murasoli thalayangam

கீழடி ஆய்வு - “பா.ஜ.க. அரசால் சங்கறுக்கும் காரியம் நடக்கிறது” : முரசொலி கண்டனம்!

முரசொலி தலையங்கம் (29-05-2025)

கீழடியை எழுப்புவோம்!

தஞ்சைக்குப் போனேன்

உயரமாய்த் தெரிந்தது

எங்கள் பள்ளம்.

கீழடிக்கு வந்தேன்

பள்ளத்தில் தெரிந்தது

எங்கள் உயரம்.

– என்று எழுதி இருக்கிறார் கவிஞர் பழ.புகழேந்தி. ஆறு வரிக்குள் ஆயிரமாண்டு வரலாறும் இருக்கிறது. பண்பாட்டின் பெருமிதமும் இருக்கிறது. இதனைத்தான் சிதைக்கப் பார்க்கிறார்கள். கப்சா காவியங்களை வரலாறு ஆக்க, இந்த உண்மைகள் இடைஞ்சலாக இருக்கின்றன என்பதால் கீழடிக் கண்டுபிடிப்புகளை மறைக்கப் பார்க்கிறார்கள். பல்லாயிரமாண்டு வரலாறு, பல்லாயிரம் ஆண்டு கழித்தும் மேலே எழும்பி வந்தது அல்லவா? அதனைச் சிறுமதியாளர்கள் மறைக்க நினைப்பது மதியீனம்.

கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக நமது இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வு தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

கீழடி அகழாய்வில் 1000–க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60–க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் அந்தக் காலத்திலேயே கல்வி பெற்றவர்களாக இருந்துள்ளார்கள். பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரீகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.

கீழடி ஆய்வுகள், சிந்துச் சமவெளி ஆய்வுகளுக்கு மிகமிக நெருக்கமாக உள்ளன. சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழர் நாகரிகத்துக்குமான தொடர்பும், ஒற்றுமையும் மெய்ப்பிக்க ‘காளைகள்’ அடித்தளம் இட்டுள்ளன. கீழடி காளைகள்தான், சிந்துவெளியிலும் இருக்கிறது. நமது தாய்த்தெய்வ வழிபாடு அங்கும் இருக்கிறது. கீழடி கட்டடக் கலையும் மண்பாண்டங்களும் சிந்து வெளியிலும் இருக்கின்றன. இந்த வரிசையில் ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வுகள், தமிழ்ச் சொற்கள் மூலமாக உள்ள ஒற்றுமையை நிறுவி வருகிறார்.

தமிழாட்சி, தமிழ் இனத்தின் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் அவர்கள், கீழடிப் பெருமையை உலகளாவியதாக மாற்றி வருகிறார். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ‘கீழடி அருங்காட்சியகம்’ தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன் அவர் செய்துள்ள அறிவிப்பு உலகம் முழுக்க பரவி விட்டது.

“செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் குறித்து உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அம்முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையினை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வழி வகையினை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும்”என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இவை அனைத்தையும் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில பாடல் வரிகளை வைத்துக் கொண்டு வேதியர் சிலர் எழுதி வைத்திருந்த கற்பனா வரலாறுகளை கீழடி ஆய்வுகள் அடித்து நொறுக்கி விட்டது. எனவே, கீழடி ஆய்வுகளை முடக்கப் பார்க்கிறார்கள்.

கீழடி அருகில் 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்த ஆய்வுகளைச் செய்தார். இதில் 5,765 பொருட்கள் கிடைத்தன. 2017 ஆம் ஆண்டு இவரை அசாம் மாநிலத்துக்கு மாற்றிவிட்டு, ஸ்ரீராமன் என்பவரை கீழடிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்கள். ஆனாலும் தனது அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன், ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தார். 2600 ஆண்டுகளுக்கு முன் பழமையானவை என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலமாக இவர் மெய்ப்பித்துள்ளார். 982 பக்கங்கள் கொண்டது இந்த அறிக்கை. இதைத் தொடர்ந்து இந்த ஆய்வையே ஒன்றிய அரசு நிறுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு தனது ஆய்வைத் தொடர்ந்தது.

இப்போது திடீரென, அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஆதாரங்கள் தேவை, திருத்தங்கள் தேவை என்று சொல்லி இருக்கிறது. ‘கீழடி அகழாய்வு அறிக்கையில் கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் சந்தேகங்கள் அனைத்துக்குமான விளக்கம் எனது அறிக்கையில் இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். 2017 முதல் இன்று வரை இவரை ஒரு இடத்தில் பணி செய்யவிடாமல் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கீழடி ஆய்வுக்கு முதல் ஆண்டு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு அதன்பிறகு ஒதுக்கவில்லை. ‘தமிழ்’ பெருமை பேசி, காசி சங்கமம் நடத்தும் பா.ஜ.க. அரசால்தான் சங்கறுக்கும் காரியமும் நடக்கிறது.

வேத நாகரிகத்துக்கு முந்தியது தமிழர் பண்பாடு என்று நிறுவப்படக் கூடாது என்பதுதான் அவர்களது எண்ணம். வேத நாகரிகத்தை வென்றது தமிழர் பண்பாடு என்பதும் நிறுவப்படும். இப்போது கீழடியை கிண்டல் செய்து வரும் பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்கள் அப்போது வரலாற்றின் குப்பைத் தொட்டியில் கிடப்பார்கள்.

Also Read: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் திராவிட மாடல்! : முரசொலி புகழாரம்!