murasoli thalayangam

தமிழ்நாடு வளர்வதை ஆளுநர் ரவி விரும்பவில்லை - உரையை வாசிக்க மனமில்லை : முரசொலி தலையங்கம்!

தமிழ்நாடு வளர்வதை ஆளுநர் ரவி விரும்பவில்லை. அதனால் தான் தனது உரையை வாசிக்க மனமில்லை. தேசிய கீதம் பாடப்படவில்லை என்று சொல்லிக் கொண்டு முறுக்கிக் கொள்வது எல்லாம் அவராகச் சொல்லிக் கொள்ளும் காரணங்கள் ஆகும்.

ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்ற வேண்டிய உரையை, தமிழ்நாடு அரசுதான் தயாரித்து அனுப்பும். அதனை அப்படியே வாசிக்க வேண்டியதுதான் ஆளுநரின் பொறுப்பு. தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட உரையானது, தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் வளர்ந்திருக்கிறது, வளர்ந்து சிறந்திருக்கிறது என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியையும் மலர்ச்சியையும் தமிழ்நாடு அடைந்துள்ளது. எப்படியெல்லாம் தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்பது அந்த உரையில் இடம் பெற்றுள்ளது.

1. தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.

2.தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

3. பொருளாதாரக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

4. மருத்துவம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

5. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.

6. கட்டணமில்லாத மகளிர் விடியல் பயணமானது, மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்துள்ளது.

7. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளிக் குழந்தைகளின் பள்ளி வருகையை அதிகரித்துள்ளது. அவர்களது கவனிக்கும் திறனை மேம்படுத்தி உள்ளது.

8.புதுமைப் பெண் திட்டத்தால் மாணவியரின் உயர்கல்விச் சேர்க்கை அதிகரித்துள்ளது.

9. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி வழங்குவதால் இந்தியாவின் திறன்மிக்க இளைஞர்களின் தலைநகரமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற 2.58 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை உடனே பெற்றுள்ளார்கள்.

10. இந்தியாவில் வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழ்நாடு வளர்ந்துவிட்டது.

11. ஆண்டுதோறும் 15 லட்சம் பேர் உயர்சிகிச்சை பெற தமிழ்நாடு வரும் அளவுக்கு மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது.

12. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருதைப் பெற்றுள்ளது.

13. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 விழுக்காட்டை விட மிகமிகக் குறைவு ஆகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர்திட்டத்தை அரசு தொடங்க உள்ளது.

14. அமைதியான மாநிலமாக இருப்பதால் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய நாட்டின் மொத்தப் பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

15. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி தமிழ்நாடு வளர்வதை 'நெகடிவ்' ரத்தம் ஓடும் ஆர்.என்.ரவி எப்படி வாசிப்பார்? தமிழ்நாடு எந்த வகையில் மேம்பட்டுள்ளது என்பதைப் போலவே, ஒன்றிய அரசின் புறக்கணிப்பும் இந்த உரையில் இருக்கிறது.

கல்வித் துறையில் மாநிலத்தின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பைத் தருவது இல்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று சொல்லி ஒன்றிய அரசு இந்த ஆண்டு எந்த நிதியையும் விடுவிக்கவில்லை. 2,152 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது.

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நெருக்கடியைச் சந்திக்கிறது. கல்விக் கட்டணத்தையும் முறையாக திருப்பிச் செலுத்த முடியவில்லை. 44 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள், 21 ஆயிரம் பணியாளர்களின் எதிர்காலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

தேசிய பேரிடர் நிதியைத் தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. 6,675 கோடி ரூபாயை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் இருக்கிறது. தமிழ்நாடு எப்படி வளர்ந்துள்ளது என்பதை மட்டுமல்ல, வளரும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சிக்கிறது என்றும் இருக்கிறது. இந்த உரையை அவரால் எப்படி வாசிக்க முடியும்?

பொதுவெளியில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரைப் போல பரப்புரை செய்து வருபவர் ஆளுநர் ரவி. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இங்கு வந்து உட்கார்ந்திருக்கும் அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிறுதுளி உதவி இருக்கிறாரா என்றால் இல்லை. நம்முடைய கோரிக்கைகளை ஒன்றிய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று வாங்கித் தருவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். அல்லது தடையாக இல்லாமலாவது இருக்க வேண்டும்.

உதவி செய்ய மாட்டேன், உபத்திரம் தான் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்து விட்டு வந்தவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவுச் சிந்தனை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய சொற்கள் எல்லாம் அந்த உரையில் இருக்கிறது. இவை அனைத்தும் அவருக்கு கசக்குமே? ஆரிய விஷமுறிவுச் சொற்கள் அல்லவா இவை?

Also Read: HMPV மீதான கவன ஈர்ப்பு தீர்மானம் : “இது வீரியம் மிக்க வைரஸ் அல்ல” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!