்படி இல்லை. இந்தியப் பொருளாதாரம் குறித்த தனது மதிப்பீடுகளை உலக வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது. 6.7 விழுக்காடு வளர்ச்சி என்று ஆறு மாதத்துக்கு முன்பு சொன்னது உலக வங்கி. அதனை 6.3 ஆக சில நாட்களுக்கு முன் குறைத்துவிட்டது. அடுத்த ஆண்டு 6.2 ஆக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறது.

9. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசாங்கம் ஆகும். சலுகைகள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தந்து அவர்களைக் காப்பாற்றும் காரியத்தை வெளிப்படையாகச் செய்து வருகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதும், அதனைத் தனியாருக்கு விற்பதும் தான் இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி. லட்சம் கோடிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடனாய்க் கொடுப்பதும், வசூலிக்க முடியவில்லை என்று சொல்லி வாராக்கடனாக மாற்றி அதனை ரத்து செய்வதும் என, இத்தகைய புது வகையான நிதிமோசடிதான் இவர்களது பொருளாதாரக் கொள்கை ஆகும். வங்கி மோசடிகள் வழக்கமானவை ஆகிவிட்டது. மோசடியாளர்களை வெளிநாட்டுக்கு இவர்களே தப்ப வைப்பார்கள்.

10. மக்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லை. 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து தவிக்க விட்டார்கள். கொரோனா காலத்தில், பொது முடக்கம் என்று சொல்லி ஊரைப் பூட்டிவிட்டு, அப்பாவி மக்கள் மீது செயற்கைப் பேரிடரை உருவாக்கினார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டாண்டு காலம் வெயிலிலும் மழையிலும் போராடினார்கள். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தார்கள். அவர்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை பா.ஜ.க. அரசு. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறையில் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்கள்தான். அவர்களைக் காக்க நடவடிக்கைகள் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சிலிண்டர் விலை உயர்வும் அடித்தட்டு மக்களுக்குக் கொடுத்து வரும் அன்றாடத் தொல்லைகள்.

11. தமிழ்நாட்டுக்கு அவர்கள் தந்து வரும் தொல்லைகள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மன்னிக்க முடியாதவை ஆகும்.

Also Read: “இப்படி சொல்வதற்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா?” - அமித்ஷாவை வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!