murasoli thalayangam

இதிலும் பாஜக ஆளும் மாநிலங்களே மோசம் : ஆளுநர் ரவியின் பொய்களை அம்பலப்படுத்திய முரசொலி !

முரசொலி தலையங்கம் (30-01-2025)

பா.ஜ.க. ஆட்சியை பார்க்கவும் !

கிண்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திடீரென்று தலித் பாசம் பொங்கி வழிகிறது. அப்படிக் காட்டிக் கொள்வதற்காக தி.மு.க. அரசு மீது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீது அதிகமான கொடுமைகள் நடப்பதாக அவதூறு செய்து கொண்டிருக்கிறார். அவதூறுதான் அவரது மூச்சு, பேச்சு, எல்லாம்!

அய்யா ஆளுநர் அவர்களே! இதைச் சொல்வதற்கு நீங்கள் போக வேண்டிய இடம் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள்தான்!

தேசிய குற்றப் புலனாய்வு நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் தரவுகளின்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களே முன்னணி வகிக்கின்றன. 23.9.2024 அன்று 'தினமணி' நாளிதழ் 10 ஆவது பக்கத்தில், 'பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் - 13 மாநிலங்களில் மட்டும் 97 விழுக்காடு வழக்குகள் பதிவு' - என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையை மையமாக வைத்து இந்த செய்திக் கட்டுரை வெளியானது.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக ஒன்றிய அரசின் அறிக்கை சொல்கிறது. மூன்று மாநிலத்தையும் ஆள்வது பாரதிய ஜனதா கட்சி தான். இந்தப் பட்டியலில் அடுத்த மூன்று மாநிலங்கள் எது தெரியுமா? பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகார், நான்காவது இடத்தில் இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் ஒடிசா, ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா, ஆறாவது இடத்தில் இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு பதிவான வன்கொடுமை வழக்குகள் 51, 656.

இதில்,

•உ.பி - 12,287

•ராஜஸ்தான் - 3,651

•மத்தியப்பிரதேசம் - 7,732

•பீகார் - 6,799

•ஒடிசா - 3,576

• மகாராஷ்டிரா - 2,706 - என்கிறது அந்த அறிக்கை.

இந்தியா முழுவதும் பதிவான வழக்குகளில் 31 விழுக்காடு வழக்குகள் இந்த ஆறு மாநிலங்களில் பதிவாகி உள்ளன. உ.பி.யில் பதிவானது மட்டும் 23.73 விழுக்காடு ஆகும்.

பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளில் முதலிடத்தை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம் தான் பிடித்துள்ளது. ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

*2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் ஒரு தலித் பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அவரது தந்தை காவல்துறையை அணுகி இருக்கிறார். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறை மறுத்திருக்கிறது. மன அழுத்தம் தாங்காமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

•ராஜஸ்தானில் உள்ள சுற்றுலா தலத்தில் படப்பதிவு செய்து கொண்டிருந்த ஒரு தலித் இளைஞர் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை முட்டிப் போட வைத்து, அவர் மீது சிறுநீர் கழித்திருக்கின்றனர்.

•மத்தியப் பிரதேசத்தில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டு, ஊரை விட்டு விரட்டப்பட்டார்.

*கடந்த 2023ஆம் ஆண்டில், தலித்துகள் மீதான வன்கொடுமை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய அரசு, 2018 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு வருடங்களில் 1.9 லட்சம் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அளித்தது.

தேசிய குற்ற ஆவண நிறுவனத் தரவுகளின்படி இச்சம்பவங்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 49,613 வன்கொடுமைகள் தலித்துகள் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள் மீதான வன்முறைகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளில் 12,287 பதிவு செய்யப்பட்ட சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டு 13,146 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 15,363 ஆக உயர்ந்திருக்கிறது. 16% அதிகம். இத்தகைய சம்பவங்களில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?

பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 69,597 ஆகவும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 12,417 ஆகவும் மொத்தத்தில் பதிவான நிலையில்,49,852 சம்பவங்களில்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டின் முடிவில் 17,166 பட்டியல் சாதியினர் மீதான குற்றச்சம்பவ வழக்குகளும் 2,702 பட்டியல் பழங்குடியினர் மீதான குற்றச்சம்பவ வழக்குகளும் காவல்துறையால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் நிலைமை என்ன தெரியுமா? தலித்துகள், தலித் பெண்கள் மீது அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 9,214 என பதிவாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டு பதிவான 1,010 வழக்குகளில் 10 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளது. 2016 ஆண்டில் பதிவான 1,322 வழக்குகளில் 22 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளது. இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நிலைமை ஆகும்.

ஆர். என்.ரவி தனது அக்கறையை அங்கே போய் காட்டவும்.

Also Read: பிரதம மந்திரியின் பெருந்திட்டத்திற்கு ரூ.108.71 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!