murasoli thalayangam
சரஸ்வதி நதி : “தொடர் கதைக்குள் தானாக வந்து வண்டியில் ஏறி இருக்கிறார் ஆளுநர்..” - முரசொலி கிண்டல்!
முரசொலி தலையங்கம்
06.03.2025
ஆளுநரின் சிந்து சமவெளி எரிச்சல்!
சிந்து சமவெளி குறித்து தமிழ்நாடு அரசு பேசத் தொடங்கியதும் ஆர். என். ரவி வகையறாக்களுக்கு இருக்கப் பொறுக்கவில்லை. உடனே வரலாற்றுத் திரிபைத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பங்கெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சிந்துவெளி எழுத்துகளில் 100 ஆண்டுகளாகப் புதைந்திருக்கும் புதிருக்கு விடை கண்டுபிடித்தால் எட்டரை கோடி ரூபாய் பரிசு என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இது ஆரியக் கூட்டத்தின் அடிவயிறைக் கலக்கி வருகிறது.
சிந்து வெளிப்பண்பாடு குறித்த இவர்களது கற்பனைகள், கப்சாக்களுக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடும் என்ற பீதியில் உறைந்து போய்க் கிடக்கிறார்கள்.
உடனே உலக மகா அறிவாளி, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது ஆராய்ச்சி மூளையை இதில் பயன்படுத்தத் தொடங்கி விட்டார். ‘அதை சிந்து சமவெளி என்று சொல்லக் கூடாது, சிந்து சரஸ்வதி நாகரிகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்று திரிக்கத் தொடங்கிவிட்டார்.
இது ஒன்றும் புதிய கருத்தல்ல. என்.சி.இ.ஆர்.டி.யின் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருப்பதைத்தான் ஆர்.என். ரவி சொல்கிறார். வகுப்புவாத வரலாற்றாசிரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகமாக' நிறுவப் பார்க்கும் முயற்சியை எப்போதோ தொடங்கி விட்டார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ‘சரஸ்வதி ஆராய்ச்சி'யைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இதனை ஏற்பது இல்லை. ரொமிலா தாப்பர், Early India - From The Origins to AD 1300 - என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
« கி.மு. இரண்டாம் ஆயிரமாவது ஆண்டுகளில் வறண்டுப் போன ஹக்ரா நதிப்படுகைகளின் மீது குடியிருப்புகள் தோன்றிவிட்டன. ஆற்றின் விசையியங்குதலால் ஆற்றின் போக்கில் மாற்றங்கள் ஏற்கனவே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. இதனுடைய காலம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகள் என்று பொதுவாகக் கூறலாம்.
« கக்கார் நதியை ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றுடன் அடையாளப்படுத்துவது வாதத்திற்குரியது. மேலும் ஆரம்பக் கட்டத்திலேயே சரசுவதி குறிப்பிடப்படுவதால் ஆப்கானிஸ்தானத்திலுள்ள ஹராக்ஸ்வதி என்ற சமவெளியைக் குறிக்கலாம். இவ்வடையாளப் படுத்துதலும் சிக்கல் நிறைந்ததுதான். ஏனெனில் சரசுவதி ஆறு மலைகளினூடே அறுத்துக்கொண்டு ஓடுவதாகக் கூறப்படுகிறது. இது கக்கார் நதியின் நிலப்பரப்பையும் காட்டவில்லை. சரஸ்வதி நதி ரிக்வேதத்தில் ஒளிரும் சொற்களால் வருணிக்கப் பட்டிருந்தாலும் சட்லெஜும் யமுனாவும் ஏற்கனவே தனித்த ஆறுகளாக இருந்தன. அவை கக்கார் நதிக்குள் பாயவில்லை. அது எதைக் காட்டுகிறது என்றால் ஹக்ரா அல்லது கக்கார் நதி வறண்டு மாற்றம் அடைந்த பின்னர் இத்தோத்திரப் பாடல்கள் பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காட்டுகிறது. பழைய ஆறு ஒன்றை வேண்டிக்கொண்டதின் மூலம் அவ்வாறு ஒரு மாயைக்கதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய பெயரான சரஸ்வதி என்பதை எல்லா ஆறுகளுக்கும் பொருத்தலாம். இப்படிப்பட்ட நிலை துணைக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது.
-- என்று ரொமிலா தாப்பர் எழுதி இருக்கிறார். ரிக் வேதம், மகாபாரதம் ஆகியவற்றை வைத்து ரவி வகையறா வரலாறு தயாரித்து, அதை ‘நாசா'வே சொல்லி விட்டது என்று கப்சா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“சிந்துவெளி நாகரிகம் இந்தோ - ஆரிய மக்கள் இலக்கியமான வேதங்கள் பாடப்பட்டதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது. சிந்துவெளி நாகரிகம் இவ்வாரிய இலக்கியங்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கவில்லை. இந்துக்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்று வற்புறுத்துவதானது வேதக் கலாச்சாரத்தை இன்னும் பின்னோக்கிக் கொண்டு சென்று சிந்துவெளி நாகரிகத்தோடு அடையாளப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்குக் காரணமாக இருக்கிறது” என்றும் ரொமிலா தாப்பர் சொல்லி இருக்கிறார்.
இதற்கு மாறாகத்தான் என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தில் மாற்றத்தைச் செய்தது பா.ஐ.க. அரசு. ரிக் வேதம், குமார சம்பவம், மகாபாரதம் என்று ஆளுநர் மேற்கோள் காட்டுவது எல்லாம் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருப்பதுதான், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ளது இந்த கவுன்சில். அதனால் எதையும் எழுதிக் கொள்ளலாம். சரஸ்வதி நதியை மீட்கும் ஆராய்ச்சியை பல ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. நதிதான் கிடைக்கவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இம்முயற்சியை எடுத்தது. 2014-ம் ஆண்டில் நீர்வளத் துறை அமைச்சரான உமா பாரதி சரஸ்வதி நதியை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கான பெரிய திட்டத்தை அரியானா மாநில அரசு 2015 - ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்தார். இப்படிப் பேசும் தொடர் கதைக்குள் தானாக வந்து வண்டியில் ஏறி இருக்கிறார் ஆளுநர்.
சிந்து சமவெளி எழுத்துருக்களின் ஆய்வுகள் இவர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது. இரும்பின் காலம் குறித்த அறிவிப்பும் ஆய்வும் எரிச்சலடைய வைத்திருக்கிறது. 'காலச்சுவடு' இதழில் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர், அடி வயிறு எரிய இரும்பின் காலத் தொன்மையை நிராகரித்து எழுதி இருக்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் எல்லாம் வரலாற்றாசிரியர்கள் வேடம் தரித்து வரும் போது ஆளுநர் ரவியும் அதே வேடம் போட மாட்டாரா என்ன?
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!