murasoli thalayangam

”மன்னிப்புக் கேட்கவே 20 மாதங்கள் - கூச்சமே இல்லாமல் பேட்டி தரும் பா.ஜ.க முதல்வர்” : முரசொலி!

முரசொலி தலையங்கம் (03-01-2025)

மன்னிப்புக் கேட்கவே 20 மாதங்கள்

2023ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கியது மணிப்பூர் மாநிலம். 20 மாதங்கள் கழித்து அதற்கு மன்னிப்புக் கேட்டு இருக்கிறார் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங். இன்னமும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது மணிப்பூர். அனைத்துக்கும் பொறுப்பேற்று பதவி விலகி இருக்க வேண்டியவர் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங். இப்போது மன்னிப்பு நாடகத்தை நடத்தி இருக்கிறார்.

பிரேன் சிங் அளித்துள்ள பட்டியலே பதற வைக்கிறது.

2023 மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மணிப்பூர் நிலத்தில் 408 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.

2024 மே மாதம் முதல் டிசம்பர் வரை 112 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.

காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

2,511 வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வன்முறை தொடர்பாக இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12,047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

– என்று சொல்லி இருக்கிறார் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங். இதைச் சொல்வதற்கு அவருக்கு கூச்சமே இல்லை. முகத்தில் கூச்சமே இல்லாமல் அவரால் எப்படி பேட்டி தர முடிந்தது என்றே தெரியவில்லை.

அவர் பேட்டி கொடுத்த அன்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சரகம் ஒரு ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டறிக்கையில், “கடந்த 2023 ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற மொத்த வன்முறைச் சம்பவங்களில் 77 விழுக்காடு மணிப்பூரில் நடைபெற்றுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 184 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், 80 கிளர்ச்சியாளர்கள் சரண் அடைந்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

“மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைத்துச் சமூகத்தினரும் ஒருவரையொருவர் மன்னித்து கடந்த காலத் தவறுகளை மறக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங். கடந்த காலத் தவறுகளை இரண்டு சமூகத்தவரும் மறக்க வேண்டும் என்று சொல்கிறாரா, நடந்த சம்பவங்களை மக்கள் மறந்து விட வேண்டும் என்று நினைக்கிறாரா?

எவ்வளவு பேர் இந்த 20 மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்பதை பிரேன் சிங் சொல்ல வில்லை. அவரால் சொல்ல முடியவில்லை. 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

குக்கி – மைத்ரி இன மக்களின் மோதலாக இது தொடங்கியது. அந்த இரண்டு மக்களுமே ஆளும் பா.ஜ.க. அரசை நம்பவில்லை. நம்பத் தயாராக இல்லை. மோதல் தொடங்குவதற்கு இரண்டு இன மக்களுக்கு இடையிலான புரிதலின்மையாக இருக்கலாம். ஆனால் மோதல் தொடர்வதற்கு – இன்னும் இன்னும் நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம் பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையே ஆகும். யாரையும் அவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை.

மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசால்தான் இது முடியவில்லை என்பதல்ல. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் முடியவில்லை. முதலமைச்சர் பிரேன் சிங்கால் அமைதிக்கு வழிவகுக்க முடியவில்லை என்றால் அந்தப் பொறுப்பை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்திருக்க முடியாதா? அவர் செய்ய வேண்டாமா? ஒரு மாநிலம் 20 மாதங்களாக எரிகிறது. இந்தத் தலையங்கம் தீட்டப்படும் நாளுக்கு முந்தைய நாள் கூட எரிகிறது.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைபோல் கிராமத்தில் குகி – ஜோ சமூகத்தினரின் பதுங்குமிடங்களை பாதுகாப்புப் படையினர் ஆக்கிரமித்து விட்டதாகச் சண்டை ஏற்பட்டது. இதற்கு எதிராக ஏராளமான பெண்கள் இணைந்து போராடி இருக்கிறார்கள். இவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி இருக்கிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இதில் பல பெண்கள் காயம் அடைந்துள்ளனர். ‘போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் ஆடைகளைக் கிழித்து பாதுகாப்புப் படையினர் இழிவுபடுத்தினர்’ என்று மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

விஷ்ணுபுர் மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினருக்கும் பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்படி 20 மாதங்களாக இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது மணிப்பூர் வன்முறை.

“அந்த இரண்டு பெண்களை ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரட்டி வந்தார்கள். அந்தப் பெண்கள் இருவரும் தப்பித்து காட்டுக்குள் ஓடினார்கள். சாலையோரத்தில் ஒரு காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அந்த வாகனத்தில் ஓட்டுநர் இருந்தார். காவல் துறை அதிகாரிகள் இருவர் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். நான்கைந்து காவலர்கள் அந்த வாகனத்துக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார்கள்.

அந்த இரண்டு பெண்களோடு, ஆண் ஒருவரும் ஓடி வந்தார். தங்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போய்விடுங்கள் என்று அந்த ஆண், காவலர்களிடம் கெஞ்சினார். ஆனால் காவலர்கள், ‘இந்த வாகனத்தில் சாவி இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். அந்தப் பெண்களைக் காப்பாற்ற காவலர்கள் மறுத்துவிட்டனர்.

அதற்குள் கலவரக்காரர்கள் அந்த வாகனத்தைச் சூழ்ந்து விட்டார்கள். உடனடியாக காவலர்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள். வாகனத்துக்குள் இருந்த இரண்டு பெண்களையும் கலவரக்காரர்கள் வெளியில் இழுத்து வந்தார்கள். நிர்வாணப்படுத்தினார்கள். ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். பாலியல் வன்கொடுமை செய்தார்கள்” – என்கிறது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை. இந்தச் சம்பவம் 2023 மே மாதம் நடந்தது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் 20 மாதங்கள் கொடூரம் தொடர்ந்திருக்குமா?

“இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது” என்று எகத்தாளமாக அப்போது பேட்டி அளித்தார் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங். இப்போது மன்னிப்பு என்று பதுங்குகிறார். இவ்வளவுக்குப் பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூட தயங்குகிறது பா.ஜ.க. தலைமை. பிரதமர் பதவியில் இருப்பவர் 20 மாதத்தில் ஒரு முறை கூட மணிப்பூர் செல்லவில்லை.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Also Read: தேர்தல் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு : “தவறு செய்யவில்லை என்றால் தருவதில் என்ன தயக்கம்?” -முரசொலி கறார்!