murasoli thalayangam
’பொல்லாத சார்’ ஆட்சியில் நடந்தது இதுதான் : பழனிசாமியின் பொய்-க்கு முரசொலி பதிலடி!
முரசொலி தலையங்கம் (13-01-2025)
’பொல்லாத சார்’
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மாபெரும் களங்கம் என்பது பொள்ளாச்சி சம்பவம் ஆகும். அந்த விவகாரத்தை அப்போதும் மறைத்தார் பழனிசாமி. இப்போதும் மறைக்கப் பார்க்கிறார் பழனிசாமி.
புகார் கொடுக்கப்பட்டு 12 நாட்களுக்குப் பிறகுதான் நீங்கள் நடவடிக்கையைத் தொடங்கினீர்கள் என்று முதலமைச்சர், பழனிசாமியைப் பார்த்து குற்றம் சாட்டினார். இல்லை, 24 ஆம் தேதி புகார் கொடுத்தார்கள். 25 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்று பழனிசாமி பொய் சொன்னார். நான் அந்த ஆதாரங்களை நாளை பேரவைத் தலைவரிடம் கொடுக்கிறேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதன்படி மறுநாளே அதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அளித்த ஆதாரம்தான் உண்மையானது என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
2019-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. பிப்ரவரி 12-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 19-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் தருகிறார். அவர் அதனை டி.எஸ்.பி.யை பார்த்து கொடுங்கள் என்று சொல்கிறார். இவர்களை 22-ம் தேதிதான் டி.எஸ்.பி. பார்க்கிறார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று சொல்கிறார் அவர். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் 24-ம் தேதிதான் புகாரை வாங்குகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கையெழுத்து வாங்கி 26 ஆம் தேதிதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இதுதான் உண்மை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை அமைதியாக உள்வாங்கவில்லை அ.தி.மு.க. இதுவும் ஒரு நாடகம் ஆகும். என்னுடைய அறைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள் என்று பேரவைத் தலைவர் அப்பாவு சொன்னார். பேரவைத் தலைவர் அறைக்குச் சென்று, இத்தோடு இப்பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, எதற்காக பேரவைக்குள் வந்து பிரச்சினை செய்ய வேண்டும்? அறைக்குள் ஒரு பேச்சு, பேரவைக்குள் ஒரு பேச்சு ஏன் பேச வேண்டும்?.
"பொல்லாத சார்" ஆன பழனிசாமி, பேரவைக்கு வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். பேரவைத் தலைவர் அப்பாவு தீர்ப்பு அளித்தபிறகு, பொதுவெளியில் பேட்டி அளித்த பழனிசாமி, பொள்ளாச்சி வழக்கை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் தான் வழக்குப் பதிவு செய்ய முடியும். யாரைக் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்களைத்தான் கைது செய்ய முடியும் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அப்படியானால் போலீஸ் எதற்கு? பழனிசாமி கையில் அதிகாரம் தரப்பட்டதா?.
பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் தராவிட்டால், குற்றம் என்பது நடந்தால் பழனிசாமி நடவடிக்கை எடுக்க மாட்டாரா? பாதிக்கப்பட்டவர், சொன்னவரைத் தாண்டி ஒரு குற்றச்சம்பவத்தில் வேறு யாராவது இருந்தால் பழனிசாமி நடவடிக்கை எடுக்க மாட்டாரா? உள்துறையை எந்த லட்சணத்தில் கவனித்தார் பழனிசாமி?.
பொள்ளாச்சி சம்பவம் என்பது இரண்டு மூன்று ஆண்டுகளாக ஒரு கும்பல் தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றங்களைச் செய்துள்ளது. பெண்களைக் கடத்திச் சென்று படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பழனிசாமியின் ஆட்சி இதை வேடிக்கை பார்த்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் வந்து புகார் கொடுக்கிறார். அதனையும் வழக்குப் பதியாமல் வைத்துள்ளார்கள். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் வாங்காததால் உயர் அதிகாரியைச் சந்தித்து கொடுக்கிறார்கள். அவர், தனக்கு கீழ் உள்ள அதிகாரியை பார்க்கச் சொல்கிறார். அவரைச் சந்தித்ததும், அவர் தனக்கு கீழ் உள்ள இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சொல்கிறார். இதற்கு மத்தியில் அன்றைய அ.தி.மு.க. அமைச்சரைப் போய் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பார்க்கிறார்கள். அவர் உள்ளூர் காவல் துறைக்குச் சொன்னபிறகுதான் புகாரை வாங்குகிறார்கள். அதற்கு இரண்டு நாள் கழித்துதான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
வழக்குப் பதிவு செய்த பிறகாவது அ.தி.மு.க. ஆட்சி என்ன செய்தது? யார் புகார் கொடுத்தார்களோ அவர்களை ஒரு கும்பல் தாக்கியது. அடித்து உதைத்தது. "பொல்லாத சார்" பழனிசாமி ஆட்சியில் தான் இது நடந்தது.
பிப்ரவரி 26-ம் தேதி செந்தில், பாபு, மணி, ராஜகோபால் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவைக் கைது செய்யவில்லை. ஏனென்றால் இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களைத் தாக்கிய பார் நாகராஜனை அ.தி.மு.க. ஆட்சி கைது செய்யவில்லை. ஏனென்றால் இந்த பார் நாகராஜன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். அன்றைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். மார்ச் 5–ஆம் தேதிதான் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருநாவுக்கரசை காவல்துறை கைது செய்தது. மார்ச் 10–ஆம் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். மார்ச் 12–ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மார்ச் 13–ஆம் தேதி பொள்ளாச்சி சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
2019–ஆம் ஆண்டு நவம்பர் 3–ஆம் தேதி குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஹரோன் பால், பாபு ஆகிய இருவரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல், அ.தி.மு.க. ஆட்சி காப்பாற்றியது. 2020 ஜனவரி 11–ஆம் தேதி பால் என்பவரை காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. 2020 பிப்ரவரி 19–ஆம் தேதி அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா என்பவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் அ.தி.மு.க. சேர்மன் ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக 2020 பிப்ரவரி 19–ஆம் தேதி அன்று அருளானந்தம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
2019 பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சி.பி.ஐ. வந்துதான் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்தது. இந்த பொல்லாத சாரான பழனிசாமி, பொல்லாதவர்கள் பலரையும் காப்பாற்றும் வேலையை மட்டும் தான் பார்த்துக் கொண்டு இருந்தார். அதுதான் உண்மை .
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!