murasoli thalayangam

“கற்பனைக் கதைகள் இல்லாத பொங்கல் விழாவில், ஒரு இனத்தின் பண்பாடு இருக்கிறது” - முரசொலி !

தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைக்கும் பொங்கல் திருநாள் இது! அதனால்தான் இதனை 'தமிழர் திருநாள்' என்கிறோம்!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை - என்றார் வள்ளுவர். உழைப்பை வாழ்க்கையாகக் கொண்ட மனிதன், தன் உழைப்பின் கீழ் பெறும் பயனைக் கொண்டாடினான் அதுதான் பொங்கல் நாள். சிலப்பதிகாரம், புறநானூறு தொடங்கி அனைத்து இலக்கியங்களிலும் பொங்கல் பொங்குகிறது.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - என்று நற்றிணையும் –

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும் –

"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – என்று கலித்தொகையும் சொல்கிறது. இத்தகைய பண்பாட்டின் தொடர்ச்சி பொங்கல் திருநாளுக்கு உண்டு.

பொங்கல் நாளை மகிழ்ச்சியுடன் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு விளக்கம் அளித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கவிதை தீட்டினார்கள். அதில் உள்ள சில வரிகள் அருமையாக விளக்கம் அளிக்கும். ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு அண்ணாவின் கவிதைப் பதில் இது.

"உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு

உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே

விழைவு மிகக் கொண்டோம் அதனால்!

காய்கதிச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?

உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.

உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் அதனால்.

ஆவினம் போற்றினொம். அஃது எதனால்?

பரிந்து தீஞ்சுவைப் பால் அளிப்பதனால்!

எனவே இவ்விழா நன்றி கூறிடும் நல்விழாவாகும்" – என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.

"ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா. உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும், சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இப்போது அறுவடை விழா என்றும் உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா என்றும் - திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம். எல்லாப் பண்டிகை களும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு வருவது கண்டு பேராசிரியர்கள் பலரும், சிந்தனையாளர்களும் சீர்திருத்தச் செம்மல்களும் தமிழருக்கே உரித்தானதும் தனிச்சிறப்பளிப்பளிப்பதுமான இப்பொங்கல் புதுநாள் மாண்பினை மக்கள் அறிந்திடச் செய்துள்ளனர்'' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள்.

'கற்பனைக் கதைகள் இல்லாத விழா பொங்கல் விழா' என்று சொன்னார் தந்தை பெரியார். பொங்கல் விழாவில் கற்பனைகள் இல்லை. உழைப்பு இருக்கிறது. மண்ணும் மக்களும் இருக்கிறார்கள். வியர்வையும் ரத்தமும் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு இனத்தின் பண்பாடு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. மலர்ச்சி இருக்கிறது.

ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இருந்தாலும் ஆட்சியின் மாட்சியும் வளர்ச்சியும் அதனுள் சேரும் போது மகிழ்ச்சி அதிகரிக்கவே செய்யும். அந்த வகையில் பார்த்தால் சில ஆண்டுகளாக மக்கள் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியோடு இத்திருநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

இதனைத் தான், "இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!" என்று சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு திட்டமும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன. "ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது, அது விடியல் ஆட்சியாக அமையும் என்றோம். நான் செல்லுமிடமெல்லாம் கூடும் மக்களின் முகங்களில் காணும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம். மாதம் தோறும் ஒரு கோடியே 17 லட்சம் மகளிர் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையைப் பெறுகிறார்கள். அக்கவுண்டில் அவர்கள் கணக்கில் ஆயிரம் ரூபாய் போய்விழும் போது அவர்களது முகத்தைப் பாருங்கள் அதில் தெரியும் இதான் விடியல் ஆட்சி என்று! தாய் வீட்டுச் சீரைப் போல் - எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திரச் சீர் என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் வாய் மணக்கச் சொல்கிறார்கள். அதுதான் விடியல் ஆட்சிக்கான ஆதாரம்" என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் பல்லாயிரம் - பல லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்ணினம் முழுவதும் - புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாணவியரும் - தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களும் - நான் முதல்வன் திட்டம் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களும் - காலை உணவுத் திட்டம் மூலமாக பள்ளி மாணவ மாணவியரும் - சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்களும் - தொகுப்புதவிகள் மூலமாக வேளாண் மக்களும் - பல்வேறு சலுகைகள் மூலமாக ஊழியர்களும் பணியாளர்களும் பயனடைந்து வருகிறார்கள். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம். ஒவ்வொரு திட்டமும் பலதரப்பட்ட மக்களையும் மகிழ்வித்து வருகிறது. அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கரும்பாக இனிக்கிறது.

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேல் போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத்தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. நவீனத் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக - முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன்." என்ற உறுதிமொழி கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பால் வார்த்துள்ளது. மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குவதால், பானைகளில் பொங்கல் பொங்குகிறது. 'வளர்ச்சியே மகிழ்ச்சியாகி பொங்குகிறது. பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்' என்று முரசொலித்துச் சொல்வோம்!

Also Read: ’பொல்லாத சார்’ ஆட்சியில் நடந்தது இதுதான் : பழனிசாமியின் பொய்-க்கு முரசொலி பதிலடி!